2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’அக்கிராசனத்தில் ஒரே களேபரம்’

Editorial   / 2018 நவம்பர் 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்  

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கல் நிலைமைக்கு, நேற்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்று நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்பதைப் போல சபை நடவடிக்கைகள் நேற்று (15) அமைந்திருந்தன. 

அழைப்பு மணி ஓசை எழுப்புவதற்கு முன்பிருந்தே, சபையின் இரு பக்கங்களும் நிரம்பியிருந்தன. புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளன்றே, பெரும்பான்மையை இழந்திருந்த புதிய அரசாங்கத்துக்கு, இரண்டாவது நாளான நேற்றைய தினம், மற்றொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும்.  

எனினும், வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான எதிரணி தயாராகவிருந்த போதிலும் ஆளும் கட்சியினர் அதற்கு இடமளிக்கவில்லை இதனால், சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது.   

இறுதியில், அக்கிராசனத்துடன் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரியவை பாதுகாப்பதற்கு எதிரணியினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். எனினும் சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் என ஆளும்தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.   

இந்த சச்சரவுகளினால், அக்கிராசனத்தை நோக்கி, தண்ணீர் போத்தல் வீச்சுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமன்றி குப்பைகள் இல்லாத குப்பைக் கூடையும் வீசப்பட்டது. அரசமைப்பு புத்தகங்களும் வீசியெறியப்பட்டன. இதனால், சபை சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் அதிர்ந்தது.  

ஏதாவது சர்ச்சை ஏற்படும் போதெல்லாம் சபையை சில நிமிடங்களில், 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துவிடுகின்ற சபாநாயகர், நேற்றையதினம் அப்படிச் செய்யவில்லை. வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் சபையே தீர்மானிக்கவேண்டும். என்னால் தீர்மானிக்கமுடியாது என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டார்.  

இந்நிலையில், மூன்றாவது நாள் சபையமர்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடவிருக்கின்றது. இன்றைக்காவது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்ற நிலையில், அதற்கான முன்னோடிப் பேச்சுவார்த்தைகள் நேற்றுமாலை இடம்பெற்றன.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பல கூட்டங்கள் நேற்றுக்காலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றன.இதில், புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்திருந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.  

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் மட்டுமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பை சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.  

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்திலும், அரசியல் நெருக்கடியை உடனடியாக தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.   

ஒருபக்கம் கலந்துரையாடல்கள், கடிதங்கள் பரிமாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றம் நேற்றுக்காலை 10 மணிக்கு கூடியது.  

புதிய அமர்வின் இரண்டாவது நாளான நேற்றும், சபாநாயகர் கரு ஜயசூரிய, செங்கோலுடன் வரவில்லை. அக்கிராசனத்துக்குப் பின்னால் உள்ள கதவின் ஊடாகவே, சபாநாயகர் சபைக்குள் பிரவேசித்தார்.  

செங்கோல் எடுத்துவரும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்த ஆளும்தரப்பினர், சபாநாயகர் கரு ஜயசூரிய வருவதற்கு முன்னர் ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். சபாநாயகர் வந்து, தன்னுடைய ஆசனத்தில் அமர்வதற்கு முன்னரே ஹு சத்தமிட்டு கேலி கிண்டல் செய்தனர்.   

சபாநாயகர் வந்தமர்ந்ததும் ஓடர் பிளிஸ் என்பார். அவ்வாறு சொன்னபோது, ஹங்... என்று ஆளும்தரப்பினர் பதிலுக்குக் கோஷமிட்டனர். சபையை ஆரம்பிக்கவிடாது சத்தமிட்டுக்கொண்டிருந்தனர்.  

அதற்கிடையில் சபாநாயகரின் அறிவிப்பு விடுக்கப்பட்டது. புதிய அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமையால், பிரதமரையோ, அமைச்சரவையையோ இந்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளாது நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், சகலரும் உறுப்பினர்களே என்றார்.  

நாடாளுமன்றத்தில் வகித்த பதவிகளும் இரத்தாகிவிட்டன என்பதனால், நேற்றிருந்ததைப் போல (முதல்நாள்) யார்வேண்டுமானாலும் எந்தவோர் ஆசனத்திலும் அமர்ந்துகொள்ளலாம் என்றார்.  

இதன்போது ஆளும்தரப்பினர், சபாநாயகரைப் பார்த்து வசைபாடியதுடன், எதிரணியினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ்செய்தனர். அதனையடுத்து, மஹிந்த ராஜபக்‌ஷ உறுப்பினர் உரையாற்றுவார் எனக்கூறி, மஹிந்தவை அழைத்தார்.  

ரணில் விக்கிரமசிங்க, நான்காவது வரிசையில் அமர்ந்திருந்தார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நேற்றையதினம் சமுகமளித்திருக்கவில்லை.   

மஹிந்த எழும்புவதற்கு முன்னர் எழுந்த தினேஸ் குணவர்தன, “சபாநாயகர் அவர்களே, நீங்கள் ஒன்றை மறைந்துவிட்டீர்கள், சபாநாயகரின் அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதியின் அறிவிப்பை விடுக்கவேண்டும்.  
“நீங்கள் அனுப்பிய கடிதத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் கடிதம் அனுப்பியுள்ளார். உங்களுடைய கோரிக்கையும் ஜனாதிபதி மறுத்துள்ளார். ஆகையால் அந்தக் கடிதத்தை முதலில் வாசியுங்கள்” என்று கூறிக்கொண்டே, சபாநாயகர், கருஜயசூரிய, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என விலாசமிட்ட அந்தக் கடிதத்தை வாசிப்பதற்கு தினேஸ் குணவர்தன முயன்றார்.   

அதற்கு இடமளிக்காது, தினேஸின் ஒலிவாங்கி முடக்கிவிடப்பட்டது. அதன்பின்னர் அவர் அமர்ந்துகொண்டார்.   
இந்நிலையில் தினேஸின் கோரிக்கையை மறுத்த சபாநாயகர், “பதில் கடிதத்துக்கு நானும் பதிலனுப்ப வேண்டியுள்ளது. பதிலை அனுப்பியவுடன் இரண்டு கடிதங்களையும் வாசிப்பேன்” என்றார்.  

இதனிடையே எழுந்த தயாசிறி ஜயசேகர, “பொய்ன்ட் ஒப் ஓடர் பிளிஸ்” என்றார். பொய்ன்ட் ஒப் ஓடர், அதாவது ஒழுங்குப் பிரச்சினைக்கு இடமளிக்கமுடியாது என்று தெரிவித்த சபாநாயகர், இது நாடாளுமன்றம் உலகுக்கு காண்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்  

அதன்பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ தனதுரையைத் தொடர்ந்தார். அப்போது, எதிரணியில் சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். சபையில் பிரசன்னமாய் இருக்காதவர்களை தேடிப்பிடித்து அவர்களது ஆசனங்களில் அமரச்செய்தனர்.  

ராஜபக்‌ஷ தனதுரையில் சபையை உசுப்பேத்தும் வகையில் பல கருத்துகளை முன்வைத்தார். ஆளும் தரப்பினர் அவ்வப்போது ஆரவாரஞ் செய்ததுடன், எதிரணியினர் கேலி கிண்டல் செய்துகொண்டிருந்தனர்.  

உரையின் இறுதியில் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல, மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினரின் உரையின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால், உரைமீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் அதுவும் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றார்.   

வாக்கெடுப்பு என்றாலே தங்களுடைய எதிர்ப்பை முதல்நாளன்றே வெளிப்படுத்திய ஆளும்தரப்பு நேற்றும் கடுமையான எதிர்ப்பை வெ ளியிட்டது.   

ஆத்திரமடைந்த அரச தரப்பினர் சபாபீடத்துக்குள் நுழைந்து சபாநாயகர் மீது தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டதையடுத்து சபை கலவர பூமியானது. சபாபீடத்தை முற்றுகையிட்ட அரசதரப்பினரும், சபாநாயகரை பாதுகாக்க அவரைச் சுற்றி ஐ.தே.கவினர் அரணமைத்தனர்.  

சபாநாயகரை பாதுகாக்க முயன்றவரும், பாதுகாக்க அரணமைத்தவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதுடன், கட்டிப்புரண்டும் உருண்டனர்.  

இதனால், சில உறுப்பினர்கள் வேஷ்டிகள் அவிழ்ந்த நிலையிலும், காலணிகள், கண்ணாடிகள் கழன்ற நிலையிலும், நின்றிருந்தனர். இரு உறுப்பினர்களுக்கு இரத்தக்காயங்களும் ஏற்பட்டன.   
அதிர்ந்த சபை

பிரதமர் பதவியும் அமைச்சரவையும் நீடிப்பதாக வாதிட்டார். எனினும் அதனை நிராகரித்த சபாநாயகர் மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுவதற்கு கடும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சந்தர்ப்பம் வழங்கினார்.   

“நான் மஹிந்த” ஆவேசமான ராஜபக்‌ஷ

இதன்போது மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்ற எழுந்த நிலையில் அவரை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே அழைக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி மங்கள சமரவீர கூறிவிட்டார்.   

இதனால், கடும் கோபமடைந்த மஹிந்த ராஜபக்‌ஷ “நான் ஜனாதிபதியாக இருந்தவன் எனக்கு இந்த பிரதமர் பதவி பெரிதல்ல. பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. நான் எப்போதும் மஹிந்த தான்” என கடும் தொனியில் கூறிவிட்டு தன உரையைத் தொடர்ந்தார்.   

இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கும் கூச்சல்களுக்கும் மத்தியில் உரை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்‌ஷ, தனது உரையில் சபாநாயகரையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.   

மஹிந்த உரையாற்றிக்கொண்டிருந்த போது பலரும் ஓடித்திரிந்தனர். சுமந்திரன் எம்.பி மிகவும் பரபரப்பாக ஓடித்திரிந்து -கொண்டிருந்தார்.  

நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த பிரதமரிடம் ஓடிச்சென்று ஏதோ பேசிய அவர், பின்னர் முன்வரிசையில் அமர்ந்திருந்த லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் போன்றவர்களுடனும் ஓடியோடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.   

இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க மறுப்புறம் மஹிந்தவின் உரையால் சபை அல்லோல கல்லோலப்பட்டது.   

குப்பைக் கூடை, புத்தகங்கள் வீச்சு

எனினும் சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்த முற்பட்ட போது ஒட்டுமொத்தமாக சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகரை நோக்கிப் பாய்ந்து சென்ற அரச தரப்பினர் சபாபீடத்துக்குள் நுழைந்து சபாநாயகரை தாக்க முற்பட்டனர்.   

இந்நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் களமிறங்கிய ஐக்கிய தேசியக் கட்சியினர் சபாநாயகரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதனால் சபாபீடதுக்குள் தள்ளுமுள்ளுகளும் கைகலப்புகளும் இடம்பெற்றன.   
அரசதரப்பு எம்.பிகள் 25,30 சபாபீடத்துக்குள் நுழைந்து சபாநாயகரைத் தாக்க முற்பட்ட போது, ஐ.தே.க எம்பிகள் பலர், சபாநாயகரைச் சுற்றிப் பாதுகாப்பு அரணமைத்து பாதுகாப்பு வழங்கினர்.   

இதன்போது சபாநாயகர் மீது குப்பைக்கூடை, புத்தகங்கள், தண்ணீர் போத்தல்கள் மேசைகளில் கிடந்த ஆவணங்கள் தூக்கி வீசப்பட்டன. எனினும் சபாநாயகரைச் சுற்றி அரண் அமைத்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் இத் தாக்குதலை தடுத்துக்கொண்டிருந்தனர்.  
 

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் சில உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதுடன் கீழ் விழுந்து புரண்டு உருண்டனர். இதில் சிலரின் வேட்டிகள் அவிழ்ந்ததுடன் காலணிகள், கண்ணாடிகள் கழன்று விழுந்தன.

ஒருவர் தன்னுடைய மேலாடையை தூக்கிக் காண்பித்து, தனக்கும் தாக்குமளவுக்கு பலமிருக்கிறது என்பதை போல காண்பித்தார்.   

சிந்தியது இரத்தம்

இவ்வாறான நிலையில் அரசதரப்பைச் சேர்ந்த திமுத் அமுனுகம எம்.பி சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தார். இதன்போது ஒலிவாங்கியின் கம்பி இணைப்பு அவரின் கையை வெட்டிக் கிழித்ததில் சபாபீடத்தில் இரத்தம் சிந்தியது.   

வேதனை தாங்காது அவர் தனது கையை உதறியபோது அருகில் நின்ற சில உறுப்பினர்களின் ஆடைகளில் இரத்தக் கறைகள் படிந்தன. இதனை அடுத்து அவர் அவரச அவசரமாக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டு, நாடாளுமன்ற மருத்துவ மனையில் முதலுதவி வழங்கப்பட்டு, உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஐ.தே.க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, திமுத் அமுனுகமவை கத்தியால் வெட்டி விட்டதாக பரப்புரை செய்யப்பட்டது.   

சம்பிக்க, ரிஷாட்டைத் தாக்க முயற்சி

இதேநேரம் சபாநாயகரை அரச தரப்பினர் தாக்கியும் தாக்க முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அவரது ஆசனத்துக்கு அருகில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிக்க ரணவக்க எம்.பி காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது, குறுக்கே வந்த அரச தரப்பின் லொகான் ரத்வத்த எம்.பி, சம்பிக்க ரணவக்கவை நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் தாக்கவும் முற்பட்டார்.   

எனினும் குறுக்கிட்டு தடுத்த மஹிந்த ராஜபக்‌ஷ, லொகான் ரத்வத்தவை அகன்று செல்லுமாறு குறிப்பிட்டு சம்பிக்கவை தன்னருகே அழைத்து கைலாகு கொடுத்து தோளில் தட்டி சமாதானப்படுத்தினார்.   

இதேபோன்று தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முற்பட்டுகொண்டிருந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரச தரப்புக்கு தாவிய ஆனந்த அளுத்கம எம்.பியை ரிஷாத் எம்.பி சமாதானப்படுத்த முயன்ற போது, அவரை தாக்க அளுத்கமகே எம்.பி முற்பட்டார். எனினும் ஏனைய சில உறுப்பினர்கள் அதனைத் தடுத்துவிட்டனர்.   

ஹிருணிக்காவும் இறங்கினார்

இதேவேளை, சபாபீடத்தை முற்றுகையிட்ட அரச தரப்பினரிடமிருந்து சபாநாயகரைப் பாதுகாக்க ஐ.தே.கவினர் போராடிக்கொன்டிருந்த நிலையில், ஐ.தே.க. பெண் உறுப்பினர்கள் பலர் அதிர்ச்சியுடன் அதனைப் பார்த்துக்கொண்டிருக்க, ஹிருணிக்கா பிரேமச்சந்திர எம்.பி. மட்டும் துணிச்சலாக களமிறங்கினார்.  

சபாபீடத்தில் சபாநாயகரைப் பாதுகாக்கப் போராடிய எம்.பிகளுடன் இணைந்து நின்றபோது அவரை தயாகமகே எம்.பி. அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துவந்து அவ்விடத்துக்கு வரவேண்டாமென அறிவுரைகூறி தடுத்தார்.   

அனோமாவும் குதித்தார்

இந்நிலையில், இன்னொரு பெண் உறுப்பினரான அனோமா கமகேயும் சபாபீடத்தை முற்றுகையிட்ட அரச தரப்பினருடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அவ்விடத்தைவிட்டு அகற்றவும் முயற்சித்துக்கொண்டிருந்தார்.   

செயலாளர்களுக்கு மிரட்டல்

சபாபீடத்தை முற்றுகையிட்டு சபாநாயகரை தாக்க முற்பட்ட அரசதரப்பினர், நாடாளுமன்ற செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர்களையும் ( இதில் ஒருவர் பெண்) மிரட்டினர். அவர்களைத் தாக்க முயற்சிப்பது போன்றும் நடந்துகொண்டனர். இதனால் நாடாளுமன்ற செயலாளர், உதவிச் செயலாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், காணப்பட்டனர்.   

சஜித்- சமல்- விஜிதமுனி

சபாபீடத்தைச் சுற்றி வளைத்த அரசதரப்பினர் சபாநாயகரைத் தாக்க முற்பட்டதுடன் தூசன வார்த்தைகளினால் அவரைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த போது அவர்களை சபாபீடத்தை விட்டு அகற்றுவதிலும் சபாநாயகரைப் பாதுகாப்பதிலும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, சஜித் பிரேமதாஸ மற்றும் விஜிதமுனி சொய்சாவும் ஈடுபட்டனர்.   

அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தமது ஆசனங்களை விட்டு எழும்பாது நடப்பவற்றை மிகவும் அமைதியாக அவதானித்துக்கொண்டு இருந்தனர். எனினும், எஸ்.பி. திஸ்ஸாநாயக்க மிகவும் ஆக்ரோஷமான நிலையில், சபாபீட முற்றுகையில் ஈடுபட்டுள்ளார்.   

இதேநேரம் அரச தரப்பின் சில உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தவாறு நின்றுகொண்டு இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அருகில் சென்று பேச முற்பட்ட போதும் இவர்கள் தடைகளை ஏற்படுத்தினர். எனினும் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை அழைத்து அவர்களுடன் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்.   

அவதானித்த ரணில்

இவ்வளவு கைகலப்பு களேபரங்கள் இடம்பெற்ற போதும், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்து சிரித்தவாறு சம்பவங்களை அவதானித்துக்கொண்டிருந்தார்.   

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றைய தினம் சபைக்கு சமுகமளித்திருக்காத நிலையில் சபாபீடதுக்கு முன்பாக கைகலப்பு தொடங்கியவுடன் எதிர்க்கட்சிப் பக்கத்தில் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு கருதி பின்வாங்கிச் சென்றனர்.   

எனினும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் துணிச்சலுடன் களமிறங்கி ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இணைந்து சபாநாயகரைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். சபாநாயகரை நோக்கி வீசப்பட்ட பல பொருட்களையும் இவர் தடுத்து சபாநாயகரைப் பாதுகாத்தார்.   
 

25 நிமிடங்கள் நீடித்த மோதல்

காலை 10.20 மணியளவில் தொடங்கிய மோதல் தொடர்ந்த நிலையில் சபாநாயகரும் சபையை ஒத்திவைக்காது விடாப்பிடியாக நின்றதால் 10.45 மணிவரை அடிதடிகள் தொடர்ந்து சென்ற நிலையில் 10.45 மணிக்கு சபாநாயகர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதனை அடுத்து மஹிந்த ராஜபக்‌ஷ அவரது உறுப்பினர்களால் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் ஏனைய உறுப்பினர்கள் சபை ஒத்திவைக்கப்பட்ட போதும் சில மணிநரம் சபையிலேயே நின்று கூச்சலிட்டுக்கொண்டும் கோஷங்களை எழுப்பிக்கொண்டும் இருந்தனர். அரச தரப்பினர் “ரணில் கள்ளன் கள்ளன்” என கூச்சலிட்டனர்.   

இருவரும் கள்வர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியினர் “மஹிந்த திருடன் திருடன்” என பதிலுக்கு கூச்சலிட்டனர். இதன்போது அங்கிருந்த ஜே.வி.பியினர் “மஹிந்த - ரணில் திருடர்கள்” என கூச்சலிட்டனர். இதேவேளை சபை ரணகளமாகிக்கொண்டிருந்த நிலையில், சில உறுப்பினர்கள் மிகவும் குதூகலமாக செல்பிகளையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துத்தள்ளிக்கொண்டு இருந்தனர்.  

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாபீடத்தை ஆக்கிரமித்திருந்த அரசதரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தில் தண்ணீர் ஊற்றியதுடன், நாடாளுமன்ற செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டிருந்தனர்.  

உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களினால் பார்வையாளர் கலரிகளில் நிறைந்திருந்த நிலையிலேயே இவ்வளவு அட்டகாசங்களும் அடிதடி மோதல்களும் அரங்கேறின.   

மஹிந்தவைப் பாதுகாத்த மகன்

மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய ஆசனத்துக்கு முன்பாக எழுந்துநின்றுகொண்டிருந்த போது, அவருக்கருகில் அவருடைய மகன் நாமல் ராஜபக்‌ஷ நின்றுகொண்டிருந்தார். அவர்களைச் சுற்றி, உறுப்பினர்கள் பலர் நின்றுகொண்டிருந்தனர்.   

விமலும் படமும்

இறுதி நேரத்தில் சபைக்குள் பிரவேசித்த விமல் வீரவன்ச, தன்னுடைய அலைபேசியில் புகைக்கப்படங்களை எடுத்துக்கொண்டிருந்த விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்‌ஷ, சபையை விட்டு வெளியேறியபோது, அவருடன் சேர்ந்து வெளியேறிவிட்டார்.   

சபை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிவரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரால் பின்னர் விடுக்கப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .