2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Conductor to Super Star

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டக்டராக இருந்து, இயக்குநர் பாலச்சந்தரால் கண்டெடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த், இப்போது தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.  

இந்த வெற்றி, ஓர் இரவில் கிடைத்ததல்ல. நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம், தனது திறமையை வெளிக்காட்டக் கிடைத்த சந்தர்ப்பங்களாகக் கருதி, தன் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்ட ரஜினிகாந்த் வென்ற சினிமா சரித்திரம் இது.

ஒரு புள்ளியில் தொடங்கிய ரஜினிகாந்தின் சினிமாப் பயணம், இப்போது உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் தகுதியான அந்த மனிதர், எளிமையின் இன்னொரு வடிவம்.

ரஜினி இளம் வயது
மராத்திக் குடும்பத்தில் பிறந்த ரஜினி, பெங்களூரில் பள்ளிப் படிப்புப் படித்தவர். படிப்பைமுடித்ததும், பஸ் கண்டக்டராகவும் சில மேடை நாடகங்களில் நடிகராகவும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தவர், இப்போதிருக்கும் உயரத்தை, அப்போது நிச்சயமாக நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், சென்னைக்கு வண்டி ஏறிய ரஜினி, தனது நண்பரின் துணையோடு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.

பாலச்சந்தர் கண்டெடுத்த முத்து
பாலச்சந்தரின் கண்ணில் பட்டதையடுத்து, அவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில், சிகரெட்டை தூக்கிப் போட்டு வாய்க்குக் கொண்டுவரும் ஸ்டைலை அறிமுகப்படுத்தி, அன்றைய இளைஞர்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்றார். பின்னர், 1976இல் பாலச்சந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ திரைப்படம், ரஜினியை நல்ல நடிகராக அறியவைத்தது.

ரஜினி ஸ்டைல்
ரஜினி என்றாலே ஸ்டைல் எனும் நிலை உருவாகும் அளவுக்கு, பல திரைப்படங்களில் தனித்துவமான ஸ்டைல்களைக் காண்பித்து, மக்களைக் கவர்ந்தார். ‘16 வயதினிலே’ திரைப்படத்தில், “பரட்டை” எனும் வில்லன் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தத் திரைப்படத்தில் அமைந்த ரஜினியின் ‘இது எப்டி இருக்கு’ என்ற வசனம், இத்தனை ஆண்டுகள் கழித்தும், நினைவு கூரப்படுவதே அவரது நடிப்புக்கான வெற்றி என்று கூறலாம். நடிப்பின் மீதான அவரது அபிமானமே, அவரை மாபெரும் நடிகராக வளர்த்தெடுத்துள்ளது.

நாயகனாக ரஜினி
1977ஆம் ஆண்டில், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படத்தின் மூலம், நாயகனாக ரஜினி அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றி, அவருக்கு ஏறுமுகத்தைத் தொடக்கி வைத்தது. அதைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகிய திரைப்படங்களில் நடித்து, பெரிய வெற்றியைப் பெற்றார். ‘பில்லா’, ‘போக்கிரி ராஜா’, ‘முரட்டுக்காளை’ ஆகிய திரைப்படங்களில், அக்‌ஷன் அவதாரம் எடுத்து, செம கலக்கு கலக்கியிருப்பார்.

சினிமாவின் மைல்கல்
‘மீசை இருந்தா சந்திரன்’ மீசை இல்லாட்டி இந்திரன்’ என வெரைட்டி விருந்து படைத்த ‘தில்லுமுல்லு’ திரைப்படத்தில், கொமெடி ஹீரோவாக ரசிகர்களை அவர் மகிழ்வித்தார். ‘தர்மத்தின் தலைவன்’, ‘மூன்று முகம்’ ஆகிய திரைப்படங்களும், அவரது திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன. 1985ஆம் ஆண்டில் தனது நூறாவது திரைப்படமான ‘ராகவேந்திரா’வில் நடித்து, புதிய மைல்கல்லைக் கடந்தார்.

‘வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’
‘மாவீரன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல திரைப்படங்கள், மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்து, அவரை உச்ச நட்சத்திரமாக நிலை நாட்டின. தொண்ணூறுகளில் வெளிவந்த ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’ ‘பாட்ஷா’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’ ஆகிய திரைப்படங்கள் வெறித்தன ஹிட் அடித்து, தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தைப் பெற்றுத்தந்தன.

ரஜினி பெயரை டைட்டில் கார்டில் போட்டால், தியேட்டரே தெறிக்கும் அளவுக்கு விசில் பறந்தது. “எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.” என்கிற வசனம், அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.

உலகம் முழுதும் ரசிகர்கள்
1995ஆம் ஆண்டு வெளிவந்த ‘முத்து’ திரைப்படம், தமிழில் பெரும் வெற்றி பெற்றதோடு, ஜப்பான் மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் எனும் சிறப்பு பெற்ற ‘முத்து’, அங்கும் ஹிட்டாகி, ரஜினிக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவை உரக்கச் சொல்லியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பாபா’ திரைப்படம், ரசிகர்களை ஏமாற்றியது. ஆனாலும், அதில் அவர் பேசிய ‘நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என்கிற வசனம், ரசிகர்களுக்கான அவரது அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.

உச்ச நட்சத்திரம்
பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம், பல திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவாஜி’ திரைப்படமும், ‘எந்திரன்’ திரைப்படமும், உலகம் முழுதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தன. ‘கபாலி’ திரைப்படத்தில் மிரட்டலாக நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். என்றைக்கும் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ரஜினி, இப்போது எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.ஓ’ திரைப்படத்திலும் ‘காலா’ திரைப்படத்திலும் நடித்துவிட்டு, ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

தலைவன்
ஆனால், அவரது அரசியல் என்ட்ரிக்காக அவரது பெரும் ரசிகர் படையே காத்திருக்கிறது. ‘வருவது வரட்டும்; நீ வா தலைவா’ என, அவரது இலட்சக்கணக்கான ரசிகர்கள், உணர்ச்சி பொங்க கோஷமெழுப்பி வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களையும் சந்தித்து வருகிறார் ரஜினி. அவர்கள் அத்தனை பேரின் கோரிக்கையும் ‘தலைவன்’ எனும் ஒற்றைக் குரலாகத்தான் ஒலிக்கிறது.

ரஜினியின் அந்த அறிவிப்பு
விருதுகளால் இனி ரஜினிக்குப் பெருமை இல்லை; ரஜினியால் விருதுகள் பெருமைகொள்ளும் காலமும் வந்துவிட்டது. இத்தனை வருடங்களாக மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக வாழ்ந்தவர், மக்களின் தலைவனாக உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு, ரசிகர் மன்றத்தினர் காத்திருக்கிறார்கள்.. ரஜினிகாந்த் அந்த அறிவிப்பு தான், ரசிகர்களின் நம்பிக்கையில் ஒளியேற்றியிருக்கிறது.

போருக்கு வா தலைவா!
“விட்டகுறை தொட்டகுறை உனக்காக காத்திருக்கோம்.. ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா தமிழ்நாடே தூள் பறக்கும்! ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம்... களத்துக்கு வா தலைவா! கொண்டு வந்ததெதுவுமில்ல... கொண்டுபோக எதுவும் இல்ல... தலைவா தலைவா... நீ போருக்கு வா..!” என, தலைவரின் தளபதிகள் முழங்குகிறார்கள். அவர் சொன்ன போர் முரசு, அவர் வார்த்தைகளில் இருந்து வெளிவந்ததையடுத்து, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஆன்மிக அரசியல்
“பதவி ஆசை இருந்திருந்தா, 1996இலேயே தேடி வந்த நாற்காலியை வேண்டாம் எனச் சொல்லியிருக்க மாட்டேன். 45 வயதிலேயே, எனக்கு பதவி ஆசை இல்லை; 68 வயதில் வருமா? வந்தா, பைத்தியக்காரன் என்றல்லவா சொல்வர்! அரசியல் ரொம்ப கெட்டு விட்டது; ஜனநாயகம் சீர்கெட்டு போய்விட்டது. ஓராண்டில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள், தமிழக மக்களை தலைகுனிய வைத்து விட்டன. மற்ற மாநில மக்கள், நம்மை பார்த்து சிரிக்கின்றனர்.

இந்த நேரத்தில், நான், இந்த முடிவை எடுக்க வில்லை என்றால், அந்தக் குற்ற உணர்ச்சி, என்னை சாகிற வரைக்கும் துன்புறுத்தும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட் டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான; வெளிப்படையான; ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மிக அரசியலை ஏற்படுத்த வேண்டும்.

அது தான் என் நோக்கம். தமிழக மக்கள் என்னுடன் இருக்கின்றனர். இது, சாதாரண விடயமில்லை என, எனக்கு தெரியும். ஆண்டவன் அருள், மக்களின் நம்பிக்கை, அன்பு, ஒத்துழைப்பு இருந்தால் தான் இதைச் சாதிக்க முடியும். அது எனக்கும் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது” எனக் கூறி, 20 ஆண்டுகளாக நீடித்த யூகத்துக்கு, முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X