2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெற்றிகரமாகப் படங்களை அனுப்பிய முதலாவது ரோபோ விண்கலம்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், 7 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, செவ்வாயின் உட்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக முதல் ரோபோ விண்கலம் இன்சைட், கடந்த மே மாதம் 5ஆம் திகதி கலிபோர்னியாவிலுள்ள வாண்டென்பெர்ஜ் விமானப்படைத் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

7 மாதங்கள் பயணத்துக்கு பின்னர் அது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரோபோ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.

இதைக் கொண்டாடும் விதமாக கலிஃபோர்னியாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு மையக்குழுவினர் கரகோஷம் எழுப்பியும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டும் கைகளை குலுக்கி கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் ப்ரைடென்ஸ்டீன், ‘‘மனித வரலாற்றில் எட்டாவது முறையாக இன்று செவ்வாய் கிரகத்தில் இன்சைட்-ஐ வெற்றிகரமாக நாங்கள் தரையிறக்கியுள்ளோம். இந்த சாதனை அமெரிக்காவுக்கும் நமது சர்வதேச பங்காளர்களின் புத்திசாலித்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் நாசாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி,” எனக் கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், தரையில் துளையிட்டு உட்புற வெப்பப் பரிமாற்றங்கள் போன்றவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்யும் இன்சைட் விண்கலம், தொடர்ந்து அந்த கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் திரவங்கள் ஏதும் உள்ளதா அல்லது திடநிலையிலேயே உள்ளதா என தெரிய வரும் என, நாசா தெரிவித்துள்ளது.

இன்சைட் விண்கலம் செவ்வாய்யில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள 8ஆவது விண்கலமாகும். இரண்டு ஆண்டு ஆயுள் காலம் கொண்ட இன்சைட் விண்கல திட்டத்துக்காக 850 மில்லியன் டொலர் தொகையை நாசா செலவு செய்துள்ளது. இந்த ஆய்வுகளைக் கொண்டு அடுத்து ஓராண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .