நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

09:32 PM கூட்டாட்சி தொடரும். கொலைகாரர்களுக்கும் ஊழல் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கும் தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார.

09:27 PM மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர், லசந்த விக்ரமதுங்க எழுதினார். அது தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வரும் நேரம் பார்த்து அவரை படுகொலை செய்துவிட்டனர் என அமைச்சர், ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

09:12 PM இன்றைய அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அதனை இல்லாதொழிக்கச் செய்யவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

09:03 PM மகிந்த அணியினர், டைக் ​கோட்டுடன் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளமையானது இன்று இரவில் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கே என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

08:59 PM பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உரையாற்றிக்கொண்டிருக்கும்போது சபையில் குழப்பம்.

08:56 PM திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் என்ற வகையில் நடுநிலைமையாக செயற்பட வேண்டும் என ஐ.தே.கவினர் வலியுறுத்தியுள்ளனர். 

08:52 PM பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

08:51 PM நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாபெரும் வெற்றிக் கிடைக்கும் என குறிப்பிட்ட அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திற்குள் இடையூறாக இருப்பவர்களை அரசில் இருந்து விலக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

08:47 PM கண்டி வன்முறையோ அல்லது பிணைமுறி மோசடியோ நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முதன்மையான காரணிகள் இல்லை என தெரிவித்த அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ எதிரணியினரின் இரட்டை நாடகமே காரணம் எனவும் குறிப்பிட்டார்.

08:44 PM ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் சிலர் எதிராக வாக்களித்தாலும், சூரியன் உதித்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதி என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

08:42 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைந்தவர்களே நாடாளுமன்றில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் நான் உயர் தரம் சித்தியடைந்திருக்கிறேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

08:41 PM நாங்களே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம். நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்து எங்களுக்கு வெற்றிப்பாதையை வழிவகுத்து கொடுத்தமைக்கு நன்றி என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

08:38 PM நான்கு தடவைகள் பிரதமராகும் தகுதிப்பெற்றவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

08:36 PM மன நலம் பாதிக்கப்பட்டவர்களே பொதுஜன பெரமுனவினர் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

08:34 PM நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்தவர் தற்போது நாடாளுமன்றத்தில் இல்லை என்பது வெட்கத்திற்குரியது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

08:33 PM அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

08:28 PM 23 இலட்ச பேருக்கு காணியுரிமை இல்லை. இவ்வருடத்துக்குள் அதனைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர், அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார்.

08:27 PM சமூர்த்தி நிதி நிறுவனங்களை நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என தான் இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர், அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

08:22 PM மரண தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் சிலர் என் முன்னாள் அமர்ந்துக்கொண்டு எங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர், அஜித் பி​​. பெரேரா தெரிவித்தார்

08:18 PM இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

08:12 PM நாடாளுமன்ற உறுப்பினர், சத்துர சேனாரத்ன உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

08:08 PM அரசாங்கமே அரசாங்கத்திற்கு எதிராக உள்ளது என இராஜாங்க அமைச்சர், ரீ.பீ.ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

08:05 PM இராஜாங்க அமைச்சர், ரீ.பீ.ஏக்கநாயக்க உரையாற்றுக்கொண்டிருக்கிறார்.

08:02 PM பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் ஆதரவளிப்பவர்களுக்கு நாளை முதல் அரசாங்கத்தில் இடமில்லை.ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை தண்டிப்பதற்கு விரைவில் விசேட உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக தண்ட​னை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். 

07:53 PM ஐக்கிய தேசிய கட்சியில் பிளவு ஏற்பட வேண்டும் என்று நினைத்தவர்களின் கட்சிகள் தற்போது 2,3 பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், ​ஹெட்கர் அப்புஹாமி தெரிவித்தார்.

07:46 PM நாடாளுமன்ற உறுப்பினர், ​ஹெட்கர்  அப்புஹாமி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

07:40 PM மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், அர்ஜுன மஹேந்திரன் பிணைமுறி விவகாரங்கள் தொடர்பில் விசாரணை செய்யும்போது, ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியளிக்கும்போது பிரதமரின் ஆலோசனையின்படியே தான் செயற்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

07:34 PM நாட்டை நேசிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவும்  என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

07:25 PM நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில்,341 உள்ளூராட்சி மன்றங்களில் 240 உள்ளூராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியிருக்கின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்

07:22 PM நல்லாட்சி அரசு ஸ்தாபிக்கப்பட்டு 3 வருடங்களும், 14 நாட்களும் ஆகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

07:21 PM நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

07:20 PM அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்துக்கொள்ளவும் என்று, இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

07:15 PM அரசாங்கத்தில் இருப்பவர்கள், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துவிட்டு எவ்வாறு அதே அரசாங்கத்தில் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

07:07 PM பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம். எங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

07:05 PM நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதால் சுதந்திரக் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டார்.

07:04 PM முதுகெலும்பில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

07:03 PM தனியாக பயணிக்க வேண்டும் என்பதை கட்சியின் தலைவரே தீர்மானிக்க வேண்டும். இதன்படி 2 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி தெரிவித்தார்.

06:59 PM மத்திய வங்கியில் ஊழல் மோசடி இடம்பெற்றது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும் என்று, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

06:54 PM தற்போது நாடாளுமன்ற உறுப்பினர், விஜயபால ஹெட்டியாராச்சி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

06:53 PM அரசுக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பிரதமர் ரணில் உறுதியோடு இருப்பதால் அவரை இல்லாது செய்ய பலரும் முயற்சித்து வருகிறார்கள் என்று வஜிர அ​பேவர்தன தெரிவித்தார்.

06:45 PM அமைச்சர் வஜிர ​அபேவர்தன உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

06:40 PM உலக மக்கள் அனைவரும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் வரி ஊழல் செய்திருக்கிறேன். குழந்தை செய்யும் தவறுக்கு அப்பாவை குறை சொல்ல முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

06:37 PM மத்திய வங்கியில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

06:36 PM நான் மற்றவர்கள் போல பட்டப்படிப்பு எல்லாம் படிக்கவில்லை. வெலிக்கடை சிறைச்சாலையில் ஒன்றரை வருடங்கள் இருந்ததே எனது பட்டப்படிப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே குறிப்பிட்டார்.

06:30 PM எதிர்காலத்தில் புதிய உத்​வேகத்துடன் ஐக்கிய தேசிய கட்சியினை நாம் முன்னோக்கிக் கொண்டுச் செல்வோம். 2020 ஆண்டுக்கான தேர்தலில் வெற்றிப் பெறுவதினை இலக்காகக்கொண்டு செயற்ப​டுவோம் என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

06:28 PM கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒக்சிஜன் கிடைத்துள்ளது. ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்தவர்களுக்கு நன்றி எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ​குறிப்பிட்டார்.

06:25 PM 2015 ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்றப் பின்னர், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் நாம் வெற்றிக்கொண்டுள்ளோம், என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

06:15 PM நாடாளுமன்ற உறுப்பினர், அஜித் பி.பேரேரா உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

06:13 PM நம்பிக்கையில்லா பிரேரணை ஆதரிக்கின்ற அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்த தரப்பினரை தாம் ஆதரிக்கவில்லை எனவும் அநுரகுமார தெரிவித்தார்.

05:40 PM சமாதானமான அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக, குற்றவியல் அரசாங்கத்தை உருவாக்கினார்கள் என அநுரகுமார தெரிவித்தார்.

05:24 PM

05:12 PM நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாதென தெரிந்தே மக்கள் விடுதலை முன்னணி இதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தது.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த போது, கண்டி சம்பவத்தை  பிரதமரால் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரமுடியாமைக்கு போனமையும் நாம் இதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான ஒரு காரணம் எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
 
  

05:08 PM நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெறுமாயின், ராஜபக்ஷ முகாமுக்கு வாய்ப்பாக அமையும் என்பது தமக்கு தெரியுமென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

04:55 PM 2008 ​ஆம் ஆண்டு ஆறுமுகனை கண்டி மாவட்டத்துக்கு வரவிடாமல் அடித்து வி​ரட்டியவரே மஹிந்தாநந்த அளுத்கமகே என திலகராஜ் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சை உருவாக்கியவர் பிரதமர் அவருக்கு நாம் நன்றி கடன்பட்டுள்ளோம்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

04:51 PM 2008 ஆம் ஆண்டிலிருந்து பிணைமுறி விவகாரம் இடம்பெற்றுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

04:38 PM  நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது எமது உரிமையென நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

04:36 PM யுத்தம் செய்த இராணுவத்தளபதியை சிறையில் அடைத்தனர். 10 ஜெனரல்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள். இன்று இராணுவத்தினர் பழிவாங்கப்படுவதாக தெரிவிப்பதாக  பொன்சேகா தெரிவித்தார்.

04:33 PM கடந்த காலத்தில் ஹெய்ஜின் உடன்படிக்கையில் கையெழுத்திட்டமைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.

அவன்கார்ட் மூலம் மாத்திரம் கோட்டாபய 11 பில்லியனை இழந்தாரென, அமைச்சர் பொன்சேகா தெரிவித்தார்.

ரஞ்சித் சொய்சா திருடி விட்டே நாடாளுமன்றத்திற்கு வந்ததாக அமைச்சர் பொன்சேகா குறிப்பிட்டார்.

04:20 PM கண்டி சம்பவத்தின் முழு பொறுப்பையும் பிரதமர் மீது சுமத்துவது அசாதாரணமானது என பொன்சேகா தெரிவித்தார்.

உங்களது எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரும்,  அமெரிக்க பிரஜையுமான கோட்டாபயவுக்கே இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை வழங்க ஆசைப்படுகின்றீர்கள் என அமைச்சர் பொன்சேகா குறிப்பிட்டார்.
 

04:11 PM கடனிலிருந்த நாட்டை பொறுப்பேற்று முன்னேற்றுவதற்காக நாம் பாடுபடுகின்றோம்

04:09 PM பிரதமரை துரத்த விட்டு இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் கனவிலிருக்க வேண்டாம்

04:08 PM 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் உழைக்கக் கூடியவரே பிரதமர்

04:07 PM பிரமதர் மீது எமக்கு நம்பிக்கையுள்ளதென அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

03:56 PM கிந்தொட்ட ‌மற்றும் திகன பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின்போது அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தது. பொலிஸாரும் அதனையே கடைப்பிடித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.  

03:48 PM மத்தியதர வர்க்க மக்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.  

03:46 PM 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

03:42 PM பிணை முறி மோசடி தொடர்பில் தராதரம் பாராது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

03:36 PM ஏப்ரல் 9ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடையுமெனவும் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார். 

03:32 PM ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இன்று நள்ளிரவுக்குள் மாற்றமடையும் எனவும் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார். 

03:27 PM பிரதமருக்கு சேறு பூசும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவில்லை எனவும் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார். 

03:24 PM ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட வேண்டும், அதுவே நியாயமான நடைமுறை எனவும்  மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார். 

03:22 PM மக்கள் ஆணையில்லாத பிரதமரே நாட்டை ஆள்கின்றார் எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார். 

03:21 PM மத்திய வங்கி பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்ட ஒரு தொகுதி பணம் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார்.

03:16 PM வடக்கு, கிழக்கில் கடமையாற்றும் அனைத்து அரச அதிகாரிகளும், ஊழியர்களும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களே எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.     

03:14 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களாக நிபந்தனையற்ற ஆதரவை இந்த அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தாலும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.    

03:11 PM பிரதமர் ஒருநாளும் ஊழலில் ஈடுபட்டதில்லை நாடாளுமன்றில் உள்ள அனைவரும் இந்தப் பி​ரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கம​கே தெரிவித்துள்ளார்.  

03:04 PM இன்று அல்லது நாளை இந்த அரசாங்கம் பதவியிழக்குமானால், பிணை முறி விசாரணையில் முதலில் விசாரணைக்கு முகங்கொடுக்கப்போகின்றவர் பிரதமரே எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

02:59 PM சபாநாயகர் கரு ஜயசூரிய அக்கிராசனத்தில் அமர்ந்தார்.

02:58 PM பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் வைத்து அரஜுன மஹேந்திரனை சந்தித்தாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

02:55 PM எமது பிரதமருக்கும் எமக்கும் இடையில் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

02:52 PM அர்ஜுன மஹேந்திரனை நியமித்​த குற்றத்துக்காக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவீர்களாயின், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 100 பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என  கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார். 

02:50 PM கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களே இந்த நம்பிக்கையில்லாப் பிரேர​ணையை கொண்டுவந்துள்ளார்கள் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

02:47 PM இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமருக்கு எதிரானது மாத்திமல்ல, அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரானது. நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

02:44 PM அர்ஜுன மஹேந்திரனை கொண்டு வந்தது யார்? அவருக்கு ஆதரவு வழங்கியது யார்? எனவும் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பியுள்ளார். 

02:34 PM தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதியே விரும்பியதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.  

02:28 PM அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் உரையின்போது சபையில் குழப்பம்.

02:22 PM தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். ஜனாபதியின் அதிகாரங்களை முழுமையாக இல்லாமல் செய்யாமல் சில திருத்தங்க​ளை மேற்கொள்ளவும் நாம் முயற்சித்தோம் எனினும் சாத்தியப்படவில்லை எனவும் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.  

02:19 PM அரசாங்கம் சர்வதேசத்தின் ஆலோச​னைகளைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுக்கிறது எனவும் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

02:14 PM நம்பிக்கையில்லாப் பிரே​ரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

02:13 PM கட்சிக் கொடிகளை மறந்து நம்பிக்கையில்லாப் பிரே​ரணைக்கு ஆதரவு வழங்குமாறும் கம்பன்பில அழைப்பு விடுத்துள்ளார். 

02:09 PM நம்பிக்கையில்லாப் பிரே​ரணையில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி பிரதமர் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளே எனவும் கம்பன்பில தெரிவித்துள்ளார். 

02:04 PM கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சர்வதேச ரீதியில் நான்கு அரச தலைவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாகவும் உதய கம்பன்பில வலியுறுத்தியுள்ளார்.  

02:02 PM நம்பிக்கையில்லாப் பிரே​ரணையில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையே என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

01:58 PM இந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்து 62 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

01:55 PM ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமாக குறைக்க முடிந்தது. வௌ்ளை வான் கலாசாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. கருத்து சுதந்தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

01:54 PM நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அரசாங்கத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

01:43 PM இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அலுவல்களை பார்வையிட மாணவர்களை அனுமதிக்காவிட்டாலும், திரையில் அனைவரும் அவதானிப்பதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தனிப்பட்ட பழிவாங்கல்களோ, பொறாமையினாலோ  கொண்டுவரப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

01:38 PM 62 இலட்ச வாக்குகளில் 5 இலட்சம் வாக்குகளைப் பெற்ற தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியலில் தெரிவானவர்கள் வீட்டுக்கு அனுப்ப முயல்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இந்துனில் துசார தெரிவித்தார். 

எமது தலைவரை நாம் பலி கொடுக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

01:33 PM இரண்டு திருடர்களின் ​கையெழுத்துடனான நாணயத்தாளைக் கொண்டு பொருட்களைக் கொள்வனவு செய்யும் துர்திஸ்ட நிலைக்கு இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

01:29 PM இதுவரை நாடாளுமன்றத்தில் 4 நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதெனவும், இதில் அமிர்தலிங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

01:28 PM எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுடைய நேரத்தில் 5 நிமிடத்தையும், ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியினுடைய நேரத்தில் 3 நிமிடத்தையும் மேலதிகமாகப் பெற்று பந்துல குணவர்தன உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

01:24 PM மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் காரணமாக நாட்டில், 2000 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

01:13 PM நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள சிலர் இன்னும் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லையென அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

பல வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் தான் இதற்கு முக்கிய காரணமாகவுள்ளதாகவும், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வாகவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர்கள் பார்க்கின்றனர். எனினும் அடியில் வேறொரு விளையாட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

01:07 PM தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பயன்படுத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க கூடாது என்ற இனவாத சிந்தனை ஒன்று காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரமும், பலமும் காணப்படக் கூடாது என்பதே இதன் இனவாதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

12:39 PM தற்போது கூட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

12:37 PM நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் முன்னெடுக்கவுள்ள வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகள் கிடைக்குமெனவும், 44 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையுமென, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

12:33 PM

தன்னுடைய நாடாளுமன்ற வரலாற்றில் எத்தனை​யோ நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பார்த்துள்ள நிலையில், ஆரம்பிக்கும் போதே காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணையை இப்போதே பார்ப்பதாக அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.&l

12:32 PM கூட்டு எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இன்றைய விவாதத்தின்போது, நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துக்கொள்ள வேண்டும் என, சபாநாயக்கர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12:31 PM

இந்த நாட்டின் பாரிய மக்கள் ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்​கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

12:31 PM

Views ({{hitsCtrl.values.hits}}) | Comments (0)
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.