திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வார ராசிபலன் 02-March-2010 முதல் 08-March 2010

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் சனியின் சாரத்தில் வக்ரம் பெற்று நீச ராசியில் நீசபங்கமாகவும் இருப்பதால் உங்களுடைய செயலில் அல்லது முயற்சியில் தடை, தாமதம் ஏற்பட்டாலும் தோல்விக்கு இடமில்லை. சில காரியங்களில் லேட்டானாலும் லேட்டஸ்டாக சாதித்து விடலாம். செவ்வாய் 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். செவ்வாய் நின்ற இடம் 4-ஆம் இடம். இதில் செவ்வாய் ராசியாதிபதி என்பதால், இந்த இடங்களில் சில அசுப பலன்களைக் கொடுத்து பிறகு சுபப் பலன்களாக மாற்றிவிடும். செவ்வாய் நீசம், வக்ரம் என்பதால் ஆரம்பத்தில் அசுப பலன்களைச் சந்தித்து பிறகு நீசபங்கம் என்பதாலும் வக்ரத்தில் உக்ர பலம் என்பதாலும் சுபப் பலன்களாக மாற்றிவிடும். அதை உதாரணத்தோடு சொல்லுவதென்றால், அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வருடக்கணக்கில் குடியிருக்கிறவர்களைக் காலி செய்வது அசுப பலன். அவர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியதும் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அரசு வீடு கட்டித் தருவது சுபப் பலன். இப்படி பூமி, வீடு, வாகனம், கல்வி, தாய், சுகம் ஆகிய 4-ஆம் பாவகப் பலனில் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளைச் சந்தித்து பிறகு நற்பலன்களாக மாறும். அதேபோல 7- திருமணத்தடை விலகும். கணவன்- மனைவிக்குள் அடிப்படை கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, பிறகு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் நிலை ஏற்படும். தொழில் துறையிலும் எதிர்பாராத சங்கடங்களைச் சந்தித்து, பிறகு அதை நிவர்த்தி செய்து லாபமும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். 11-ஆம் இடம் மூத்த சகோதரம். அதற்கு சகோதர காரகன் செவ்வாய் 6-ல் இருப்பதால் மூத்த உடன்பிறப்புக்கள் வகையில் சில தர்ம சங்கடங்களைச் சந்தித்து நிவர்த்தியாகும்.

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 10-ல் இருந்து, பிறகு 3-ஆம் தேதி முதல் 11-ல் மீனத்தில் உச்சம் அடைகிறார். எனவே செல்வாக்கு, கீர்த்தி, திறமை, செயல்பாடு ஆகிய 1-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட நற்பலன்களை அடையலாம். பாராட்டும் பரிசுகளும் பெறலாம். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற மாதிரி பெருமைக்கு குறைவு ஏற்படாது. அதேசமயம் சுக்கிரன் 6-க்கும் உடையவர். அவர் உச்சம் பெறுவதால் போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளும் உச்சமாகவே அமையும். ஆனாலும் அவற்றினால் உங்களுக்கு பாதிப்போ தோல்வியோ வராத வண்ணம், 11-ஆம் இடத்தைப் பார்க்கும் சனியும், 11-க்குடைய குரு 10-ல் இருப்பதாலும் வெற்றிக்கு இடமுண்டு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பது போல எதிரிகளை உதிரிகளாக்கி விட்டு முன்னேற்றப் பாதையில் செயல்பட்டு வெற்றி பெறலாம்; சாதித்துக் காட்டலாம். சுக்கிரன் 11-ஆம் இடத்துக்குரிய குருவின் சாரத்திலும் 11-ஆம் இடத்தைப் பார்க்கும் சனியின் சாரத்திலும் சஞ்சரிப்பதால் லாபமும் வெற்றியும் முன்னேற்றமும் தடையில்லாமல் வந்து சேரும். 3-ஆம் இடம் தைரிய ஸ்தானம். அங்கு செவ்வாய் நீசபங்கமாகவும் வக்ரமாகவும் இருப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் விளங்கும். ஒரு சிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் வெளியில் கூற முடியாதபடி சில சங்கட உணர்வுகளைச் சந்திக்க வைத்தாலும், ராசிநாதன் உச்ச பலத்தால் அவற்றை சாமர்த்தியமாகக் கையாண்டு சமாளித்துவிடலாம். 2-ல் கேது, 8-ல் ராகு என்பதால் பங்குச் சந்தை, ஸ்பெகுலேஷன் அல்லது எதிர்பாராத தனப்ராப்திகளும் உண்டாகும்.

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் வார தொடக்கத்தில் 9-ல் இருக்கிறார். ராகு சாரத்தில் நிற்கும் புதன் 7, 10-க்குடைய குருவின் சாரத்தில் மாறுவார். வாரக் கடைசியில் மீனத்தில் நீசம் அடைவார். என்றாலும் ராசிக்கு 10-ல் கேந்திரம் என்பதாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்வதாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். வேலை இல்லாமல் வீண்பொழுதாக நாளைக் கழித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். அர்த்தாஷ்டமச் சனி (4-ஆம் இடம்) பலனாக கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றம், இழப்பு, நஷ்டங்களுக்கு ஈடு செய்யும் வகையில் புதிய தொழில் அமைப்புகளை உருவாக்கலாம். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் குடும்பத்தினரோ அல்லது உடனிருப்பவர்களோ உங்கள் திட்டங்களின் பெருமைகளை உணராமல் உங்கள் வேகத்தைத் தடைப்படுத்தலாம் அல்லது எதிர்மறையாகப் பேசலாம். அவற்றையெல்லாம் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் மனம் ஆணையிடும் வகையில் நம்பிக்கையோடு செயல்படுவதற்கு 9-ல் நின்று பார்க்கும் குருவும் 9-க்குடைய சனியின் பார்வையும் துணை புரியும். அதைவிட சிறப்பு- 10-க்குடைய குரு 9-ல் நிற்க, 9-க்குடைய சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே அது உங்களை வழிநடத்தும். இராவணனின் அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டாலும், கற்புக்கு எந்தக் களங்கமும் வராத வகையில் காப்பாற்றப்பட்டது போல தர்மகர்மாதிபதி யோகம் உங்களைக் காப்பாற்றும்.

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிக்கு ஏழரைச்சனி விலகியும் இன்னும் சரியான முறையில் வருமானம், தொழில் அமையவில்லையே என்ற கவலை சிலருக்கு. வருமானம், தொழில் எல்லாம் முறையாக இருந்தும் உயர்வுக்கு வழியில்லாமல் கிணற்றில் போட்ட கல்லைப் போல அசைவற்று அப்படியே இருக்கிறதே என்ற ஆதங்கம் சிலருக்கு. பதவி கிடைத்தாலும் அல்லது பதவி உயர்வு பெற்றாலும் விரும்பிய இலாகா அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சி இல்லையே என்ற விரக்தி சிலருக்கு. இதற்கு இரண்டு காரணங்கள். 10-க்குடைய செவ்வாய் வக்ரம், நீசம் என்பது ஒரு காரணம். பாக்கியாதிபதி குரு 8-ல் மறைவு. அஸ்தமனம் என்பது இன்னொரு காரணம். மார்ச் 13-ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். மார்ச் 22-ல் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவார். குருப்பெயர்ச்சி மே 2-ல் என்றாலும் குரு உதயமானதற்குப் பிறகு ஓரளவு குருவால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அதன்பிறகு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஜெட் வேகத்தில் செயல்படும். ஏழரையாண்டு சனியின் தொல்லைகளைச் சந்தித்துப் போராடியவர்களுக்கு சில நாட்கள் பொறுமையாக இருக்க முடியாதா! குரு 8-ல் மறைந்திருந்தாலும் 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால், செலவு செய்வதற்காகவே வரவும் வந்து சேரும். 4-ஆம் இடத்துச் சுக்கிரன் லாபாதிபதியாகி மார்ச் 3-ல் 9-ல் உச்சம் பெறும்போதே தடைகள் விலகும். வழிகள் பிறக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சாரம். சூரியனுக்கு ராகு பகை கிரகம். ராகு 5-ல் நிற்கிறார். அதனால் உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் வெற்றி வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப் போகிறது. பரிசுச் சீட்டில் முதல் பரிசிற்கு ஐந்து நம்பர் உங்கள் கையிலிருக்கும் சீட்டை ஒட்டியே வந்து, ஆறாவது நம்பர் கடைசி நம்பர் வேறு நம்பர் ஆகிவிட்டால் எப்படி ஏமாற்றம் ஆகிறதோ அப்படி உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் ஏமாற்றம் ஆகிறது. அதற்கு செவ்வாயும் சனியும் ஒரு காரணம்- செவ்வாய் 12-லும் சனி 2-லும் இருப்பதும்தான். என்றாலும் 5-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதோடு ராசிநாதன் சூரியனோடு சேர்ந்திருப்பதால் எல்லா சிக்கல்களையும் கடந்து சமாளிக்கலாம். ஆனால் மனம் மட்டும் ஏதாவது ஒரு வகையில் நிம்மதி இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதற்குக் காரணம் 5-ல் நிற்கும் ராகுதான். அவரை சாந்தப்படுத்த வடக்குப் பார்த்த காளியை வணங்கலாம்.


கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிநாதன் புதன் தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கிறார். ஜென்ம ராசியில் சனி நிற்கிறார். அதனால் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. குரு 6-ல் அஸ்தமனம்- மறைவு. ஆகவே தொழில் இயங்கினாலும் சம்பாத்தியம் அவ்வப்போது இருந்தாலும் எல்லாவற்றிலும் எதிர்பார்க்கும் நிறைவு இல்லாமல் தவிப்பீர்கள். விரக்தி, அலைச்சல், டென்ஷன் அதிகமாகும். கடனை வாங்கித் தொழிலை நடத்தி, வெளியில் கடனைக் கொடுத்து குறித்த காலத்தில் பணம் வசூல் ஆகாமல், வாங்கிய பணத்தை நாணயத்தைக் காப்பாற்ற வட்டிக்கு வாங்கித் தர வேண்டி இருக்கும். ஏற்கெனவே மீள முடியாத கடன் என்னும் கடல் ஆழத்தில் தவிப்பவர்களுக்கு மேலும் புதுக்கடன் எனும் அலை வந்து மோத தப்பிக்கத் திணறுவீர்கள். இந்தத் துன்பம் எல்லாம் நிரந்தரமல்ல- தற்காலிகமானவைதான் என்றாலும், 4-ஆம் இடத்து ராகுவும் 10-ஆம் இடத்துக் கேதுவும் உங்கள் சுகத்தையும் கெடுத்து தொழில்துறையில் பயத்தையும் கொடுக்கும். மார்ச் 3-ல் 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம் பெறுவார். மார்ச் 8-ல் அவரோடு புதனும் போய்ச் சேருவார். அதன்பிறகு சில நல்ல திருப்பங்கள் உண்டாகும். குருவின் மறைவு தோஷம் விலக இறைவழிபாடும் ஹோமங்களும் செய்து கொள்வது அவசியம்.

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம். சனி ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆனாலும் சனியின் பாதிப்பைவிட செவ்வாய் கடகத்தில் நீசமான பிறகுதான் தொழில் கவலையும் தேவையில்லாத இடப்பெயர்ச்சியும் காரண காரியமில்லாத கற்பனை பயமும் உங்களைச் சூழ்கிறது. நேர்மையான அதிகாரிகள் சிலர்மீது, அவரால் நன்மையும் பயனும் அடைந்தவர்களே மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி சிக்கலை உண்டு பண்ணுவார்கள். அதன் காரணமாக மூன்று மாதம், ஆறு மாதத்திற்குள் டிரான்ஸ்பர்களையும் சந்திப்பார்கள். இவையெல்லாம் 10-ஆம் இடத்து செவ்வாயின் பலனாகும். அதற்காகக் கவலைப்படாதீர்கள். ஆட்டு மந்தையில் ஒரு கருப்பு ஆடு உங்களை வெறுப்பேற்றுகிறது. அது எந்த ஆடு என்று அடையாளம் தெரியவில்லை. மார்ச் 13-ல் செவ்வாய் வக்ர நிவர்த்தி ஆனதும் மறைமுகமாக முதுகில் குத்தியவரை அடையாளம் காணலாம். ஒரு சிலருக்கு மார்ச்சில் ஒப்பந்த வேலை முடிவு பெற்ற பிறகு ஏப்ரலில் என்ன செய்வது என்ற கவலையும் குழப்பமும் உருவாகலாம். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம். தொடர்ந்து பணியாற்றும் யோகம் ஏற்படலாம். சனி 12-ல் இருக்கும் வரை பெரும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம், நீசபங்கம், வக்ரம். விருச்சிக ராசிக்கு சனியின் பார்வை. 2-ல் ராகு, 8-ல் கேது. இவை எல்லாம் உங்களுடைய சந்தோஷத்தை மூடி கதவடைக்கிறது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தாராளமான பணப்புழக்கம் இருந்தாலும் சேமிப்புக்கு இடமில்லாத வகையில் பண விரயம் ஏற்படும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூல் ஆகாமல் டென்ஷன் ஆகும். கொடுத்த பணத்தைக் கேட்டால் பகை உருவாகும்; வருத்தம் உருவாகும். அதற்காகக் கொடுத்த பணத்தைக் கேட்காமலும் இருக்க முடியாது. கேட்காத பணமும் பார்க்காத தொழிலும் கெட்டுப் போகும் என்பது பழமொழி. வெளியில் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் வீட்டுக்குள் கௌரவ பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டும். இவையெல்லாம் மார்ச் 13 வரை- செவ்வாயின் வக்ர காலம் முடியும் வரை சமாளிக்க வேண்டும். அதன்பிறகு இந்தச் சூழ்நிலை மாறும். செவ்வாய் நீசம் தெளிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும் வக்ர நிவர்த்திக்குப் பிறகு உங்களுக்கு அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். இக்காலம் முடியும் வரை குடும்பத்திலும் வெளியிலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மௌனம் கலக நாஸ்தி. தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். அதற்குரிய பரிகாரங்களைத் தேடிக்கொள்ளவும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய தனுசு ராசிநாதன் குரு அஸ்தமனமாக இருக்கிறார். (பிப்ரவரி 20 முதல் மார்ச் 22 வரை.) அவர் 1, 4-க்குடையவர். அவருக்கு சாரம் கொடுத்த ராகு ஜென்மத்தில் இருப்பதால், அடிப்படை கௌரவ பாதிப்புகளோ சௌகரியக் குறைவுகளோ ஏற்படாது என்றாலும் மன சலனமும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் சிலருக்கு இருக்கலாம். குரு 4-க்குடையவர் என்பதால் சிலருக்கு தேக ஆரோக்கியத்தைப் பற்றிய கவலையும், சிலருக்கு சௌகரியமான வீடு அமையவில்லையே என்ற கவலையும், சிலருக்கு கட்டிட வேலையைப் பூர்த்தி பண்ண முடியவில்லையே என்ற கவலையும் ஏற்படும். வாகனங்கள் வைத்திருப்போருக்கு தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். அல்லது வாகனப் பரிவர்த்தனை ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் முன்னேற்றத்திற்குரிய அமைப்புகளும் தாமதப்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடையுங்கள். குரு பலம் பெறும்போது எல்லாம் நீங்கள் நினைத்ததற்கு மேல் வளமாக நலமாக நடந்தேறும். குரு பார்வை 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் ஆனந்தமும் அமைதியும் நிலவும். தெய்வ வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நிறைவேறும். பணப் பற்றாக்குறை இல்லாமல் வரவு- செலவு ஓடியடையும்.

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி 9-ல் இருப்பதால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் அதிகமாக இருக்கும். சனிக்கு வீடு கொடுத்த புதன் ஜென்ம ராசிக்கு 2-ல் பரிவர்த்தனையாக இருப்பதால் சனி- புதன் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். அதனால் தாராளமான வரவு- செலவுகளும் தடையில்லாத பணப் புழக்கமும் இருக்கும். 7-ல் செவ்வாய் நீசமாக இருந்தாலும் களஸ்திர காரகன் சுக்கிரன் 3-ஆம் தேதி மீனத்தில் உச்சம் பெறுவதால் கணவன்- மனைவிக்குள் பரஸ்பரம் அந்நியோன்யம் நிலவும். முரண்பட்ட கருத்துகள் மாறி அனுசரிப்புத் தன்மை உண்டாகும். சிலரின் மனைவிக்குத் தொழில் யோகமும் உத்தியோக வாய்ப்பும் உருவாகலாம். உங்களுக்கும் தொழில் வளமும் மேன்மையும் புதிய திட்டங்களும் உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் அதிகமாகும். எவ்வளவு விசுவாசமாகவும் உண்மையாகவும் பாடுபட்டாலும் பாராட்டு எதிர்பார்க்க முடியாது. பாராட்டும் பரிசும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; பழி சொல்லாமல் இருந்தால் போதும் என்று ஆறுதல் அடையுங்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இல்லாவிட்டால் சகோதர வகையில் ஒரு சிலர் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; நீரடித்து நீர் விலகாது என்ற பாலிசியைக் கடைபிடிக்கவும்.


கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிநாதன் சனி 8-ல் மறைந்திருக்கிறார். சனிக்கு சாரம் கொடுத்த சூரியனும் வீடு கொடுத்த புதனும் ஜென்மத்தில் இருந்தாலும் அவர்களுக்குள் 6, 8-ஆக இருப்பதால், உங்களுக்கு யாரும் விரோதிகள் இல்லை என்றாலும் உங்களை மற்றவர்கள் விரோதக் கண்ணோட்டத்தோடே பார்ப்பார்கள். எப்போதும் உண்மையாகவும் எதார்த்தமாகவும் நீங்கள் நடந்து கொண்டாலும் மற்றவர்களுக்குக் குற்றமாகவே தெரியும். உள்ளதை சொன்னால் பொல்லாப்பு வரத்தானே செய்யும். இது கும்ப ராசிக்கே பொதுவான விதி என்றாலும், இப்போது அட்டமத்துச்சனி காலத்தில் அது முக்கியத்துவம் ஆகிவிடும்; உங்களை அதிகம் கவலைப்பட வைக்கும். செவ்வாய் சகோதர காரகன் 6-ல் மறைந்த வக்ரமாகி நீசப்படுவதால், உடன் பிறந்தவர்கள் வகையில் உங்கள் பரந்த மனப்பான்மையைப் புரிந்துகொள்ளாமல் உங்களை நோகடிப்பார்கள். மார்ச் 3-ஆம் தேதி சுக்கிரன் 2-ல் உச்சமானதும், ராசிநாதன் சனியின் பார்வையைப் பெறும் காலம் பொருளாதார நெருக்கடி நிலை மாறும். தாராளமான வரவு- செலவும் பணப் புழக்கமும் உண்டாகும். புதியவர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் எதிர்பார்க்கலாம்.


மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிநாதன் குரு 12-ல் மறைந்திருப்பது ஒரு வகையில் பலக்குறைவு தான். எடுத்த வேலைகளைத் தொடுத்து முடிக்கவும் வேகமாக விரைந்து நிறைவேற்றவும் விரும்பலாம். ஆனால் நேரம் காலம் ஒத்துழைக்காமல் தடை, தாமதம் ஏற்படும். 2, 9-க்குடைய செவ்வாய் நீச ராசியில் வக்ரப்பட, சனி ஜென்ம ராசியைப் பார்க்க, ராசிநாதன் குருவும் 12-ல் மறைந்து சனி- குரு, செவ்வாய்- குரு என 6, 8-ஆக அமர்ந்திருப்பதால் அன்புத் தொல்லைகள் அதிகமாகும். வீண் விமர்சனமும் காரியத்தடைகளும் தேவையற்ற விரயங்களும் திடீர் பயணங்களும் உண்டாகி உங்களுக்கு சந்தோஷக் குறைவை ஏற்படுத்தும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளிப் போவது மன வருத்தத்தை உண்டாக்கும். 4-ஆம் இடத்துக் கேதுவும் அவரைப் பார்க்கும் சனியும் ஆரோக்கியக் குறைவையும் அதனால் மனச் சங்கடத்தையும் உருவாக்கும். என்றாலும் 2-ல் சுக்கிரன் 3-ஆம் தேதி உச்சம் பெறும்போது பொருளாதார நிறைவும் தேவையான அளவு காரியங்கள் நிறைவேறப் பணப் புழக்கமும் கிடைப்பதால் மற்ற கவலைகளை மறந்து ஆறுதல் அடையலாம். 7-ல் சனி இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த புதனும் சாரம் கொடுத்த சூரியனும் கும்பத்தில் பரிவர்த்தனை பெறுவதால், எந்த பாதிப்பும் இல்லாமல் மனைவி, குடும்பம், மக்கள் வகையில் நற்பலன்கள் உண்டாகும்; துர்பலன்களுக்கு இடமில்லை.

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: