2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விஜய் ஆண்டனியின் காளிக்கு உயர் நீதிமன்றம் தடை

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தை வெளியிடத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை, ‘பிக்சர் பொக்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வாங்கி வெளியிட்டார். எனினும் அந்தப் படம் வெற்றிபெறாததால் அலெக்ஸாண்டருக்கு 4 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுசம்பந்தமாக விஜய் ஆண்டனி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமாவிடம், அலெக்ஸாண்டர் பேசியபோது, ‘அண்ணாதுரை’ நட்டத்துக்குப் பதிலாக ‘காளி’ படத்தின் விநியோக உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

எனவே, 50 இலட்ச ரூபாவை முற்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார் அலெக்ஸாண்டர். ஆனால், தமிழ் சினிமாவில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதால், மிகுதித் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் அலெக்ஸாண்டரால் கொடுக்க முடியவில்லை. எனவே, ஒப்பந்தத்தை இரத்து செய்யப் போவதாக கடிதம் அனுப்பியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

‘அண்ணாதுரை’யால் தனக்கு ஏற்பட்ட நட்டத்தைக் கொடுத்துவிட்டு ‘காளி’ படத்தை வெளியிடுவதற்கு உத்தரவிடுமாறுக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அலெக்ஸாண்டர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘காளி’ படத்தை வெளியிடத் தடை விதித்ததோடு, 4 கோடியே 73 இலட்சத்தை அலெக்ஸாண்டருக்காக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு ‘காளி’ படத்தை வெளியிடுமாறு  உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .