2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நானுஓயா சம்பவம்: 54 பேருக்கும் பிணை

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், டீ.சந்துரு

நுவரெலியா- நானுஓயாவில் ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான நிலைமையை ஏற்படுத்தி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டிருந்த 54 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களில், பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 12 பேரும், நீதிமன்றத்தில் நேற்றையதினம் (18) ஆஜராகியிருந்தனர். ஏனைய 42 சந்தேகநபர்களில், ஏற்கெனவே அறுவர்  கைதுசெய்யப்பட்டனர். ஏனைய 36 பின்னர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், ஜூலை 4ஆம் திகதியன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும், நுவரெலியான மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று (04) ஆஜர்படுத்திய போதே, மாவட்ட நீதவான் ருவான் டி சில்வா, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

அவர்கள் அனைவரும் தலா 1 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டாரென நானுஓயா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்கஹ தெரிவித்தார்.  

நானுஒயாவில், கடந்த 15 ஆம் திகதியன்று காலை 7 மணியளவில், பாதசாரி கடவையை கடந்துகொண்டிருந்த போது, லொறியொன்று மோதியதில்,  ரதெல்லையைச் சேர்ந்த ஆகாஷா தெவ்மினி (வயது 7) என்ற சிறுமி பலியானார்.

அதனையடுத்து, அங்கு குழுமியவர்கள், அந்த லொறிக்கு தீமூட்டிக் கொளுத்தினர். இதனால், அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் 42  பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக, சட்டத்துக்கு முரணாக ஒன்று கூடியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, அரசாங்க அதிகாரிகளுக்கு கடமையை செய்யவிடாமல் தடை ஏற்படுத்தியமை, கலகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை  ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த நிலையில், பி​டியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஏனைய 12 பேரையும், நேற்றையதினம் (18), நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அதனடிப்படையிலேயே அவர்களும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று,  அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றம், பிற்பகல் 2 மணியளவிலேயே கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இந்த வழக்கை செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியன்று ஒத்திவைத்த  நுவரெலியான மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவான் டி சில்வா, பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரையும் அன்றையதினம், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .