2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேக நபர் அடித்துக்கொலை

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குறித்த நபர் தாக்கப்பட்ட பின்னர் இன்று (19) உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபராதலாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தம்புள்ளை, ஹபராதலாவ பகுதியில் 5 பிள்ளைகளுடன் வறிய நிலையில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்ற சந்தேக நபர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் பெற்றோரால் சில நாட்களுக்கு முன்னர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்ய சென்ற சந்தர்ப்பத்தில், குறித்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் வீட்டுக்கு பின்புறத்தில் குறித்த நபர் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளான சிறுமியின் தந்தை ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

சந்தேக நபரை பிடிப்பதற்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட மோதலின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குறித்த நபர் தனது நண்பர் ஒருவருக்கும் குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த இடமளித்துள்ளதாகவும், அந்த நண்பரும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரும் திருமணமானவர் என்றும் அவருக்கும் பிள்ளைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் மரண விசாரணைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு இளைஞர் குழுவினரால் இன்று (19) அதிகாலை 4 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகவும் வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஏனைய இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேநேரம், சிறுமியின் தந்தை இராணுவ சேவையில் இருந்து விலகியவர் என்றும் தாய் கூலி வேலை செய்தே குழந்தைகளை மிகவும் துன்பத்துக்கு மத்தியில் பராமரித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .