2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசியல் கைதியான குடும்பப் பெண் பிணையில் விடுவிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த நான்கு வருடங்களாக, அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பப் பெண்ணொருவரை பிணையில் செல்ல, கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம், நேற்று (07) அனுமதியளித்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்குத் தாயான திருமதி ரவீந்திரன் மதனி (வயது 31) என்ற பெண்ணே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதியன்று, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, வெலிமடை பொலிஸாரால் பதவியா சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண்னுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இவருக்கு எதிராக, தண்டனைக் கோவைச் சட்டத்தின் 443, 369, 394 ஆகிய சரத்துகளின் கீழ், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும், மற்றுமொறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு, நேற்றைய தினம், கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த நீதிமன்ற நீதவான் டி.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுள்ளமையால், இந்த வழக்குகளுக்கான கோவைகள், தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த குறித்த பெண்ணை, 25 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையில் செல்ல, கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம், நேற்று (07) அனுமதியளித்ததோடு, இந்த வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படுமென, நீதிமன்றத்தால் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் பெண்ணுக்கு சார்பாக மன்றில் நேற்று ஆஜராகியிருந்த மன்னார் மாவட்டப் பிரஜைகள் குழு, குறித்த பெண்ணைப் பிணையில் எடுப்பதற்கான நிதியுதவியை அளித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X