’கட்டுப்பாட்டை மீறுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்’

"ரஜினி மக்கள் மன்றத் தலைமையின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர்பெற்ற ரசிகர்கள், கட்டுப்பாட்டை மீறி செயற்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்" என ரஜினிகாந்த் அறிவுறுத்தியிருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.தம்புராஜ், கடந்த 22ஆம் திகதி தற்காலிகமாக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 150 பேர் ஒட்டுமொத்தமாக தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ரஜினி மக்கள் மன்றத்துக்கு, உரிய முறையில் நேர்காணல் நடத்தி, நேர்மையான, வெளிப்படையான முறையில்தான் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். யாருக்கும் அவர்களது நிதிநிலை அடிப்படையில் பொறுப்பு வழங்கப்படுவது இல்லை.

அதன்படி, ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த உறுப்பினர் என்பதால் எஸ்.எம்.தம்புராஜுக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு, பொறுப்பு வழங்கப்பட்ட அனைவரையும் அழைக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை அறிந்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக செயற்படுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகும், சில நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, மற்ற நிர்வாகிகளைக் கொண்டு கூட்டம் நடத்தி, மன்றக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாக செயற்பட்டார். இதன் காரணமாகவே, ரஜினியின் அறிவுறுத்தல்படி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தம்புராஜ் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாகவும், கட்டுப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என்று தலைவர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். தலைமையின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர்பெற்ற ரசிகர்கள், கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


’கட்டுப்பாட்டை மீறுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.