மூல நோயும் சிகிச்சைகளும்

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில், பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல், நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.   

நாம், உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாப் பதார்த்தங்கள், ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி, வயிற்றில் புண்களை ஏற்படுத்துகின்றன.   

இதனால், பெருங்குடலில் அதிக வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும் கழிவுகளும் தங்குவதால், மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.  

நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகின்ற நோய்களுள் ‘மூலநோய்’ (Piles) முக்கியமானது.   

இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர், வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், வலி, இரத்தப்போக்கு, இரத்தச்சோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். மூலம் ஏற்பட்டால், சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவிதப் பதற்றம் இருக்கும். மலவாயில் கழிவுகளை வெளியேற்றிய பின்னரும் வெளியேற்றும் போதும், கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும்.   

மூலம் ஏற்படுவதற்கு, உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே, மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும்.   

மூலநோய் நிலைகள்

‘ஆசனவாயிலுள்ள இரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதன் உள்ளேயிருக்கும் இரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது இரத்த நாளங்கள் கிழிந்து இரத்தம் வெளியேறுவது ‘மூலம்’ எனப்படுகிறது.  இது, நான்கு வகைப்படுகிறது.

வலியில்லாமல் இரத்தம் மட்டும் வெளியேறுவது வகை 1.   

மலம் கழிக்கும்போது இரத்தத்தோடு சதையும் வெளியே வந்து, மலம் கழித்து முடித்தவுடன் ஆசனவாய்க்கு உள்ளே சதை தானாகச் சென்றுவிடுவது வகை 2.   

இரத்தத்தோடு சதை வந்து, மலம் கழித்து முடித்த பின்னர், சதை தானாக உள்ளே செல்லாமல் அழுத்தம் கொடுத்து, உள்ளே சென்றால் அது வகை 3.   

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சதை உள்ளே செல்லாமல், இரத்தத்தோடு வெளியே வந்து நிற்பது வகை 4. கடைசிநிலைக்கு வந்துவிட்டால், கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். மூலநோயின் ஆரம்பகட்டத்தில் இரத்தம் மட்டும்தான் வெளியேறும். வலி இருக்காது. ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் வலியும் உண்டாகும்.  

மூலநோய்க்கான அறிகுறிகள்

மலம் இறுகி எளிதில் வெளியேறாது.  
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.  
மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்.  
மூலச் சதை வெளித்தள்ளுதல்.  
உண்ட உணவு செரிமானமின்மை.  
புளித்த ஏப்பம்.   

மூலநோய்க்கான காரணம்

அதிக நேரம் ஒரே நிலையில் (Erect posture) உட்கார்ந்திருப்பது, சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் இருப்பது, முழுமையாக இல்லாமல் அரைகுறையாக மலம் கழிப்பது ஆகியவைதான், மூலம் உண்டாவதற்கான முக்கியமான காரணங்களாகும்.  

கார உணவுகளை அதிகம் உட்கொள்ளுபவர்கள், குறிப்பாக உணவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை, அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கு, மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.   
எப்பொழுதும் அமர்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்.   

சில பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால், கர்ப்பக் கால மூலநோயானது, பிரசவத்துக்குப் பின்னர் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.   

மது அதிகம் அருந்துதல், புகைப்பழக்கம், நேரத்துக்கு உணவு உட்கொள்ளாதவர்களுக்கும் மூல நோய் வரலாம். மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடல் சூட்டை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், கோழி இறைச்சி மற்றும் விரைவு உணவுகளை உண்பதால், மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டுவிடும்.   

தவிர்க்கும் வழிமுறைகள்

மலத்தை இறுகவிடாமல் பார்த்துக்கொண்டு, தினமும் ஒரே நேரத்தில் மலம் கழிப்பது அதிக நேரம் ஒரே நிலையில் உட்காராமல், எழுந்து நடப்பது போன்றவற்றைச் செய்தால், இந்தப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.  
மாச் சத்துகள் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது.   

பாண், மைதா போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ளக்கூடாது. பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய் (அவரை வகை), புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும் அப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டால், மலம் இறுகாமல் மென்மையாகவும் உதிரியாக இல்லாமல் மொத்தமாகவும் வெளியேறும்.

மலச்சிக்கல் உண்டாகாது. அதனால், மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. அசைவ உணவுகளைச் சாப்பிடவே கூடாது என்பதில்லை; அதை மட்டுமே அதிகமாகச் சாப்பிடக் கூடாது.  

எந்த உடல்நல பாதிப்பும் இல்லாதவர்கள், ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று லீற்றர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதையும் ஒரே நேரத்தில் மொத்தமாகக் குடிக்கக் கூடாது. சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும். 


மூல நோயும் சிகிச்சைகளும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.