2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடுக்காய் மருத்துவம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காயகும். இது எண்ண முடியாதளவு மருத்துவ குணங்கள் கொண்டது. சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் வித்தை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

கடுக்காய் துவையல் சிறந்த மருந்தாகும். கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்சனைத் தீரும். அத்துடன் சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்தாக விளங்குகின்றது.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட்டு வர, இளநரை மாறுவதுடன், மூக்கிலிருந்து இரத்தம் கசியும் நோய்க்கு, கடுக்காய்த்தூளை நசியமிட்டுச்  சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.

 துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் இரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத  மருத்துவ விந்தையாகும். ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம்.

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

 

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

மேலும் இது திரிபலா நன்மைகளைத் தரக்கூடியதாகும். திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று விதமானவை சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று,  சர்க்கரை நோய்க்கும், மூலம், மற்றும் குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ  அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலா சூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் இரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம்  இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .