2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கல்முனைக்குத் தனியான நகர சபை வேண்டும்’

Nirshan Ramanujam   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் கல்முனை நான்காகப் பிரிக்கப்படுமானால் தமிழ்ப் பிரதேசங்களை, தமிழர்களை உள்ளடக்கிய வகையில் தனியான நகர சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்றில் நேற்று (06) தெரிவித்தார்.

2015 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

நாம் 30 வருட கால யுத்தத்தை எதிர்நோக்கினோம். யுத்த சூழ்நிலையின் போதும் அதன் பின்னரும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறோம்.

அதன் அடிப்படையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் எமது பகுதி உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சகல வசதிகளும் உண்டு. சிறந்த செயற்திறனுடன் இயங்கக் கூடிய அனைத்து வளங்களும் இருந்தபோதிலும் கூட அங்கு இதுவரை கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படாததால் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதன் ஊடாகவே அந்த பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கடந்த காலங்களில் நிதி வழங்கலின் போது பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. நாம் பாகுபாட்டுடன் பார்க்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

சாய்ந்தமருதில் பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையும் கட்டாயமுமாகும். அங்கு தனியான சபை உருவாகுவதை நாம் எதிர்க்கவில்லை. இது தொடர்பில் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உறுதியளித்திருக்கிறார்கள். இதேவேளை, புதிய எல்லை நிர்ணயத்தில் கல்முனை நான்காகப் பிரிக்கப்படுமானால் தமிழர் வாழுகின்ற தமிழ்ப் பிரதேசத்துக்காக தனியான நகர சபை அமைக்கப்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .