சுகவாழ்வுக்கு சவாலாகும் நீரிழிவு நோய்

DR.ச.முருகானந்தன்

இன்று மிக வேகமாகப் பரவி வருகின்ற தொற்றா நோய் நீரிழிவாகும்.பொதுவாக தொற்று நோய்கள் தான் சமூகத்தில் வேகமாகப் பரவுவதை அறிவீர்கள்.ஆனால் புத்தாயிரமாண்டின் ஆரம்பத்திலிருந்து மிக வேகமாகப் பரவலாகி மருத்துவ உலகுக்கும்,மக்களுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

நீரிழிவின் தாக்கத்தினால் துரிதமாக ஏற்படுகின்ற மாரடைப்பு,இதயநோய்கள்,ஸ்ரொக்,சிறுநீரக செயழிலப்பு,கண் பார்வை இழப்பு,அங்கவீனம் முதலான பாரதூரமான நோய்களும்,இவற்றால் ஏற்படுகின்ற மரணங்களும் நீரிழிவு பற்றி அதிகம் சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியுடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ள நீரிழிவு நோயாளர்கள் பல்வேறு ஆபத்தான நோய்களையும்,எதிர்நோக்கியுள்ளனர். இன்று கிளினிக்குகளில் சிகிச்சைப் பெறுபவர்களில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை முதலாவது இடத்தில் உள்ள போதும்,இந்த நோயின் அபாயம் பற்றிய தெளிவும்,விழிப்புணர்வும்,போதுமானதாக இல்லை.பரம்பரை பரம்பரையாக ஏற்படுகின்ற முதலாம் வகை நீரிழிவு நோயாளர்கள் பத்து வீதத்திற்கு குறைவானவர்களே இன்சுலினில் தங்கியிருக்கும் இவர்களை முதலாம் வகை நீரிழிவு நோயாளர்கள் என்கின்றோம்.இன்று வேகமாக அதிகரித்து வருகின்ற இரண்டாம் வகை நீரிழிவு மனிதனது தவறான வாழ்க்கை முறைகளிலாலேயே ஏற்படுகின்றது.நீரிழிவு நோயாளர்களுள் 90 வீதமானோர் இவர்களே.

அதிகரித்து வரும் இரண்டாம் வகை நீரிழிவு

இரண்டாம் வகை நீரழிவு நோயாளர்களில் இன்சுலின் சுரக்கப்படுகின்ற போதிலும், அதன் தாங்குதிறன் குறைக்கப்படுவதனாலேயே நோய் ஏற்படுகின்றது. உடற்பருமனுக்கும்,இரண்டாம் வகை நீரிழிவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கவோ அல்லது பிற்போடவோ முடியும்.நீரிழிவு நோய் வராமல் தடுப்பதிலும்,வந்த பின்னர் கட்டுப்படுத்தும் உணவு முறையும்,உடற்பயிற்சியும்,மன அழுத்தமற்ற வாழ்க்கையும் இன்றியமையாதனவாகும்.

முதலாம் வகை நீரிழிவு ஏற்படாமல் தடுப்பது முடியாது.ஏனெனில் இது மரபணு தொடர்புடன் வருவதாகும்.இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படுவதில் பல்வேறு காரணிகள் பங்காற்றுகின்றன. இவர்களிலும் பாரம்பரியமாக ஏற்படலாம்.எனினும் மரபணுத் தொடர்பு இருப்பதில்லை.இவர்களின் கணையத்தில் போதியளவு இன்சுலினை பீற்றா கலங்கள் சுரக்கின்ற போதும்இன்சுலினைப் பயன்படுத்துவதில் தடைகள் இருப்பதினாலேயே குருதிக் குளுக்கோசின் அளவு அதிகரிக்கின்றது.குறுதியில் குளக்​கோசின் அளவு அதிகரிப்பதையே நீரிழிவு என்கிறோம்.தற்போது 10 மணித்தியாலம்உணவின்றி இருந்து விட்டு அளவிடும் குருதி குளுக்கோஸ்(70-100)என்ற அளவில் இருப்பதையே சாதாரண நோயற்ற நிலை என்கிறோம்.இதைவிட அதிகரிக்கும் நிலை நீரிழிவு ஆகும்.சிறிய அதிகரிப்பாயின் உடற்பயிற்சி,உணவில் கட்டுப்பாடு(கலோரி பெறுமானம் குறைந்த உணவுகள்) என்பவற்றால் சிறிது காலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.120 மில்லிகிராம் என்ற அளவைத் தாண்டினால் மருந்தும் பாவிக்க வேண்டும்.இவர்களில் இன்சுலின் சுரப்பை அதிரிக்கக் கூடிய மருந்துகளையும்,இன்சுலினுக்கு எதிரான நிலையைத் தடுக்கும் மருந்துகளும் பாவிக்கலாம்.அத்துடன் மாப்பொருள்,கொழுப்பு,எண்ணெய் குறைவான உணவுகளும்,உடற்பயிற்சியும்இன்றியமையாதன.மனஅழுத்தமின்றி போதிய ஓய்வும் இன்றியமையாதவை.

நீரிழிவின் அறிகுறிகள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் வெளித் தெரிவதில்லை.நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது அதிக தாகம்,அடிக்கடி பசித்தல்,கூடுதலாக சிறுநீர் கழித்தல்,குறிப்பாக இரவில் அதிக சலம் போதல்,களைப்பு,எடைகுறைதல்,முதலான அறிகுறிகள் தோன்றும்.புண்கள் ஆறாமை,பாலுறுப்புக்களில் தொற்று என்பனவும் ஏற்படலாம்.

நோய் தீவிரமடைந்து உறுப்புக்கள் பாதிக்கப்படும் போது கண்பார்வை குறைபாடு,மார்பு வலி,மயக்கநிலை உட்பட பல அறிகுறிகள் தோன்றலாம்.மாரடைப்பு,கோமா மயக்கநிலை,பாத விறைப்பு,பாதங்களில் வலி,பாலுறவில் ஈடுபாடின்மை என்பனவும் ஏற்படலாம். கருத்தறித்தவர்களில் கருச்சிதைவு,கடினமான பிரசவம்,பெரிய குழந்தை,குறைபாடுடைய குழந்தை என சிக்கல்கள் ஏற்படலாம்.

கட்டுப்பாடற்ற நீரிழிவின் தாக்கங்கள்

நீரிழிவு நோய் இன்று வரை முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாக இருப்பினும் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சுகதேகியாக வாழமுடியும்.மருந்துகளால் மாத்திரம் நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது.உரிய மருந்துகளைப் பாவிப்பதுடன்,உணவுக் கட்டுப்பாடும்,உடற்பயிற்சியும் அவசியமாகும்.உணவைப் பொறுத்தவரை கலோரிப் பெறுமானம்  குறைவாக உள்ள உணவுகள் சிறந்தவை.தினமும் தேகப்பியாசம் அல்லது வேகநடைஎன்பன சிறந்த உடற்பயிற்சிகளாகும்.சைக்கிள் ஓடுதல்.நீச்சல் முதலான அப்பியாசங்களும் சிறந்தவை.ஓரிடத்தில் அமர்ந்திருந்து அதிக உடலியக்கமின்றி வாழ்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்காது விட்டால் உடல் உறுப்புக்கள் மெதுவாக பாதிப்புக்குள்ளாகி படிப்படியாக பாரதூரமான நோய்களை உருவாக்கும்.முதலில் குழாய்களைப் பாதிக்கும்.அதேவேளை நரம்பு மண்டலங்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.குருதிக் குழாய்க்குள் கொலஸ்ரோலை படியவைப்பதனால் குருதிச் சுற்றைப் பாதிக்கும். இதனால் இதயம்,சிறுநீரகம்,ஈரல்,மூளை,கண்கள்,பாதங்கள்,உட்பட பல்வேறு உறுப்புக்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.மாரடைப்பு,பக்கவாதம்,இதய செயலிழப்பு,சிறுநீரக செயலிழப்பு,பார்வை இழப்பு,அங்கவீனம் முதலான பாதிப்புக்களும்,இவற்றால் மரணமும் ஏற்படலாம்.

நீரிழிவின் அறிகுறிகள் வெளித் ​ தெரிய முன்னதாகவே உடலுள் நீரிழிவு நோய் ஏற்படலாம் என்பதால் இருபது வயதைக் கடந்த ​அனைவரும் வருடத்தில் ஒரு தடவையாவது குருதி குளுககோசின் அளவை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.இதனால் நோய் தீவிரமடைய முன்னர் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்பதுடன்,நீரிழிவின் தாக்கத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்தான நோய்களிலிருந்தும் விடுபட முடியும்.சிறுவயதிலிருந்தே உடலின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.அத்துடன் சமச்சீரான சமபல உணவுகளை உட்கொள்வதுடன்,உடலுழைப்பிலும் ஈடுபட வேண்டும்.

 

 


சுகவாழ்வுக்கு சவாலாகும் நீரிழிவு நோய்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.