2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்த வாரம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் திரைப்படங்கள்!

Subashini   / 2018 மே 08 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரம், பலத்த போட்டிக்கு இடையே, 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை. இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக, புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால், தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

ஸ்ட்ரைக் நிறைவடைந்த பிறகு வெளியான 'மெர்க்குரி', 'பக்கா', 'தியா' உள்ளிட்ட திரைப்படங்களும், பெரியளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் அள்ளி வருகிறது.

ஸ்ட்ரைக்குக்குப் பிறகு, ஒவ்வொரு வாரமும் மூன்று திரைப்படங்கள் என வரைமுறைப்படுத்தி, புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தால் ஒழுங்குபடுத்தல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகும் திரைப்படங்கள் வெளியாவதால், கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த வார வெளியீட்டின்படி, வரும் வெள்ளிக்கிழமை (11) தமிழில் நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன.

இரும்புத்திரை

பி. எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில், விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள திரைப்படம் இரும்புத்திரை. இதில் சமந்தாஅர்ஜுன் ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ஜோர்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் உருவான இத்திரைப்படம், தெலுங்கில் அபிமன்யடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்

அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில், அருள்நிதி நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை, 'எக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில், டில்லி பாபு தயாரித்துள்ளார். இத்திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தவாரம் வெளியாகவுள்ளது.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலாபோல், ரமேஷ் கண்ணா நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையர் திலகம்

இவை தவிர, கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் ஆகியோர் நடித்துள்ள, சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மகாநதி’, 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் வெளியாகின்றது.

நாக் அஸ்வினின் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், வைஜெயந்தி மூவிஸின் தயாரிப்பில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடிக்க, சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மிக்கி ஜெ.மேயரின் இசையில், டேனி சென்செஸ் லோப்சின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .