2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

4 மணிக்கு முடித்ததால் எதிரணிக்கு ஏமாற்றம்

Kogilavani   / 2017 ஜூன் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபை நடவடிக்கை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கும் முன்பாக, நேற்று (22) நிறைவடைந்தமையால், ஒன்றிணைந்த எதிரணி பெரும் ஏமாற்றமடைந்தது. அத்துடன், அவ்வணியைச் சேர்ந்தோர் கடும் கோபமும் அடைந்திருந்தனர்.  

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக்காலை 10:30க்கு கூடியது, சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, நாட்டில் பெரும் பிரச்சினை இருக்கின்றது. சுகாதார அமைச்சுக்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது அபாயகரமானது என்று சுட்டிக்காட்டினார்.  

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களைத் தவிர, ஏனைய நோயாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். ஆகையால், இந்த விவகாரம் தொடர்பில் விசேட விவாதமொன்றை நடத்தவேண்டுமென கோரிநின்றார்.    இதற்கு உடனடியாக சம்மதித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தற்போது நடைபெறவுள்ள விவாதத்தை மாலை 4.30 மணிக்கு நிறைவு செய்துவிட்டு, நீங்கள் கேட்ட விவாத்தை ஒரு மணிநேரம் நடத்துவோம்” எனக் கூறினார்.   

அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவும் இணக்கம் தெரிவித்து, சபையின் பிரதான நடவடிக்கைளை முன்னெடுத்தார்.   நாடாளுமன்றத்தில், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு 30நிமிடங்களுக்கு முன்னதாகவே, அதாவது மாலை 4 மணிக்கே, அரசாங்கம் நிறைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.   

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஆனந்த குமாரசிறி எம்.பி, பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பான விவாதத்தை ஆரம்பிக்க ஒன்றிணைந்த எதிரணி எம்.பியான தினேஸ் குணவர்தனவை அழைத்தார்.   அதன்போது, அவர் சபையில் இருக்கவில்லை. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் இன்று வௌ்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைத்துவிட்டு அவர், எழுந்து சென்றுவிட்டார்.   

இதன்பின்னர் சபைக்குள் ஓடிவந்த மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் ஏமாற்றமும் கோபமும் அடைந்த நிலையில் காணப்பட்டனர். பின்னர் இது தொடர்பில் அவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி அரசாங்கத்தைக் குற்றம்சாட்டினர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .