திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

'டிராகன் ஃபுரூட்' பயிர்ச்செய்கையில் வட்டவளை பெருந்தோட்டக் கம்பனி

 

பிரபல 'செஸ்டா' ரக தேயிலை தயாரிப்பில் ஈடுபடும் வட்டவளை பெருந்தோட்ட கம்பனி, இலங்கையில் முதற் தடவையாக வர்த்தக நோக்குடன் டிராகன் ஃபுரூட் (Dragon Fruit) பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த பயிர்ச்செய்கை தோட்டம் காலி மாவட்டத்தின் ஹோமதுல பெருந்தோட்ட பகுதியில் அமைந்துள்ளது. இப்பெருந்தோட்டத்தில் பாரம்பரிய பயிர்களுக்கு பதிலாக மாற்றுப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் புதிய உள்ளடக்கமாகவே டிராகன் ஃபுரூட் பயிர்ச்செய்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

டிராகன் ஃபுரூட் பயிர்ச்செய்கை குறித்து ஹோமதுல பெருந்தோட்டத்தின் சிரேஷ்ட முகாமையாளர் காமினி ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,  2008 ஆம் ஆண்டில் நாம் டிராகன் ஃபுரூட் பயிர்ச்செய்கையை ஆரம்பித்திருந்தோம்.

இலங்கையில் வர்த்தக நோக்குடன் டிராகன் ஃபுரூட் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட முதல் நிறுவனம் எமது நிறுவனம். தற்போது பெருந்தோட்டத்தில் 4 ஏக்கர் நிலப் பரப்பில் டிராகன் ஃபுரூட் பயிரிடப்பட்டுள்ளது. இது பாரம்பரிய பயிர்களான தேயிலை, இறப்பர் தேங்காய் மற்றும் இதர பயிர்களான, பாம் எண்ணெய், அன்னாசி, கராம்பு, வாழை, சைட்ரஸ், மக்கடாமியா மற்றும் வனிலா போன்றவற்றுக்கு மேலதிகமாக இது பயிரிடப்படுகிறது.

இதன் மூலம் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியதாகவுள்ளது. பாரம்பரிய பயிர்ச்செய்கை மூலம் ஊழியர்களின் வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டாலும், சுழற்சிமுறை பயிர்ச்செய்கையின் மூலம் தொடர்ச்சியாக ஊழியர்களுக்கு தொழில் வழங்கி அவர்களுக்கு வருமானம் தேடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது என்றார்.

வெளியே இளஞ்சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள இந்த டிராகன் ஃபுரூட் உட்பகுதியில் இதமான வெண்நிற சுளையை கொண்டுள்ளது. மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு உரித்தான இப்பழ வகை ஆசிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது. இரவு வேளையில் காய்ப்பதாலும், பெரிய வெள்ளை நிற வாசனையான பூ பூப்பதாலும் இதற்கு மொனோ ஃபிளவர் அல்லது இரவின் ராணி எனவும் அழைக்கப்படுகிறது.

டிராகன் ஃபுரூட் பயிரிடப்பட்டு இரண்டரை வருடங்களின் பின்னரே காய்க்கத் தொடங்கும். ஒரு பயிருக்கான ஆரம்ப செலவு 2000 ரூபா வரையில் அமைந்துள்ளது.

இந்தப் பயிரின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும், எனவே பயிர்ச்செய்து சில வருடங்களில் அதிகளவு இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும். பராமரிப்பும் இலகுவானது என காமினி ரத்நாயக்க மேலும் கூறினார்.

ஹோமதுல பெருந்தோட்டம் தனது இரண்டாவது டிராகன் ஃபுரூட் விளைச்சலை அண்மையில் பூர்த்தி செய்திருந்தது. சிறந்த சந்தை வாய்ப்பு காணப்படுவதாகவும், கிலோ ஒன்றின் விலை சுமார் 400 ரூபா வரையில் காணப்படுவதாகவும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன், தெற்கிலுள்ள ஹோட்டல்களில் இப்பழங்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது, இப்பழங்களுக்கான கேள்வி மேலும் அதிகரிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், பெருந்தோட்டத்தின் வருமானத்தை அதிகரிக்க எதிர்வரும் காலங்களில் அதிகளவு டிராகன் ஃபுரூட் பயிர்களை பயிரிட திட்டமிட்டுள்ளதாக காமினி ரத்நாயக்க மேலும் கூறியிருந்தார்.

அத்துடன் ஹோமதுல பெருந்தோட்டத்தின் தாய் நிறுவனமான வட்டவளை பெருந்தோட்ட கம்பனி இவ்வருடத்தின் முதல் காலாண்டில், 207 வீத வளர்ச்சி அல்லது 120 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளது. இதில் பாம் எண்ணெய் வருமானமும், தேயிலை வருமானமும் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்யவதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: