2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்து, தமிழ் திரையுலகினர் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த ஸ்டிரைக், முடிவுக்கு வந்துள்ளது. நேற்று நடந்த, முத்தரப்பு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எடுக்கப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல், போராட்டம் நடத்தி வந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தப் போராட்டத்தில், தமிழ் திரையுலகம் இணைந்தது. அதனால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. திரைப்படம் தொடர்பான டப்பிங், எடிட்டிங் என எந்த பணியும் நடக்காமல் இருந்தது.

இதற்கிடையில், கேளிக்கை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் தமிழில் புதுப்படங்கள் வெளியாகாததால், தியேட்டர்களில் பிறமொழி படங்களும், பழைய தமிழ் படங்களுமே வெளியிடப்பட்டன.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்டிரைக் வாபஸ் பெறுவதாக, ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய திரைப்படங்களை, நாளை (20) முதல் ரிலீஸ் செய்யவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். படத்தின் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், பட விழாக்கள் ஆகியவையும், நாளை முதல் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது. வாராவாரம் மூன்று படங்கள் என்கிற அளவில் வரிசையாகப் படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .