2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உயிரைக் குடிக்குமா உயர் குருதி அமுக்கம்?

Administrator   / 2017 மே 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்திய கலாநிநி சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.   
வைத்திய அதிகாரி.   
தேசிய வைத்தியசாலை - கொழும்பு. 

உயர் இரத்த அமுக்கம் என்றால் என்ன?  

உயர் இரத்த அமுக்கம் அல்லது உயர் இரத்த அழுத்தம், என்பது உங்கள் இரத்த அழுத்தம் ஆரோக்கியமற்ற அளவுக்கு அதிகரிக்கும் போது ஏற்படுகின்ற நிலையாகும்.   

உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவீடானது, உங்கள் இரத்தக் குழாய்களுக்கூடாக இரத்தம் எவ்வளவு விரைவாகக் கடந்து செல்கிறது என்பதையும், மனித இருதயம் தொகுதிப் பெருநாடியினூடாக இரத்தத்தை, ஒவ்வொரு துடிப்பின் போதும் அது உட்செலுத்தும் போது, தோற்றுவிக்கப்படும் எதிர்விசையின் அளவைக் கொண்டும் பெறப்படுகின்றது.   

மனிதஉடலில், இரத்தநாடிகள், நாளங்கள், மயிர்த்துளைக் குழாய்கள் என மூன்று வகையான இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன. இவற்றில் மிகமெல்லிய இரத்தக் குழாய்களான மிகக் குறுகிய இரத்தமயிர்த் துளைக் குழாய்களிலேயே இரத்த ஓட்டத்துக்கான எதிர்ப்புஅதிகரிக்கின்றது. இந்த மயிர்த்துளைக் குழாய்கள் மிகவும் குறுகலான விட்டத்தைக் கொண்டவை. 

 இதனாலேயே, இரத்த ஓட்டத்துக்குரிய உயர் இரத்தஅழுத்தத்தை வழங்கக்கூடியதாக இருக்கின்றது. நீண்டகாலமாக, அதிகரித்த இரத்த அழுத்தம் தொடர்ந்து காணப்படும்போது, இதயநோய்கள் உட்படப் பலநோய்கள், உடற்பிரச்சினைகள் ஏற்படலாம்.  

உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவான ஒன்றாகக் காணப்படுகின்றது. வரும் 2025 ஆம் ஆண்டளவில், உலகளாவிய ரீதியில், உயர் இரத்த அழுத்த நோயுடன் உயிர் வாழ்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, 1.56 பில்லியன் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.   

அமெரிக்காவில், சுமார் 75 மில்லியன் மக்கள் உயர் இரத்தஅழுத்தநோய் கொண்டவர்களாக உள்ளனர். இலங்கையில் உயர் குருதி அமுக்க நோயுடன் உயிர் வாழ்வோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.   

மேலும், அதிகளவில் மரணத்தை ஏற்படுத்தும் முதல் மூன்று முக்கிய நோய்களைக் காட்டிலும், உயர் இரத்த அழுத்தத்தினால் இருதய நோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகமாயுள்ளது.   

உயர் இரத்த அழுத்தம் என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாகக் காணப்படலாம். இந்தக் காலப்பகுதிகளில், நீங்கள் எந்த அறிகுறிகளையும் அவதானிக்காமல் விடலாம். எவ்விதமான அறிகுறிகளும் இல்லாமல், உயர் இரத்த அழுத்தம், உங்கள் இரத்த மயிர்த் துளைக் குழாய்கள் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.   

உயர் இரத்த அமுக்கத்தை மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மிக முக்கியம். வழக்கமான இரத்த அழுத்தம் அளவீடுகள் அல்லது பெறுமதிகள், உங்களுக்கும் உங்கள் டொக்டருக்கும் ஏதாவது மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். 

ஒரு தடவை, உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவீடு உயர்ந்து காணப்பட்டால், உங்கள் குடும்ப மருத்துவர், உங்கள் இரத்த அழுத்தத்தை மீண்டும் ஒருசில வாரங்களில் அளந்து பார்க்கலாம். இந்த அளவீடு சில வேளைகளில், உயர்ந்ததாக இருக்கலாம். அல்லது மீண்டும் சாதாரண அளவுக்கு வீழ்ச்சியடைந்தும் காணப்படலாம்.   

உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பரிந்துரைக்கப்படும் மருந்துகளை உள்ளெடுப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களையும் உள்ளடக்கியது. ஒரு ஒழுங்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லையானால், அதுமாரடைப்பு மற்றும் பக்கவாதம் உட்படப் பல மருத்துவப் பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும்.  

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் எவை?  

பொதுவாக, உயர் இரத்த அழுத்தம் எவ்விதமானஅறிகுறிகளையும் காட்டாமல், அமைதியான நிலையிலேயே இருக்கக் கூடியது. உயர் இரத்த அமுக்கம் உடைய நோயாளிகளில் பலர் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்க மாட்டார்கள். அறிகுறிகள் வெளிப்படையாகத் தோன்றும் அளவுக்கு கடுமையான நிலைகளை அடைவதற்குப் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் எடுக்கலாம். அப்படியிருப்பினும், இந்த அறிகுறிகள், மற்றைய மருத்துவப் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமையலாம்.  

உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் பின்வருமாறு:  

1. தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி.  
2. அடிக்கடி பய உணர்வு ஏற்படல்.   
3. அதிகரித்த பதட்டம் காணப்படல்.  
4. மூச்சு திணறல் ஏற்படல் அல்லது அதிகரித்த மூச்செடுக்கும் வீதம்.  
5. காலத்துக்குக் காலம் மூக்கில் இரத்தக் கசிவுகள்.  
6. தலைச்சுற்றல்.  
7. நெஞ்சுப் படபடப்பு ஏற்படல்.   
8. நெஞ்சுவலி ஏற்படல்.   
9. காணும் காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படல்.   

இந்த அறிகுறிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ள அனைவருக்கும் தோன்றாது. ஆனால், இந்த நிலைமைக்கான அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருப்பது அபாயகரமானதாக இருக்கலாம்.  

உங்களுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருப்பதைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி, உங்கள் வழக்கமான குடும்ப மருத்துவரிடம் காலத்துக்குக் காலம், இரத்த அழுத்தம் அளவீடுகளைப் பெறுவதாகும். பெரும்பாலான குடும்ப மருத்துவர்கள், உங்கள் ஒவ்வொரு சந்திப்பின் போதும் உங்களுடைய இரத்த அழுத்தத்தை அளவீடு செய்வார்கள்.  

உங்களுக்கு, உயர் இரத்த அழுத்தத்தின் வாசிப்பு உயர்வானதாக இருந்தால், உயர் இரத்த அமுக்கத்தின் அபாயங்களைப் பற்றி உங்கள் குடும்ப மருத்துவரிடம் பேசுங்கள். உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவீடுகளைக் காலத்துக்குக் காலம் சரிபாருங்கள்.

உதாரணமாக, நீங்கள் இதயநோய்க்கான குடும்ப வரலாற்றைக் கொண்டிருந்தால் அல்லது அந்த நிலைமையை அதிகரிக்கக் கூடிய ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருந்தால், உங்கள் இரத்த அழுத்தம், ஒரு வருடத்தில், இரண்டு முறை அளவிடப்படல் வேண்டும்.

இது சிக்கலான நிலைமைகள் தோன்றுவதற்கு முன்னர் அல்லது சாத்தியமான சிக்கல்களைச் சமாளிப்பதற்கு உங்களுக்கும் உங்கள் குடும்ப வைத்தியருக்கும் உதவும்.  

உயர் இரத்த அழுத்தின் வகைகள் என்ன?  

இரண்டு வகையான உயர் இரத்தஅழுத்தங்கள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் வித்தியாசமான காரணங்கள், அது தோன்றக் காரணமாக உள்ளன.   

(1) முதன்மை நிலை உயர் 

இரத்த அழுத்தம்   

முதன்மை நிலை உயர் இரத்த அழுத்தம் (Primary Hypertension) அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம் (Essential Hypertension) என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய உயர் இரத்த அழுத்தத்தை எந்த நேரத்திலும் அடையாளம் காணமுடியாத காரணத்தால், காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது.  

இரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும் காரணங்கள் என்ன என்பதை, மருத்தவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கவில்லலை. ஏதாவது ஒரு காரணி அல்லது பல காரணிகளின் கலவைகள், இப்பாத்திரத்தை வகிக்கலாம், சந்தேகிக்கக்கூடிய இந்தக் காரணிகள் பின்வருமாறு:  

1. மரபணுக்கள்: சில மக்களில் காணப்படும் உயிர் மரபணுக்கள், உயர் இரத்த அழுத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியநிலையில் உள்ளன. இவை, உங்கள் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட மரபணுக்கள் அல்லது மரபணுக்களில் காலத்துக் காலம் தோன்றும் மரபணுப் பிறழ்வுகள் அல்லது அசாதாரண மரபணுக்களாக இருக்கலாம்.  

2. உடற் தொழிலியல் மாற்றங்கள்: உங்கள் உடலில் ஏற்படும் பிழைகள் அல்லது செயற்பாட்டுக் குறைபாடுகள். இதனால் உங்கள் உடல் முழுவதும் ஏதாவது சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கலாம். இதில் பிரதானமானது உயர் இரத்த அழுத்தமாகும். உதாரணமாக, உங்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், உங்கள் உடலில் காணப்படும் உப்புகள் மற்றும் திரவத்தின் இயல்பான சமநிலையைப் பாதிக்கலாம். இந்த மாற்றம், உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.  

3. சுற்றுச் சூழல்காரணிகள்: காலப்போக்கில், குறைவடையும் உடலின் செயல்பாடுகள், மோசமான உணவுப் பழக்கவழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைத் தேர்வுகள் என்பன உங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தவறான வாழ்க்கை முறைத் தேர்வுகளினால், எடை அதிகரிப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம். அதிகஎடை அல்லது பருமனாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய ஆபத்தை, உங்களில் அதிகரிக்க முடியும்.  

(2).இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்

இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தமே மக்களில் பொதுவாகக் காணப்படும் வகையாகும். முதன்மை உயர் இரத்த அழுத்தத்தைவிடக் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்குரிய காரணிகள்;  

1. அண்மையில் தோன்றிய அல்லது நாட்பட்ட சிறுநீரக நோய்கள்.  
2. அதிகரித்த உடற்பருமனால் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்.  
3. பிறப்பிலேயே காணப்படும் இதய அமைப்புக் குறைபாடுகள்.  
4. தைரொய்ட் தொடர்பான பிரச்சினைகள்.  
5. உள்ளெடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள்.  
6. சட்டவிரோத போதை மருந்துகளின் பயன்பாடு.  
7. தொடர்ச்சியான மதுப் பாவனை.   
8. தொடர்ச்சியான புகையிலைப் பாவனை.   
9. அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினைகள்.  
10. சில நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினைகள்.   

உயர் இரத்த அழுத்தம் உள்ளதாவென எவ்வாறு கண்டறிவது?   

 உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிவதற்கு, இரத்த அழுத்தத்தை வாசித்து அறிவதே மிகச் சிறந்த வழிவகையாகும். பெரும்பாலான குடும்ப மருத்துவர்களின் கிளினிக்குகளில், உங்கள் வழக்கமான வருகையின் ஒரு பகுதியாக இரத்த அழுத்தம் அளவிடப்பட்டு குறிக்கப்படுகின்றன. உங்கள் மருத்துவரின் அடுத்த சந்திப்பில் இரத்த அழுத்த வாசிப்பை நீங்கள் பெறாவிட்டால், இரத்த அழுத்த வாசிப்பைச் சரிபார்க்கும்படிகோரமுடியும்.   

உங்கள் இரத்த அழுத்தத்தின் வாசிப்பு, உயர்ந்து காணப்பட்டால், சில நாட்களின் பின்னர் அல்லது வாரங்களின் பின்னர் உங்கள் குடும்ப மருத்துவர் உங்கள் இரத்த அமுக்க வாசிப்பை அல்லது அளவீட்டைப் பெறமுடியும். 

சிலவேளைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுதலான வாசிப்புகளைக் கோரமுடியும். ஒரேயொரு வாசிப்புக்குப் பிறகு ஓர் உயர் இரத்த அழுத்தம் எனக் கண்டறிந்து இறுதி முடிவெடுப்பது அரிதாகத்தான் காணப்படுகின்றது. உங்கள் குடும்ப மருத்துவர் உங்களுடைய நீடித்த பிரச்சினைக்கான சான்றுகளைக் காணவேண்டும். ஏனெனில், சுற்றுச்சூழல் காரணிகள், அதிகரித்த இரத்த அழுத்தத்துக்குப் பங்களிக்க முடியும்.   

அத்தோடு, இரத்த அழுத்தத்தின் அளவுகள், நாள் முழுவதும் மாறுபடுகின்றன. உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவீடுகள் மிக அதிகமாக இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவர் அநேகமாக பிரத்தியேகமாகச் சிலபரிசோதனைகளைச் செய்யும்படி உங்களிடம் கோரிக்கை வைக்கலாம். அவ்வாறான பரிசோதனைகள் பின்வருமாறு:  

1. பூரண சிறுநீர்ப் பரிசோதனை.  
2. இரத்தத்திலுள்ள எல்லாக் கொலஸ் ரோலின் அளவுகள்.   
3. உங்கள் இதயத்துக்கான மின்னியக்க நடவடிக்கைகளின் பரிசோதனை (ECG). 

நீங்கள் செய்யும் பரிசோதனைகளானது, உங்கள் உயர் இரத்தஅழுத்தத்துக்கும் காரணமான எந்தவொரு இரண்டாவது காரணிகளை அடையாளம் காண உதவும். இந்தப் பரிசோதனைகள் யாவும் முடிவடைந்த பின்னர், உங்கள் குடும்ப மருத்துவர், உங்கள் உயர் இரத்த அழுத்தத்துக்கான சிகிச்சையைத் தொடங்கக்கூடும். ஆரம்பத்திலேயே தொடங்கப்படும் சிகிச்சை முறைகள், உயர் இரத்த அமுக்கத்தால் உங்கள் உடலில் ஏற்படும்சேதத்தைஅல்லதுஉடல் செயலிழப்பைக் குறைக்கலாம்.  

உயர் இரத்த அழுத்தத்தின் அளவீடுகளை எவ்வாறு புரிந்து கொள்ளுவது?   

இரண்டு வகையான எண்களில், இரத்த அழுத்த வாசிப்பு பெறப்படுகின்றது. முதலாவது, மேற்பெறுதியாகக் காணப்படும். Systolic Blood Pressure எனப்படும். இந்த முதல் எண் பெறுமதி, உங்கள் இதயம் துடிக்கும்போது அல்லது சுருங்கும் போது ஏற்படும் இரத்தஅழுத்தத்தைக் குறிப்பிடுகின்றது.   

இரண்டாவது பெறுமானம், lic Blood Pressure எனப்படும். இந்த இரண்டாவது எண் பெறுமானம், உங்கள் இதயம் சுருங்கித் தளர்வடையும் போது, உங்கள் இரத்த நாடிகளில் ஏற்படுகின்ற இரத்த அழுத்தத்தை வாசிக்கின்றது.   
(அடுத்த வாரம் தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .