2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இருதய நோய்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தம்பி
 
பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிடுகின்றார்கள். ஆனால் சிலரோ சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றனர். எமது முன்னோர்கள் வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு உணவு, மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான் நாம் எமது வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். 
 
இவ்வாறு சாப்பிடுவதால் இரைப்பையின் சமிப்பாட்டு தொழிற்பாடு இலகுவாக்கப்படுகின்றது. இப்பழக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தால் எமது உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். தவறுகின்ற பட்சத்தில் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி இருக்கின்றது. 
 
அந்த வகையில் தவறான உணவு பழக்க வழக்கத்தால் வருகின்ற பல நோய்களில் இருதய நோய் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
 
அந்த வகையில் இருதய நோய்களை தடுத்துக் கொள்வதற்கான ஆரோக்கியமான சில உணவு முறைகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். 

 
இருதய நோய் பெரும்பாலும் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகின்றது. அதற்காக கொழுப்புத் தன்மையான உணவுகளை தவிர்த்து விடுவது பொருத்தமான தீர்வாக இருக்காது.
 
அளவோடு சாப்பிடுங்கள் என்பது தான் அறிவுரை, ஆரோக்கியமான முறையில் சமையுங்கள் என்பது தான் ஆலோசனை.
 
உதாரணமாக கோழி இறைச்சியை சமைக்கும் போது அதில் காணப்படும் தோல் உட்பட மேலதிகமாக இருக்கும் கொழுப்புக்களை முற்றாக அகற்றி விடுங்கள்.

 
ஆட்டிறைச்சி சமைக்கும் போது எண்ணெய் திரலும் கொழுப்புகளை அடியோடு அகற்றுங்கள். பெரும்பாலும் ஆட்டிறைச்சியை நன்றாக அவித்துவிட்டு சமைப்பதால் அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.
 
ஒரு கிழமைக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 
அடிக்கடி பொரித்து, வதக்கி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். எப்போதாவது ஒருநாளைக்கு  சாப்பிட்டால் பரவாயில்லை. 
 
ஒரு தடவை பொரியலுக்காக பாவித்த எண்ணெய்யை எதற்காகவும் மீண்டும் பயன்படுத்தாதீர்கள். அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
வெண்ணெய் அதாவது Cheese மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும் தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு கொழுப்புத் தன்மையான சேர்மானங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

 
நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இது பச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள், பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகின்றது.
 
சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட வேறு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்தினாலும் மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்துங்கள். எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் சாப்பாடு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் சுத்தமான பொய் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
சாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை முடியுமான வரைக்கும் முற்றாக தவிர்த்துக்கொள்ள பாருங்கள். அதனால் உங்கள் உடற்பருமன் உங்களை அறியாமலேயே அதிகரிக்கும்.
 
வாரத்திற்கு ஒரு தடவையேனும் நன்றாக உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
 
உங்களது நாளாந்த உணவு பழக்க வழக்கத்தை இவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டால் உங்களை எந்த வகையிலும் இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது. நமக்கு வரும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் தான் காரணம். அதற்காக யாரையும் நாம் குற்றம் சுமத்த முடியாது. எம்மை மீறி எமக்கு எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .