முடக்கு வாதமும் உங்கள் உணவு பழக்கமும்

Dr.நி.தர்‌‌ஷனோதயன்

MD (S) (Reading)

முடக்குவாதமும் உணவுப் பழக்கமும் எப்படித் தொடர்புடையன என்பது பற்றி பல காலமாக மருத்துவ அறிவியல் உலகம் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டு உள்ளது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு மட்டு​மே, அந்த வலி, வேதனை எப்படி இருக்கும் என்று தெரியும்.  சில சமயம் சிறிது நேரத்திற்கு இந்த அறிகுறிகள்  மிகவும் கடுமையாகி, வலி தாங்க முடியாததாகிவிடும். முடக்கு வாதத்தின் அறிகுறிகளுக்கும் ஒருவர் சாப்பிடும் உணவுக்கும் மிகுந்த தொடர்பு இருப்பதாக, புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முடக்குவாதம் உள்ளவர்களுக்கு அழற்சியைக் குறைக்கவும், மூட்டுவலியை குறைக்கவும் சில உணவுகள் உதவக்கூடும் என்று கூறப்படுகின்றது. பல உணவுகள் முடக்கு வாத வலியை தூண்டுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.  

முடக்குவாதத்தை சமாளிக்க உதவுகின்ற உணவுகளை, அழற்சி எதிர்ப்பு உணவுகள் என்று குறிப்பிடுகின்றார்கள். அவற்றில் சில பின்வருமாறு :

பழங்களும் காய்கறிகளும் : வண்ணமயமான பழங்களும் காய்கறிகளும் உடலுக்கு ஆரோக்கியமளிப்பவை, அவை முடக்கு வாதத்தை சமாளிக்க உதவக்கூடியவை என்று கண்டுகொள்ளலாம். என்டிஒக்ஸிடண்டுக்கள், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, விற்றமின் C & E  போன்றவற்றைக் கொண்டுள்ள பழங்களும் காய்கறிகளும் முடக்குவாதத்தை சமாளிக்க உதவும் பண்புக் கொண்டவை. என்டி ஒக்ஸிடண்டுக்கள் உடலில் இரத்தத்தில் சுற்றித் திரியும் தேவையற்றப் பொருட்களைக் குறைப்பதில்  மிகவும் உதவிகரமானவை.

மீன்: அசைவ உணவு உண்பவர்கள்,சிவப்பு இறைச்சியை விட மீன் சாப்பிடுவது நல்லது. மீன் முடக்கு வாதத்தை சமாளிக்க உதவுகிறது. மீனில் ஒமேகா -03 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை ஆரோக்கியமளிக்கும் கொழுப்புகள் என்று கருதப்படுகின்றன. 

ஒலிவிவ் எண்ணெய் : உயர்தர ஒலிவிவ் எண்ணெயில் ஒலியோகாந்தால் உள்ளது. இது உடலில் உள்ள அழற்சியை ஏற்படுத்தும் நொதிகளை (என்சைம்) செயலிழக்கச்  செய்து, அழற்சியைக் குறைக்கிறது.

செலினியம் முடக்கு வாத நோயாளிகளுக்கு ஏற்படும் அழற்சியைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முட்டையும் தானியங்களும் விற்றமின் D நிறைந்தவை. இவை பெண்களுக்கு முடக்கு வாதம் வரும் அபாயத்தை குறைப்பதாகக் கருதப்படுகின்றது. முடக்கு வாத அறிகுறிகளைத் தூண்டி அதிகப்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பதும் முக்கியம். முடக்கு வாத வலியைத் தவிர்க்க இந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும், இனிப்பு மற்றும் பேக்கரி பண்டங்களைத் தவிர்க்கவும். பால் பொருட்களில் ஒருவகை புரதம் உள்ளது. அது மூட்டுக்களைச் சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தும் என்பதால், அவற்றைத் தவிர்க்கலாம். மது மற்றும் புகையிலைப் பயன்பாடு போன்றவற்றை தவிர்க்கவும் இவை முடக்கு வாதம் உண்டாக்கும். சோள எண்ணெயில் ஒமேகா – 06 கொழுப்பு அமிலம் உள்ளது இது முடக்கு வாத வலி மிகுந்த அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது.  இதனையும் தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

 

 

 

 

 


முடக்கு வாதமும் உங்கள் உணவு பழக்கமும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.