DEVELOPING STORY

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ந​டைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இன்று நடந்த சம்பவம், மிகவும் வேதனைக்குரியதாகும். 113 பெரும்பான்மை இல்லையாயின், இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் வந்திருந்தனர். 113 பெரும்பான்மை இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக இருக்கவேண்டும்” - குமார் வெல்கம

“பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார். அவரே, புதிய அரசாங்கத்துக்குத் தலைமை தாங்குவார்” - தினேஸ் குணவர்தன

“மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது” - சுமந்திரன் எம்.பி

“எனது 25 வருட அரசியல் வாழ்வில், இன்றைய தினத்தை ஒரு கரிநாளாகப் பார்க்கிறேன். இப்போது  அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள்” - ரவூப் ஹக்கீம் எம்.பி

“நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இப்போது, அவ்வாறான முயற்சியை யார் செய்தார்களென்பது புலனாகிறது. இந்த நாட்டின் ஜனநாயகம், நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்றது” - அநுரகுமார திசாநாயக்க

“மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட்டது.” - பாட்டலி சம்பிக்க ரணவக்க

சபாநாயகர், மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், மிளகாய்த்தூள் கலந்த நீர் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக விஜித்த ஹேரத், காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எக்காரணம் கொண்டும், சபை அமர்வை ஒத்திவைக்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர், பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன், சபைக்குள் செங்கோல் காண்டுவரப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து சபைக்குள் பிரவேசித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அரசாங்கத்துக்கு எதிராகவும், ஜனாதிபதியின் ஆலோசனைப்படி பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் அறிவித்தார்.

அத்துடன், பெயர் கூறி வாக்கெடுப்பை நடத்தக்கூடிய நிலைமை தற்போது இல்லாத காரணத்தால், பிரேணைக்கு ஆதரவா இல்லையா என்பதை, கண் மட்டத்தில் கண்டு வாக்கெடுப்பு நடத்துவதாகவும் தெரிவித்தார். 

அந்த வகையில், பிரேரணைக்கு ஆதரவா என்றும் ஆதரவில்லையா என்றும் சபாநாயகரால் கோரப்பட்ட நிலையில், பெரும்பான்மை வாக்குகளால் பிரேரணை நி​றைவேற்றப்படுவதாகத் தெரிவித்த சபாநாயகர், எதிர்வரும் 19ஆம் திகதி வரை, சபை அமர்வை ஒத்திவைத்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன், நாடாளுமன்றத்துக்குள் செங்கோல் கொண்டுவரப்பட்டதோடு, சபாநாயகர் கரு ஜயசூரியவும், சபைக்குள் வருகை தந்துள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கிராசனத்தைச் சூழ்ந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, அக்கிராசனத்தில் அமர்துள்ளார்.

இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதில் தாமதம் நிகழ்கின்றது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் கலந்து​கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆளும் தரப்பினர் சபை ஆரம்பமாவதற்கு முன்னரே, சபாநாயகர் ஆசனத்தை சூழ நின்று கோசமெழுப்பி வருகின்றனர்.

அத்துடன் எ.பி அருந்திக பெர்னாண்டோ சபபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றம் சபை நடவடிக்கை இன்று 1:30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

அதற்கு முன்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தாலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், ஒவ்வொரு கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக்கூட்டங்கள் நடைபெற்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது. ஐக்கிய தேசிய முன்னணியின் குழுக்கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலும், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம எதிரணியின் முதற்கோலாசானும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவின்  தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பல்லடுக்குப் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பொலிஸாருக்குப் மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன், ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிலரும் கடமையிலிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நாடாளுமன்றத்துக்குள் நுழையும் சகலரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், உடற்சோதனையை நாடாளுமன்ற பொலிஸார் மேற்கொண்டனர். இந்நிலையில், மடிகணினி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் யாவற்றையும் இயக்கச் செய்து, விசேட அதிரடிப்படையினர் துருவித் துருவி சோதனைச் செய்தனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 க்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு நிலையியல் கட்டளையின் 22  ஆவது உறுப்புரைக்கமைய நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெயரில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அறிவதற்கு, இன்று (16), பெயரில் வாக்கெடுப்பு நடத்தப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15), இதற்கு இணக்கம் தெரிவித்தாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தை அலட்சியப்படுத்தாது அனைவரும் நடந்துகொள்ள வேண்டுமென, ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாகவும், நாடாளுமன்றத்தில் முறையற்ற விதத்தில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுப்பதாக கூறினாரெனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரித்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

- பா.நிரோஸ்

ஜனநாயக விழுமியங்களைப் பேணி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க, சுயாதீன நடைமுறையொன்று பேணப்பட்டு, முறையான வாக்கெடுப்பொன்று நடைபெறுமாக இருந்தால், அந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் தலைமையிலான, ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை, நேற்று (15) மாலை சந்தித்துப் பேசிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு எதிராக, நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான வாசகங்களை, ஏற்க மறுத்துள்ள ஜனாதிபதி, சரியான வாசகங்கள் அடங்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று மீண்டும் உரிய முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தந்தால், அதனைத் தாம் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளாரெனக் கூறப்படுகிறது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், குறித்த பேச்சுவார்த்தையின் போது, ஜனாதிபதியினால் இரண்டு விடயங்கள் பற்றிப் பேசியதாகவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் இணக்கப்பாட்டைத் தெரிவித்ததாகவும் அதேபோல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைகள் குறித்தும் அவருடைய நிலைப்பாட்டை அறிவித்தாருப்பதாகக் கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இன்னும் ஓரிரு நாள்களில், தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகள், தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்ததாகக் கூறிய அவர், ஆனால், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென ஜனாதிபதியிடத்தில் தாங்கள் தெளிவுபடுத்தியதாகவும் கூறினார்.

இதன்போது, பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு இடம்கொடுப்பதாக, ஜனாதிபதி ஒப்புகொண்டாரா என ஊடகவியலாளர்கள் வினவிய போத, நிச்சயமாக எனவும் மனோ கணேசன் பதிலளித்தார்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல், மிகவும் தீர்க்கமான கலந்துரையாடலான அமைந்திருந்ததெனவும் இன்று (நேற்று) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நவடிக்கைகள் குறித்தே, ஜனாதிபதியுடன் தாங்கள் கலந்துரையாடியதாகவும், இதன்போது முக்கியமான இணக்கப்பாடொன்றும் எட்டப்பட்டதாகவும் கூறினார்.

இந்தச் சந்திப்பில், சபாநாயகர், எதிர்கட்சிசத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு, காரசாரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என்றும் மாறாக வெளிப்படையான பேச்சுவார்த்தைகளே  இடம்பெற்றதாகவும், ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எம்மை வண்ணத்துப்பூச்சி கூட்டமென்றனர். வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், ஆனால் அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

................................................................................................................................................................

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்தவுக்கும் நாம் சவால் விடுக்கின்றோம் அதிக நாள்கள் செல்ல முன்னர் 70 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் அவரை துரத்த தயாராகவிருக்கின்றனர் என்றார்.

நாம் 10 தேர்தல்களுக்கு தயாராகவிருக்கின்றோம். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு நாம் தயார் எமக்கு ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாகத் தாருங்கள் என்றார்.

இதேவேளை, முடிந்தால் ஜனாதிபதித் ​தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்​கொண்டு தெரிவித்துள்ளார்.

Views ({{hitsCtrl.values.hits}}) | Comments (0)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.