2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தல அஜித்தின் உண்மை முகம்...!

Subashini   / 2018 மே 02 , பி.ப. 03:45 - 1     - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் அப்பா, பாலக்காட்டுகாரர். அம்மா, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அவருக்கு அண்ணன் அனுப்குமார், தம்பி அனில்குமார் என இரு சகோதரர்கள் இருக்கின்றார்கள். இருவருமே நல்ல படிப்பாளிகள், இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

அஜித் பிறந்தது, வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். எழும்பூரில் உள்ள ஓர் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதற்குமேல் படிப்பை கைவிட்டு விட்டு, ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்!

அங்கு ஐந்து ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்தார். ஆனால், அவரின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, ஏற்கெனவே ஆர்வமாக இருந்த மொடலிங் துறையில் ஈடுபட்டார். செருப்பு விளம்பரம் உட்பட, பல விளம்பரங்களில் வந்து தலை காட்டினார்.

விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே வாய்ப்புத்தேடிய காலத்தில் 'என் வீடு என் கணவர்' எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்துபோனதுதான் சினிமாவில் அஜித்தின் அறிமுகம். அதன்பிறகு 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்குப் படத்தில் ஹீரோவானார். சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோதும் கூட தனது விருப்பமான பைக் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு விபத்துகளால் படுகாயங்களையும் தொடர்ந்து சந்தித்து வந்தார் அஜித்.

'அமராவதி' படம் எடுக்க நினைத்த இயக்குனர் செல்வா, ஒரு விளம்பரத்தில் அஜித்தைப் பார்த்துவிட்டு, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் வேறொரு நடிகரை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தி இருக்கிறார். அப்போது யதார்த்தமாக வாய்ப்பு தேடிச் சென்ற அஜித், சுரேஷ் சந்திராவிடம் தனது போட்டோவைக் கொடுக்க, அவர் செல்வாவிடம் காட்ட, அப்படிக் கிடைத்ததுதான் 'அமராவதி' வாய்ப்பு. அந்தப் படத்தில் அஜித்துக்கு டப்பிங் பேசியவர் நடிகர் விக்ரம்.
 

சிறு வயதிலிருந்தே தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார் அஜித். அவரின் அப்பா வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர், ஒரு ‘பைக் ரேஸ்’ பிரியர். அவரைப் பார்த்து தான், அஜித்துக்கு ‘பைக் ரேஸ்’ ஆர்வம் வந்தது.

 ‘அமராவதி’ வெளியானபோது, அதன் வெற்றியைக் கூட கொண்டாட முடியாதபடி பைக் ரேஸில் விபத்தில் அடிபட்டு, ஒரு வருடம் படுத்த படுக்கையாகக் கிடந்தார்! இப்படி பலமுறை விபத்துக்களை பார்த்திருந்தாலும் அவருக்கு, பைக் ரேஸ் மீது இருந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை!

அஜித், பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2013இல் சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியிலும், 2014இல் புனே முதல் சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியிலும் பங்கேற்றார்.

அஜித் நடிப்பில் உருவான 'காதல் கோட்டை' படம் தேசிய விருது பெற்றது. கடும் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையாகக் கிடந்த தன்னை, 'பவித்ரா' படத்தில் நடிக்கவைத்த நன்றிக்கடனுக்காக கே.சுபாஷுக்கு பெரும் உதவி செய்தார் அஜித். 'நேசம்' படத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தை வெளியிட முடியாத அளவுக்கு கே.சுபாஷுக்கு பண நெருக்கடி ஏற்பட, அஜித் பெரிய தொகையைக் கொடுத்து அந்தப் படத்தின் ரிலீஸுக்கு உதவினார்.

பாலச்சந்தரின் உதவி இயக்குநரான சரண், அஜித்தை வைத்து எடுத்த முதல் படம் 'காதல் மன்னன்'. அந்தக் காலகட்டத்தில் அஜித்துக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகைகள் இருந்தார்கள். அஜித்தை தங்களது கனவு நாயகனாகக் கொண்ட பெண்கள் பலர். இயக்குநர் சரண் அதன்பிறகு அஜித்தை வைத்து மேலும் சில படங்களையும் இயக்கி வெற்றிக்கூட்டணியாக முத்திரை பதித்தார்.

சில நாட்கள் ஷேவ் செய்யாத தாடி வைத்த தோற்றத்தில் 'ஆனந்த பூங்காற்றே' படத்தில் நடித்தார் அஜித். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, பலரும் தாடியோடு நடிக்கத் தொடங்கினர். இன்றைக்கு நீண்ட தாடியோடு ஹீரோக்கள் நடிப்பதற்கெல்லாம் ஆரம்பம் அஜித் என்று தான் சொல்ல வேண்டும்.

ஷாலினி முதலில் நடிக்க மறுத்து, பின்னர் அஜித்தே நேரடியாக அவரிடம் பேசி நடிக்க செய்த படம் 'அமர்க்களம்'. இப்படத்தில் கத்தி வைத்து மிரட்டும் காட்சியில் நிஜமாகவே கத்தி பட்டு, ஷாலினிக்கு இரத்தம் வழிந்த போது, அதைப்பார்த்துத் துடித்துப்போனாராம் அஜித். இந்தப் படம் தான் இருவரின் காதலுக்கும் துவக்கப்புள்ளி.

‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது ஷாலினியுடன் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. அவர், பாலக்காடு பிராமின், ஷாலினி கிறிஸ்தவர். ஆகவே இரண்டு மத சம்பிரதாயப்படி ஷாலினியை மணந்து கொண்டார்!

அஜித், சினிமாவில் இருக்கும் தன் மைத்துனர் ரிச்சர்ட், மைத்துனி ஷாம்லி இரண்டு பேருக்கும், தன் படங்களில் சிபாரிசு செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டதில்லை!

முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தீனா' படத்தில் எக்‌ஷன் ஹீரோவாக மிரட்டியிருப்பார் அஜித். இந்தப் படத்தில் தான் அஜித் தனது சகாக்களால் முதன்முதலில் 'தல' என அழைக்கப்பட்டார். இன்றளவும் அவரது அடைமொழியாகவும், ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் பெயராகவும் அதுவே நீடிக்கிறது. முருகதாஸுக்கும் நல்ல பெயரை உருவாக்கிக் கொடுத்ததில் இந்தப் படத்திற்கு பெரும் பங்கு உண்டு.

'வாலி' படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கி, ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்ற அஜித், 'சிட்டிசன்' படத்தில் பல கெட்டப் போட்டு நடித்தார். 'ரெட்' படத்தில் படம் முழுக்க மொட்டைத்தலையோடு கெத்தான லோக்கல் தாதாவாக நடித்திருந்தார். 'வில்லன்' படத்தில் இரட்டை வேடங்களில் பட்டையைக் கிளப்பினார். மாற்றுத்திறனாளி வேடத்தில் அவரது சிறப்பான நடிப்பு வெகுவான பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

லிங்குசாமி இயக்கிய 'ஜி' படத்திற்குப் பிறகு, பாலாவின் 'நான் கடவுள்' படத்திற்காக உடல் இளைத்து முடி வளர்த்து ஆளே மாறி வேறொரு தோற்றம் பெற்றார். சிலபல காரணங்களால் அந்தப் படம் அஜித் கைவிட்டுப் போனது. அப்போது அவர் நடிப்பில் வெளிவந்த 'பரமசிவன்' படத்தில், அஜித்தை மிகவும் ஒல்லியாகப் பார்த்த ரசிகர்கள் அசந்து போனார்கள். 'வரலாறு' படத்தில் பலரும் நடிக்கத் தயங்கும் வேடத்திலும் நடித்து தான் ஒரு கதாபாத்திரத்துக்கான நடிகர் என நிரூபித்தார்.

அஜித்தின் சினிமா வாழ்வில், மிக முக்கியமான படம் 'பில்லா'. பெரிய வெற்றிகள் இல்லாமல் இருந்த நிலையில், ரஜினி நடித்த படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படம் செம ஹிட் ஆனது. ஒவ்வொரு காட்சியிலும் திரையில் தோன்றிய அஜித்துக்கு, மொத்தத் தியேட்டரும் விசிலடித்து ஆரவாரம் செய்தது.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் குடும்பத்தினருக்கு தோசை சுட்டு தருவது, பிரியாணி சமைத்துப் போடுவது, மனைவியோடு சேர்ந்து டென்னிஸ் விளையாடுவது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துப் போவது போன்ற பொறுப்பான வேலைகளை செய்து குடும்பத்தினரை குதூகலப்படுத்துவாராம் அஜித்.

 “நம்மள சுத்தி இருக்கறவங்கள நாம நல்லா பாத்துக்கிட்டோம்னா, அவங்க நம்மள ரொம்ப நல்லாப் பாத்துக்குவாங்க!” அஜித் அடிக்கடி சொல்லும் பொன்மொழி இது! அதை தன் வாழ்க்கையில் கடைபிடிக்கவும் செய்கிறார்.

தாய் - தந்தை பெயரில் மோகினி - மணி என்கிற அறக்கட்டளை மூலமாக, பல நல்ல காரியங்களுக்கு உதவுவதோடு, தன்னிடம் வேலை செய்யும் 14 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதுதான் ‘வீரம்’ படத்தில் வசனமாகவும், காட்சியாகவும் வைக்கப்பட்டது.

எந்த சினிமாப் பின்னணியும் இல்லாமல், சுயம்புவாக எழுந்து நின்றதால், தன்னம்பிக்கை நூல்களை அதிகம் விரும்பிப் படிப்பார். இப்போது ஆன்மிகப் புத்தகங்களை தேடிப் பிடித்துப் படிக்கிறார்.

அஜித்துக்கு, தன் பெயருக்கு முன்னால் பட்டங்கள் போட்டுக் கொள்வதோ, ’கட் அவுட்’வைத்து பாலாபிஷேகம் நடத்துவதோ பிடிக்காது! ’அமர்க்களம்’ பட டைட்டில் கார்டில் ’அல்டிமேட் ஸ்டார்’ பட்டத்தைப் போட்டார் இயக்குநர் சரண். அவர் இயக்கிய ’அசல்’ பட டைட்டிலில் அந்த பட்டத்தை நீக்க சொல்லிவிட்டார்! அதேபோல, பலாபிஷேகம் நடத்தக் கூடாது என்பதற்காகவே, ரசிகர் மன்றங்களையும் அதிரடியாக கலைத்தார்!

அஜித்தின் முதல் சம்பளத்தில் வாங்கிய பைக் இன்றும் பத்திரமாக அவரிடம் உள்ளதாம்.

அஜித்தின் 50ஆவது படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவானது 'மங்காத்தா'. படத்திலேயே பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைப்பது என துதி பாடாமல் வேற மாதிரி இருக்கவேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். அதை நேர்த்தியாக நிறைவேற்றி வைத்தது வெங்கட்பிரபுவின் எதிர்மறை ஹீரோ பாத்திரம். இதில், முன்னணி நடிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏற்க அஞ்சும் பாத்திரத்தை, ஏற்று நடித்து அசத்தினார்.

ஶ்ரீதேவி கேட்டதற்காக ஒரு ரூபா கூட சம்பளம் வாங்கிக்கொள்ளாமல், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அதன் பிறகுதான் ஶ்ரீதேவிக்கும், இவரது குடும்பத்துக்குமான நட்பு அடிக்கடி தொலைபேசியில் பேசும் அளவுக்கு வளர்ந்தது.

அஜித் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை உடையவர். அதை குறிக்கும் விதமாக, அவரின் வீட்டு சுவற்றில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத சின்னங்களுடன் கல் பதிக்கப்பட்டிருக்கும்.

அஜித், தன் மனைவி ஷாலினியிடம், ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் ஐ லவ் யூ சொல்வது வழக்கம். அதுபோல், அஜித்தை ஷாலினி பேபி என்று தான் செல்லமாக அழைப்பாராம்.

அஜித் தனது உதவியாளர்களுடன் இரவு 7 மணிக்கு மேல் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், “உங்களுடன் பேசலாமா? நேரம் கிடைக்குமா? என்ற குறுஞ்செய்தி அனுப்பி பதில் கிடைத்த பிறகே பேசுவார்.

'உயிரோடு உயிராக' படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது' பாடலை இயக்கியது அஜித் தான். இந்தப் படத்தின் இயக்குநர் நடிகை ரிச்சாவின் அம்மா சுஷ்மா. சரண் இயக்கத்தில் உருவான 'அசல்' படத்திற்கு கதை - திரைக்கதை - வசன உதவியும் தல அஜித் குமார் தான்.

விஜய்யுடன் அஜித் சேர்ந்து நடித்த படம் 'ராஜாவின் பார்வையிலே'. புதிதாக சினிமாவுக்கு வந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி இரண்டு நடிகர்கள் கொண்ட கதையில் நடிக்க அவர் தயங்குவதே இல்லை. 'கல்லூரி வாசல்' படத்தில் பிரசாந்த் உடனும் 'உல்லாசம்' படத்தில் விக்ரம் உடனும், 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் கார்த்திக் உடனும், 'அசோகா'வில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார். 'மங்காத்தா', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கச் சொல்லி இணைந்து நடித்திருக்கிறார் அஜித்.

பைக், கார் ரேஸ்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் அஜித், சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. பல்வேறு தருணங்களில் எடுத்த சிறந்த புகைப்படங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.

அஜித் தனிப்பட்ட சலுகை எதையும் விரும்புவதில்லை. விமான நிலையம் என்றாலும் சரி வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி வரிசையில் தான் நிற்பார்.

அஜித், பட்டதாரி இல்லை என்றாலும் அவருக்கு ஆங்கிலம், இந்தி, பிரெஞ் ஆகிய மொழிகள் தெரியும்.

அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜித்தின் வீட்டுக்கும் அவரது பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் என்பதால், தினமும் அவர்களை அழைத்து வரவும், திரும்ப கொண்டுபோய் விடவும் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒருமுறை அஜித் வீட்டிலிருந்த சமயம், அவரது பணியாளர்கள் வரும் வாகனம், ஒரு சில நிமிடங்கள் காலதாமதமாக வந்துள்ளது. பணியாளர்கள் தங்களது தாமதத்துக்காக அஜித்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அப்போது தாமதத்துக்கான காரணத்தை அஜித் கேட்டபோது, முந்தைய நாள் இரவு முழுவதும் தாங்கள் தங்கியிருந்த குடியிருப்பில் மின்சாரம் இல்லாததால், சரியாக தூங்கவில்லை. அதனால்தான் காலதாமதமாக வர நேர்ந்தது என்று பணியாளர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அறிந்த அஜித், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் இன்வெர்ட்டர் பொருத்த  உத்தரவிட்டுள்ளாராம். அதிலும் தன் வீட்டில் எந்தமாதிரியான இன்வெர்ட்டரை பயன்படுத்துகிறேனோ, அதே தரத்துக்கு அவர்கள் வீட்டிலும் பொருத்துமாறும் சொல்லியுள்ளாராம்.

 


You May Also Like

  Comments - 1

  • mall eswaran M Monday, 31 December 2018 07:16 PM

    மிகவும் நல்ல மனிதர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .