TamilMirror.lk 9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் - Tamilmirror Online
X

X

2024 மார்ச் 28, வியாழக்கிழமை

9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர்

2024 மார்ச் 28 , பி.ப. 07:32 -     - {{hitsCtrl.values.hits}}

9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) முற்பகல் ஆரம்பமாகியது.

 

12:20 PM

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொதுஜன பெரமுன ஒன்றிணைத்தது போன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, நாட்டுக்கான பொதுவான பயணத்தில் இணையுமாறு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும்  9ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். 

12:15 PM

நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க சிறந்த மாற்று வழிகள் இருந்தால் முன்வையுங்கள் என்றும், அது தொடர்பில் கலந்துரையாட தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்

12:14 PM

அரசியல் அபிலாஷைகளை மனதில் வைத்துக்கொண்டு, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதன் மூலமோ அல்லது அழுது கண்ணீர் வடிப்பதனாலோ,  நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், எதிர்கால இளைஞர்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலமே நாடு முன்நோக்கி நகர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

12:12 PM

நவீன மற்றும் வலுவான பொருளாதாரத்தை நோக்கி மாறும் வகையில் பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

12:10 PM

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை என்றும், பொருளாதார மற்றும் விஞ்ஞான ரீதியான தீர்வுகளே உள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

11:44 AM

ஒரு தீவு நாடாக எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பாதுகாப்பு வலையமைப்புகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படைகள், தொழில்நுட்ப சாதனங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

11:33 AM

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பல இலட்சம் ஏக்கர் காணிகளிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வீணாகும் காணிகளை அந்நிய செலாவணி மூலங்களாக மாற்றி பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

11:32 AM

தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தும் போது அரசியல் அல்லது வேறு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
 

11:11 AM

2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு  2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

11:07 AM

2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல்  முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது என்று ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

11:02 AM

2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த   சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க  எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

10:58 AM

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மைப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்த  முடிந்தது என்றும், இது சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

10:57 AM

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை   ஆரம்பித்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார் 

10:55 AM

ஜனாதிபதி தற்போது கொள்கை பிரகடன உரையை ஆற்றி வருகிறார்.

10:55 AM

9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) முற்பகல் ஆரம்பமாகியது.


  Comments -


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .