2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சைட்டம் விவகாரத்தால் சபை சற்று அதிர்ந்தது

George   / 2017 ஜூன் 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ் 

சைட்டம் விவகாரம் காரணமாக நேற்றைய தினம் நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததுடன் குழப்ப கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது.  

நாடாளுமன்றில் நேற்றைய தினம் 23/2 இன் கீழ் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி, சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார். 

“சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ பீடங்களைச் சேர்ந்த, பல்கலைகழக மாணவர்கள் 7,000 பேர், வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

“இதனால், மருத்துவ பீட செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இதற்கு விரைவில் தீர்வு காணுமாறு பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். 

“அத்துடன், மகாபொல புலமைப்பரிசிலை நிறுத்தி, அரசாங்கம் மாணவர்களை வேட்டையாடுகின்றது” என்றும் குற்றம் சாட்டினார். 

அதற்கு பதிலளித்த சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “சைட்டத்துக்கு அனுமதி அளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில், தினேஷ் குணவர்தனவே சமர்ப்பித்திருந்தார்” என்றார். 

அதன்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையின்மீது தட்டி ஆதரவு தெரிவிக்க, எதிரணி உறுப்பினர்கள் அதற்கு எதிராக சத்தமிட்டனர். 

அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவை பதிலளிக்க விடாமல் எதிரணியினர் கூச்சலிட, அமைச்சர்கள் சிலரும் பதிலளிக்க முற்பட்டனர். 

“இந்த விடயத்தை விவாதமாக்க வேண்டாம் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்” என, சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினாலும் அதனை யாரும் செவிமடுக்கவில்லை. கூச்சல் தொடர்ந்த நிலையில், உறுப்பினர்களை “அமருங்கள். இல்லையென்றால் பெயர் சொல்ல நேரிடும்” என்றார். 

அதனையும் கேட்காமல் இருதரப்பும் கூச்சலிட்ட நிலையில், “இதற்கு மேல் நிறுத்தாவிட்டால் சபை நடவடிக்கைகளை இத்துடன் நிறைவு செய்யும் முடிவை எடுக்க நேரிடும்” என்றார். 

அதனையடுத்து, தினேஷ் குணவர்தன எம்.பி சமர்ப்பித்த (2013ஆம் ஆண்டு) வர்த்தமானி அறிவித்தலை உயர்கல்வியமைச்சர், சபாநாயகரிடம் வழங்கியதுடன் அதனை பார்த்துவிட்டு ஒன்றிணைந்த எதிரணியிடம் அதனை பார்க்குமாறு சபாநாயகர் வழங்கினார். 

அதனையடுத்து, சிறிது நேரத்தின் பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .