2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘புதைத்த பாதாளம் தலை தூக்குகிறது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது ஆட்சிக்காலத்தில் புதைக்கப்பட்ட பாதாள உலகக் கோஷ்டி, தற்போது தலைதூக்குகின்றது. அதுமட்டுமன்றி, உங்கள் தரப்பைச் சேர்ந்த அரசியல் பிரமுகரின் பிறந்தநாளுக்கு, பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்” என்று, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் எம்.பியான டளஸ் அழகபெரும சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரிடம், 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில், மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை தொடர்பில், கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அக்கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க, “2013ஆம் ஆண்டு 1,315 குற்றச்செயல்களும், 2014 ஆம் ஆண்டு 1,232 குற்றச்செயல்களும், 2015 ஆம் ஆண்டு 1,072 குற்றச்செயல்களும் 2016 ஆம் ஆண்டு 991 குற்றச்செயல்களென மொத்தமாக 4,610 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன” என்றார்.

கடந்த ஆட்சிக்காலம் மற்றும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றுள்ள குற்றச்செயல்களின் எண்ணிக்கை மற்றும் இயல்பைப் பார்க்கும் போது, நிலவிய அல்லது நிலவுகின்ற ஆட்சியுடன் ஏதேனும் தொடர்புகள் இருப்பதாக நம்புகின்றாரா என்று கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க, “கடந்த ஆட்சியில் இடம்பெற்றது போல, அரசியல் தலையீடு இல்லை. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

குறுக்கிட்ட, டளஸ் அழகபெரும எம்.பி, “மாத்தறை மாவட்டத்திலேயே பிரதான பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் வாழ்கின்றார். முக்கிய அரசியல்வாதியின் பிறந்தநாளன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் பத்திரிகையிலும், அந்தப் பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் பிரஸ்தாபித்துள்ளார்.

“இவையாவும், முழு நாட்டுக்கும் தெரியும். பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகளால், முழு நாடும் ஆட்டங்கண்டுள்ளது. இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களால் பலியாகின்றவர்களின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.

“இதேவேளை, எமது ஆட்சியில் குழிக்குள் இடப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட, பாதாள உலகக் கோஷ்டி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாதாள உலகக் கோஷ்டி தலைத்தூக்கியுள்ளது. இது பெரும் பயங்கரமானதாகும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

இக்கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க, “கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இடையில் ஒப்பிடுகையில், குற்றச்செயல்கள், எண்ணிக்கைகள்  குறைந்துள்ளன. அவற்றையும் இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

“இதேவேளை, பாதாள உலகக் கோஷ்டியினருடன், ஊடகவியலாளர் தொடர்பினைக் கொண்டிருப்பராயின் அது பாரிய குற்றமாகும். எது எவ்வாறோ, அந்தப் பாதாள உலகக்கோஷ்டியின் தலைவர் தொடர்பில் தகவல்களை வழங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சாகல பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X