2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Haters இல்லாத ஒரு நடிகர்! விக்ரமுக்கு குவியும் வாழ்த்துகள்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமா ரசிகர்களில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நடிகர் என்றால் விக்ரம் என்று சந்தேகமே இல்லாமல் கூறலாம். முன்னணியில் இருக்கும் மற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள், haters என இருதரப்பினர் இருப்பார்கள். சமூக வலைத்தளங்களில் எதாவது ஒரு காரணத்துக்காக சண்டை போட்டு கொண்டிருப்பார்கள்.

ஆனால், சீயான் விக்ரமுக்கு மட்டும் அப்படி நடப்பதில்லை. அவரை பிடிக்காது என சொல்பவர்களை பார்ப்பது அரிது. தமிழ் சினிமாவில் haters இல்லாத நடிகர் என்றால் அது விக்ரம் தான்.

சினிமாவை தொழிலாக பார்க்காமல் அதையே வாழ்க்கையாக வாழ்ந்து வருபவர் விக்ரம் என்று கூட சொல்லலாம். படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திரக்காக எந்த எல்லைக்கும் போக கூடியவர்.

ஐ படத்தில் ஒரு பகுதிக்காக அவர் உடல் எடையை ஏற்றிய அவர் அதன் பிறகு படத்தின் கதைக்கு ஏற்ப தனது எடையை பல மடங்கு குறைத்து அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். சினிமாவை அவர் எந்த அளவுக்கு நேசித்திருந்தால் இப்படி செய்திருப்பார் என அவரை அப்போது பாராட்டியவர்கள் ஏராளம்.

தற்போது கோப்ரா என்ற படத்தில் நடித்து வரும் அவர் அதில் 20 விதமான கெட்டப்களில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இதுபோன்ற விஷயங்களை செய்ய விக்ரம் ஒருவரால் மட்டுமே முடியும் என அவரது ரசிகர்கள் பெருமை கொள்வதில் ஆச்சர்யமில்லை.

இன்று ஏப்ரல் 17, 2020, விக்ரமின் 54ஆவது பிறந்தநாள். ரசிகர்கள், திரை பிரபலம் என அனைவரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அவர் கடந்து வந்த பாதை இதோ...

விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். 

இவர் பிறந்த ஊர் சென்னை.

தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சிறு வயதிலேயே இருந்தாலும் அவருடைய தந்தையின் வற்புறுத்தல் காரணமாக முதுகலை வணிக மேலாண்மை படிப்பை சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் படித்தார்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு மீண்டு வந்தார்.

சினிமா பின்னணியிலிருந்து வந்தவராக இருந்தாலும் தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்துவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

பின்னர் தன்னுடைய கவனத்தை டப்பிங் பக்கம் செலுத்தியிருக்கிறார். நடிகர் அஜித்திற்கு அவருடைய முதல் படமான 'அமராவதி'யில் விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருக்கிறார். அவ்வளவு ஏன் காதலன் படத்தில் பிரபுதேவாவின் குரலுக்கு சொந்தக்காரரும் விக்ரம் தான்.

டப்பிங்கில் மும்முரமாக இருந்த இவரை, சேது படம் மீண்டும் நடிப்புத் துறைக்குள் கொண்டுவந்தது. 'கென்னி' என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விக்ரமை 'சீயான்' என அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்ததும் இந்தப் படத்திற்கு பின்னர் தான்.

அந்நியன், காசி, தெய்வத்திருமகள் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்தது.

இவருடைய வெற்றிக்கான காரணம் அவருடைய அர்ப்பணிப்பு மட்டும் தான். ’ஐ’ படத்தில் நடிப்பிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய நடிகர் இவர். திரைக்கதைக்காக எந்த வேடமானாலும் எடுத்து நடிக்கக்கூடிய கலைஞர் ஆவார்.

பிதாமகன் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியான 'ஆதித்யா வர்மா' படம் வெளியாகி பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தற்போது நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரம் பிறந்தநாள் பரிசாக பொதுவாக அவருடைய ரசிகர்கள் பயன்படுத்தும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். விக்ரம் இதற்கு முன்னதாக நடித்த கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து ஸ்பெஷல் போஸ்டராக அதை வடிவமைத்திருக்கிறார்.

விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ’கோப்ரா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 7 விதமான கேரக்டர்களில் விக்ரம் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .