2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மனிக்டிப்ரஷன் நோயாளர்களுக்கான சிகிச்சை முறைகள்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தம்பி

மனிக்டிப்ரஷன் நோய் ஏன் ஏற்படுகின்றது என்பது பற்றியும் அந்நோயாளர்களின் இயல்புகள் பற்றியும் நாம் முன்னர் பார்த்திருந்தோம். இனி அந்நோயாளர்களுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றிப் பார்ப்போம். 
 
இந்நோயின் தீவிரத்தை சில மருந்துகள் கொடுத்து தணித்துக்கொள்ள முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது. அவ்வாறான மருந்துகளில் ஒன்று தான் லித்தியம் காபனேற்று (Lithium Carbonate). 
 
இந்த மருந்தினைப் பாவிப்பவர்கள் அடிக்கடி இரத்த பரிசோதனையை செய்து கொள்ளவது நல்லது. மனிக்டிப்ரஷன் நோய் பெரும்பாலும் இராசாயன மாற்றத்தால் தான் ஏற்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. இரத்த பரிசோதனையை செய்துகொள்வதன் மூலமாக லித்தியம் கார்பனேற்று எப்படி எங்கள் ரத்தத்தில் கலந்து உடம்பில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதை நாம் நன்றாக அறிந்துகொள்ள முடியும்.
 
லித்தியம் காபனேற்றானது உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஒரு சிலருக்கு இம்மாத்திரை உடம்புக்கு பழகும் வரைக்கும் பக்க விளைவுகளை தோற்றுவிப்பதுடன், சிலருக்கு அதன் பின்னரும் கூட பக்க விளைவுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 
எனவே மருந்தை பாவிக்கும் ஒருவருக்கு வாந்தி, ஓங்காளம், வயிற்றுப்போக்கு மற்றும் ஒரு முகப்படாத சிந்தனை என்பன இருந்தால் உடனே ஒரு வைத்தியரை சந்தியுங்கள். காரணம் நீங்கள் எடுக்கும் மருந்துகள் சிலவேளைகளில் உங்கள் உடலில் நச்சுத் தன்மையை அதிகரித்திருந்தாலும் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
 
மேலும் மனிக்டிப்ரஷனை கட்டுப்படுத்த லாக்காக்டில் (Largactil), ஹலோபெரிடோல் (Haloperidol) போன்ற மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. நோயின் தீவிர நிலையில் ஏற்படும் சில சிக்கல்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காகத்தான் இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
 
மனிக்டிப்ரஷன் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இவ்வாறான மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்து வந்தால் சிலவேளைகளில் அந்நபரின் மத்திய நரம்பு மண்டலம் செயலிழக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
 
மேலும் E.C.T எனும் சிகிச்சை முறைகளும் செய்யப்படுகின்றது. இவை எல்லாவற்றையும் விட கவுன்சலிங்தான் மனிக்டிப்ரஷனுக்கான சரியான சிகிச்சை முறையாக திகழ்கின்றது. இதன் மூலம் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருக்கும் நோயாளிகளை சிறிது சிறிதாக அவர்களது பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

 
வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்களையும், மனவேதனைகளையும் மனம் விட்டு பேசுவதால் எத்தனையோ மனபாரங்களை எம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதற்கு கவுன்சிலிங்க் சிறந்த ஒரு முறையாகும். இதனால் மனம் நிம்மதியடைவதுடன், சிந்தனைகளும் செயற்பாடுகளும் செம்மையடைகின்றன.
 
சைக்கோதிரப்பி எனப்படும் சிகிச்சை முறையும் மனிக்டிப்ரஷன் நோயாளர்களுக்கு உகந்தவொரு சிகிச்சை முறையாக இருக்கின்றது. இச்சிகிச்சை முறையின் மூலம் மனிக்டிப்ரஷன் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சிந்திக்க வைக்க முடியும். 
 
சிலர் குடும்ப பிரச்சினைகளை யாரிடமும் கூறக்கூடாது என்ற முட்டாள் தனமான நம்பிக்கையால் உடலாலும் மனதாலும் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனால் பல குடும்பங்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு நாள் தோறும் முகங்கொடுத்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள் தான் இவ்வாறான நோய்களுக்கு ஆளாகுவதும் அதிகமாகின்றது. 
 
குழப்பமான மனிதனுக்கு வாழ்க்கை குழப்பமாகத் தான் தெரியும். யாரிலும் நம்பிக்கை வராது. எதையும் முழு மனதுடன் செய்ய துணிவிருக்காது. மனம் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவிக் கொண்டு இருக்கும். அல்லது எப்படியாவது தப்பித்துக் கொண்டால் போதும் என எண்ணத் தோன்றும். 
மற்றவர்களில் பழியை போட்டு தன் வாழ்க்கையை தன் மனைவி, பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கெடுத்து விட்டதாக சொல்வதுடன் அதனை நம்பவும் செய்வார்கள். அந்த அவநம்பிக்கையின் தீவிரத்தில் தவித்துப் போவார்கள். அதனால் அவ்வாறனவர்களுக்கு மனிக்டிப்ரஷன் நோயும் தீவிரமடையும் வாய்ப்பும் அதிகமாக காணப்படும். 
 
எனவே உங்களுடன் நெருக்கமானவர்களுடன் மனம் திறந்து பேசுங்கள். வாழ்க்கையில் நீங்கள் எந்தவொரு தீர்மானத்தையும் தனித்து எடுக்காதீர்கள். உங்களுக்கு மேல் எப்பொழுதுமே ஒரு தலைவனை வைத்துக் கொள்ளுங்கள். அது கடவுளாகவோ, அல்லது உங்களுக்கு மிக நெருக்கமான யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 
 
அத்துடன் எந்த ஒரு பிரச்சினையையும் மனதிற்குள்ளேயே போட்டு பூட்டிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் வரும் சவால்களை துணிவாக எதிர்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை ஒரு காலமும் தளரவிடாதீர்கள். எல்லோருடனும் எப்பொழுதும் சிரித்து பேசி சந்தோஷமாக இருக்க பழகி கொள்ளுங்கள்.
 
வாழ்க்கையில் உங்களுக்கு மட்டுந்தான் பிரச்சினைகளும், வேதனைகளும் இருக்கின்றன என நினைத்து சோர்ந்து போகாதீர்கள். உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களில் சிலர் அதனை தைரியமாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். ஒரு சிலர் அதனை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு யாரிடமும் பகிர்ந்து கொண்டால் அது கௌரவ பிரச்சினையாகி விடுமே என பயப்படுகிறார்கள். 
 
இவர்கள் தான் பின்னாட்களில் அதிகளவு மனிக்டிப்ரஷன் நோய்க்கு ஆளூகின்றார்கள். எனவே நீங்களும் அப்படி வாழாதீர்கள். இன்பமும் துன்பமும் நாம் அனுமதித்தால் தவிர பலாத்காரமாக  நம்முள் அதனால் ஒரு காலமும் செல்ல முடியாது. எமது வாழ்க்கையின் ஒவ்வொரு வாசலிலும் இன்பத்தை வரவேற்போம், துன்பத்திற்கு துணிவாக விடைகொடுப்போம்.  
 
'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்' - கண்ணதாசன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .