2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பருவ காலத் தொடர் மழையும் தொற்று நோய்த் தொல்லைகளும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடை கால உஷ்ணத்தைத் தணித்து, உடலுக்கு இதம் தருவதாய் இருந்தாலும், கூடவே நோய்களையும் கூட்டிக் கொண்டே வருகிறது பருவ மழைக்காலம். ஏனெனில், அக்காலம் அனேகமான தொற்று நோய் கிருமிகளுக்கும் வசந்த காலமாகும்.

ஆரோக்கிய மத்தியஸ்தரான சூழல், கிருமிகளுக்கு சாதகமாய் மாறுவதனால், மனிதன் மற்றும் கிருமிகளுக்கு இடையிலான சமநிலை உறவு உடைக்கப்பட்டு, மனிதனில் உருவாக்கப்படும், உடற்றொழிலியல் குழப்ப நிலையே, மழைக்கால  தொற்று நோய் தோற்றுவாயின், சுருக்கமான விளக்கமாகும்.

மேலும், இன்றைய வாரத்திலிருந்து, வாசகர்களின், வாசிப்பு சுவாரசியத்தை மெருகேற்ற 'மருத்துவ மகத்துவம்' என்ற சிறிய பகுதியும் சேர்ந்து பயணிக்கும்.

தொற்று நோய்கள் எவ்வாறு தோன்றுகிறது?

தொற்று நோயாளி, விலங்குகள் மற்றும் பறவைகளில் இருக்கும் நோய்க் கிருமிகள், தொற்றுகையின் ஆளுகைக்குள் இருக்கின்ற இன்னும் ஒருவருக்கு நேரடியாக அல்லது காவிகளின் ஊடாக கடத்தப்பட்டு, தொற்றுவதன் மூலம் அவரையும் நோயாளியாக மாற்றுகிறது.

தொற்று நோய் வகைப்படுத்தல்கள்?

நோய்க் கடத்தல் பொறிமுறையின் அடிப்படையில், தடிமற் காய்ச்சல் மற்றும் இன்புளுவென்ஸா போன்றவை சுவாச வழி மூலமாகவும், வாந்தி-பேதி மற்றும் நெருப்புக் காய்ச்சல் ஆகியன அசுத்தமான நீர் மற்றும் உணவுகளின் ஊடாகவும், டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் மலேரியா போன்றன நுளம்புகள் மூலமும், எலிக்காய்ச்சலானது, தோற்காயங்கள், மூக்கு, கண், வாய் ஆகியவற்றின் ஊடாகவும், தோல் தொற்றானது, பக்டீரியா மற்றும் பங்கஸுக்களின் மூலமாகவும் ஏற்படுகின்ற, பொதுவான மழைக்கால தொற்றுக்களாக வகைப்படுத்தப்படும்.

மழைக்காலத்தில், தொற்று நோய்கள்; அதிகரிப்பதேன்?

மனிதன், நோய்க்கிருமி மற்றும் சூழல் என்பவற்றைக் கொண்ட, தொற்று நோய் விஞ்ஞான முக்கோணமானது (Epidemiological Triad), இயற்கையாகவே சமனிலையிலிருக்கும். நோய்க்கிருமிகளின் தொற்றுத்திறனானது, அவற்றின் வீரியத்திலும் எண்ணிக்கையிலும் தங்கியிருக்கும். நோய்க் கிருமிகளின் வாழ்க்கை வட்டத்தின், தொற்று விருத்திநிலை (Infective Stage) உட்பட்ட ஏனைய சில விருத்தி நிலைகளும் சாதகமற்ற சூழல் நிலைமைகளை கழிப்பதற்காக, பொதுவாக வித்திநிலை அல்லது உறங்கு நிலைகளில் (Dormant Stage) இருக்கும்.
மழைக்காலமானது, நோய்க் கிருமிகள் சார்ந்து சாதகத்தன்மையை ஏற்படுத்துவதனால், நோய்க்கிருமிகள் விரைவாகவும் இலகுவாகவும் பெருகி தீவிர வீரியமடைவதன் மூலம், தொற்று நோய் விஞ்ஞான முக்கோண சமநிலையை உடைத்து, மனிதனில், பல்வேறு தீவிர நிலைகளைக் கொண்ட தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது.

தொற்று நோய்கள் தொடர்பாக அதிக அக்கறை கொள்ள வேண்டியவர்கள்?

பொதுவாக அனைவருமே, அவதானத்தோடு செயற்பட வேண்டியிருந்தும், தொற்றுக்களினால் இலகுவாக பாதிக்கப்படுகின்ற குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நாட்பட்ட நோயாளிகள் மற்றும் நிர்ப்பீடணக் குறைபாடுடையவர்கள் அதீத கவனமெடுக்க வேண்டும்.
ஏனெனில், இவர்களின் நிர்ப்பீடணத் தொகுதியின் முழு முதிர்வுறாமை மற்றும் குறைபாடுகள், மிக இலகுவாக தொற்றுக்களுக்கு வழி வகுப்பதோடு, இந் நிலைமையினை சாதகமாகப் பயன்படுத்துகின்ற, உடலில் வாழுகின்ற நட்பு நுண்ணங்கிகளும் பகைவராக மாறி, சந்தர்ப்பவாதத் தொற்றுக்களையும் ஏற்படுத்தி, நோய் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துவிடும்.

தடிமற் காய்ச்சலும், தடுப்பு வழி முறைகளும்

பல சந்தர்ப்பங்களில், சில மழைத்துளிகளின் நனைதலால், தும்மலில் தொடங்கி, இருமல், மூக்கில் நீர் வடிதல், தொண்டைக் கரகரப்பினைத் தொடர்ந்து, காய்ச்சலாய் மாறி, சில வேளைகளில் பலரையும் கட்டிலிலில் கிடத்துகின்ற, மேற்புற சுவாசக் குழாய் வைரஸ் தொற்றே தடிமனும் அதனுடன் சேர்ந்து வரும் காய்ச்சலுமாகும்.

தடிமனானது சாதாரணமாக ஏற்படுகின்ற தொற்று நோயாக இருப்பதோடு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்தி நிரந்தரமற்ற குறுகிய காலத்துக்குரியதாலும், தனிமனித சுகாதார பழக்க வழக்க செல்வாக்கினாலும் நிர்ணயிக்கப்படுவதனால், தடிமற் காய்ச்சலானது, பொதுவாக வளர்ந்தோரில் வருடத்துக்கு சராசரியாக 5 தடவைகளும், சிறுவர்களில் பத்து தடவைகளும் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு வார காலத்தினுள், நோயாளி இயல்பாகவே குணமடைவார். இருந்த போதிலும், நோயெதிர்ப்பு வலு குறைந்தவர்களில், இரண்டாம் நிலை பக்டீரியா தொற்றுக்களான, நுரையீரலழற்சி, தொண்டையழற்சி மற்றும் காதுத் தொற்று போன்றவற்றை தடுப்பதற்காக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அண்டிபயொடிக்ஸ் மற்றும் வலிநிவாரணிகள், இருமல் மருந்துகளை பயன்படுத்துவது சிறந்தது.

கைகளை கழுவுதல் முதற் கொண்ட சுகாதார பழக்க வழக்கங்கள், தொற்றுக்கு உள்ளானவர்களில் இருந்து விலகியிருத்தல், குளிர் ஆகாரங்களை தவிர்த்து சூடான உணவுகள்; மற்றும் கொதித்தாறிய நீரினைப் பருகுதல், அதிகளவில் விற்றமின் - சி இனை இயற்கையாகக் கொண்டுள்ள தோடை, எலுமிச்சை என்பவற்றையும், பல விற்றமின்களையும் கொண்டுள்ள பப்பாசி மற்றும் அவகாடோ போன்ற பழங்களை உண்ணுதல், மனவழுத்தத்தை குறைத்து போதியளவிலான ஓய்வெடுத்தல் போன்றவற்றின் மூலம் தடிமற் தொற்றை தவிர்த்துக் கொள்ளலாம்.

பருவ கால இன்புளுவென்சாவும் (செல்வாக்கு தொற்றும்) எதிர்த்து நிற்றலும்

காய்ச்சல், தலையிடி, இருமல், மூக்கிலிருந்து வடிதல், உடல் நோவு, வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகளை உடையதும், அதிகளவில் இன்புளுவென்சா A,B வைரசுக்களாலும் மிக அரிதாக C வைரசினாலும் இச் சுவாசத் தொகுதி தொற்று ஏற்படுகிறது.

மேலும் இத்தொற்றானது வருடம் முழுவதும் நிகழ்ந்தாலும், குறிப்பாக வட-கீழ் மற்றும் தென்-மேல் பருவ பெயர்ச்சி மழைக் காலங்களில் பன்மடங்கு அதிகரிப்பதோடு, சிலருக்கு உயிராபத்துக்களையும் உண்டு பண்ணும். தற்காலத்தில், இலங்கையில், வைரஸ் A(35%) இன் உப உறுப்பினர்களான AH1N1(46.6%) (பன்றிக் காய்ச்சல்), AH3N2(53.4%) மற்றும் B(65%) தொற்றுக்களே இருக்கின்றன.

இத்தொற்றின் ஆபத்தை, அதிகளவில் எதிர்நோக்கும், குழுக்களாக, 2 வயதுக்குக் குறைவான குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், கர்ப்பிணிகளும் மற்றும் நாட்பட்ட நோயாளிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அறிகுறிகளின் தீவிர தன்மையினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாத்திரமே வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்கப்படும். தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிப்பவர்கள் தாமதிக்காமல் தகுதி வாய்ந்த மருத்துவரை நாடி ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இத்தொற்றும் அநேகமான சந்தர்ப்பங்களில் சாதாரண தடிமனைப் போன்று உணரப்படலாம்.

நோயாளிகளுடன் நெருக்கத்தையும் மற்றும் சன நெரிசல் சந்தர்ப்பங்களையும் தவிர்த்தல், தும்மல் மற்றும் இருமல் வேளைகளில் கைக்குட்டையை பயன்படுத்தல், மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளியேறும் திரவ கழிவு வெளியீடுகளை பாதுகாப்பாக கழிவகற்றுதல் மற்றும் கிருமிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை பயன்படுத்திய பின்னர் தொற்று நீக்கிகளை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளின் மூலம் இன்புளுவென்சா தொற்றை எதிர்த்து நடை போட முடியும்.

டெங்குத் தொற்றும், பாதுகாப்பு பலப்படுத்தல்களும்

ஈடிஸ் எஜிப்றி எனப்படும் பெண் நுளம்புகளினால் காவப்படுகின்ற நான்கு வகையான டெங்கு வைரசுக்களினால்(1,2,3,4) ஏற்படுகின்றதும், கடும் காய்ச்சல், தீவிர தலை, தசை மற்றும் மூட்டுவலி ஆகியவற்றை உடைய சாதாரண டெங்கு காய்ச்சலாகவும், மேற்கூறிய அறிகுறிகளுக்கு மேலதிகமாக, தீவிர தொற்று நிலைகளில் தோன்றும் டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சலாகவும் மற்றும் அறிகுறிகளோடு அதிர்ச்சியையும் உருவாக்கும் டெங்கு அதிர்ச்சி கூட்டறிகுறியாகவும் இருக்கின்ற வெவ்வேறு நோய் நிலைகளையுடைய தொற்றாகும்.

இந்நோயினால், குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் ஆண்களை விட அதிகமாக பெண்களும் பாதிப்படைவதோடு, சில வேளைகளில் நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோயாளிகளும் உயிராபத்தை எதிர்நோக்குகின்றனர். இத்தொற்றுக்கான பிரத்தியேக மருந்து மாத்திரைகள் இதுவரை இல்லாதபோதும், குணங் குறி சிகிச்சைகளே வழங்கப்படுகின்றன.

இத்தொற்றுக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் இல்லாமையினால், நுளம்புக்கடி மற்றும் அதன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற பின்வரும் உபாயங்களான, வெற்றுப் பேணிகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், டயர்கள், சிரட்டைகள் போன்ற நீர் தேங்குகின்ற பொருட்களை அழிப்பதனால் நுளம்பு பெருக்கத்தை தடுப்பதோடு, தோலை முற்றாக மறைக்கக் கூடிய ஆடைகளை அணிதல், பகல் மற்றும் இரவு நேர நித்திரைக்கு நுளம்பு வலைகளை பயன்படுத்துவதன் மூலம் நுளம்புக் கடியை தவிர்ப்பதனாலும், டெங்குத் தொற்றிலிருந்தான முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும்.

தோல் வியாதிகளும் தொல்லை நீக்குதலும்

பொதுவாக மழை காலங்களில், தோலின் ஈரலிப்புத் தன்மை அதிகமாக இருப்பதாலும், அழுக்கு நீரின் தொடுகை அதிகரிப்பதனாலும், இக்காலத்தில் வியர்வைச் சுரப்பி மற்றும் நெய்ச்சுரப்பிகளின் அதீத துலங்கற் செயற்பாடுகளினாலும் மிக இலகுவாகவே தோல் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
அதிக ஈரலிப்பின் காரணமாக, வட்ட வடிவ தொற்றுக்கள், நகத் தொற்றுக்கள் மற்றும் பாதப் படைத் தொற்றுக்கள் போன்ற பங்கசுத் தொற்றுக்களும், மைற்ஸ் எனப்படும் ஒட்டுண்ணிப் பூச்சிகளினால் ஏற்படுத்தப்படும் சொறி சிரங்குத் தொற்றுக்களும் பொதுவான மழைக்கால தோல் தொற்றுக்களாகவிருக்கும்.

எப்போதும் தோலினை உலர்ந்த நிலையில் பேணுதல், மழை மற்றும் அசுத்த நீருடனான தொடுகையின் பின்னர் மிதமான சுடு நீரினால் அப்பகுதிகளை கழுவுதல், சப்பாத்து மற்றும் வூட்ஸ் போன்ற மூடிய பாதணிகளை தவிர்த்து திறந்த பாதணிகளைப் பாவித்தல், தேவையான சந்தர்ப்பங்களில் மருத்துவ ஆலோசனையுடனான விசேட சவர்க்காரங்கள் மற்றும் தோல் கிறீம் போன்றவற்றையும் பயன்படுத்துவதன் மூலமே தோல் தொற்று நோய் தொந்தரவுகளை முற்றாக நீக்க முடியும்.

மழை காலத்தில் பின்பற்ற வேண்டிய பொதுப் பாதுகாப்பு பொறிமுறைகள்

*    கூடுமானவரை மழையில் நனைவதைத் தவிர்த்தல், தவறுதலாக நனைந்திருந்தால் உடனடியாகவே குளித்து, ஒட்டியிருக்கும் தொற்றுக் கிருமிகளை அகற்றுதல்.
*    வீதியோர மற்றும் சுத்தமற்ற உணவக உணவுகளை முற்றாகவே தவிர்த்தல்.
*    குளிர் பானங்களை முற்றாக தவிர்த்து, கொதித்தாறிய நீர் மற்றும் சூடான ஆகாரங்களை அருந்துதல்.
*    மரக்கறி மற்றும் பழங்களை சுத்தமான நீரில் நன்றாக கழுவி உலர்த்திய பின்னரே உண்ணுதல்.
*    நுளம்பு பெருக்கம் மற்றும் கடியினை தடுக்கும் தந்திரோபாயங்களை பின்பற்றுதல்.
*    எப்போதும் சுத்தம் சுகாதாரமாக இருத்தல்.

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X