ரூ. 20 மில்லியன் இலஞ்ச விவகாரம்; இருவரது விளக்கமறியல் 19 வரை நீடிப்பு

20 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாள்தொகுதி முன்னாள் பிரதானி கலாநிதி கே.மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல், எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 

இவ்விருவரும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (05) ஆஜர்படுத்தப்பட்ட போதே, பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கலாமா என்பது தொடர்பான மேலதிக விசாரணை, வழக்கின் அடுத்த அமர்வில் மேற்கொள்ளப்படும் என்றும், பிரதான நீதவான் அறிவித்தார்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு உரித்தான கட்டடம் மற்றும் இயந்திர உபகரணங்கள் ஆகியவற்றை ஒப்படைப்பதற்காக, இந்திய வர்த்தகரிடமிருந்து, 560 மில்லியன் ரூபாயை இவர்கள் இலஞ்சமாகக் கோரியிருந்துள்ளனர்.

இறுதியில், 200 மில்லியன் ரூபாய்க்குச் சம்மதித்த அவர்கள், முற்கொடுப்பனவாக 20 மில்லியன் ரூபாயை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றின் கார் தரிப்பிடத்திலிருந்து பெறும்போது, மே மாதம் 3ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, இந்திய வர்த்தகர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில், இவ்விரு பிரதிவாதிகள் ஈடுபட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவர்களின் குரல்கள் அடங்கிய ஒலி நாடாக்களை, இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி, சோதனைக்கு உட்படுத்துமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு, கடந்த 23ஆம் திகதியன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரூ. 20 மில்லியன் இலஞ்ச விவகாரம்; இருவரது விளக்கமறியல் 19 வரை நீடிப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.