2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி. பாரூக் தாஜுடீன்  

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள் அல்லது அதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 5 பேர் மீது, குற்றப்பத்திரிகை நேற்று (4) தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்திலேயே, சட்டமா அதிபரால், இக்குற்ற ப்பத்திர ங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

சோலைக் குமரன் அல்லது மாஸ்டர் என்றழைக்கப்படும் கரளசிங்கம் குலேந்திரன், கடலன் அல்லது ஜனா என்றழைக்கப்படும் லூயிஸ் மரியநாயகம் அஜந்தன், சந்திரன் என்றழைக்கப்படும் முருகையா தவச்சந்திரன், கண்ணன் அல்லது வெற்றி என அழைக்கப்படும் மகாத்மாஜி அனோஜன் ஆகியோர் மீதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்ப ஜானகி ராஜரட்னவால், குற்றப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.  

இவர்களில், நான்காவது சந்தேகநபரான மதன் அல்லது வரதன் என்றழைக்கப்படும் ஞானசேகரன் ராஸ்மதன் என்பவர், நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.  

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயன்றமை அல்லது அதற்கான சதியில் ஈடுபட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய அல்லது காயப்படுத்த முயன்றமை அல்லது அதற்கான சதியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளே, அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலுள்ள திருச்சையாறு பகுதியில், 2017ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி அல்லது அதற்கு அண்மையான திகதியிலேயே, இக்கொலை முயற்சி இடம்பெற்றது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

அதேபோல், கிளிநொச்சியில், 2017ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி அல்லது அதற்கு அண்மையான நாள்களில், கிளைமோர் குண்டொன்றையும் வெடிக்க வைக்கும் கருவிகளையும் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டும், அவர்கள் மீது சுமத்தப்பட்டது.  

அவர்கள் மீதான குற்றப்பத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, நால்வருக்கும் வாசித்துக் காட்டப்பட்டது.  

இவர்களுக்கெதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான சம்ப ஜானகி ராஜரட்ன நிராகரித்ததோடு, இவ்வழக்கை விசாரிப்பதற்கான அதிகார எல்லையை, கொழும்பு மேல் நீதிமன்றம் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.  
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, டிசெம்பர் 5ஆம் திகதி குறிப்பிடப்பட்டது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .