2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மொட்டில் தமிழீழம் மலரும்’

Editorial   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரை மொட்டு சின்னத்திலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடு காரணமாகவே தமிழீழம் மலர்வதாக இருந்தால் மலருமென சாடிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையிலான தவறான பிரசாரங்களை முன்னெடுத்தாரெனவும் குற்றஞ்சாட்டினார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், கீழ்த்தரமான முறையில் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் போலியான, தீங்கிழைக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் சம்பந்தன் சாடினார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்புத் தீர்வைக் கொண்டுவந்து, உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் ஊடாக, தமிழீழம் மலரப் போவதாகவும் தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தனவெத் தெரிவித்த சம்பந்தன், இது, அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட தவறான பிரசாரங்களாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிக்கப்படாத, பிளவுபடுத்தப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு என்பதையே சுட்டிக்காட்டியிருந்ததாகக் கூறிய சம்பந்தன், வடக்கு, கிழக்கில் தாம் முன்னெடுத்திருந்த பிரசாரங்களில், எந்தவொரு இடத்திலும் பிரிவினை பற்றிப் பேசியிருக்க இல்லையெனவும் கூறினார்.

தமிமீழம் மலர்வதாக இருந்தால், அது தாமரை மொட்டினால் தான் மலருமென்றும் தெரிவித்த அவர், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து, அரசமைப்புச் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த, ஆதரவு தரப்பினர் சபையில் அதற்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, தேர்தல் காலத்தில் தமிழீழம் மலரப் போவதான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இது மக்களை ஏமாற்றும் போலிப் பிரசாரமாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, முன்னாள் ஜனாதிபதிகளின் காலத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. சர்வகட்சிக் குழுக் கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றியிருந்த அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்லத் தயார் எனக் கூறியிருந்தாரென்று நினைவுபடுத்திய சம்பந்தன்,  இவ்வாறான நிலையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவைக் கொண்டு, ஜனாதிபதியை, பிரதமரை மாற்றுமாறு கோருவது, அரசமைப்புக்கு முரணானதென்றும் அரசமைப்பின் எந்தவொரு இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் இல்லையென்றும் குறிப்பிட்டார்.   

“இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு எதிராக, 55.3 சதவீதமான வாக்குகள் கிடைத்துள்ளன. பொதுஜன பெரமுனவுக்கு 44.69 சதவீதமான வாக்குகள் கிடைத்திருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் 32.61 சதவீத வாக்குகள், ஐ.ம.சு.கூவின் 8.90 சதவீத வாக்குகள், சுதந்திரக் கட்சியின் 4.48 சதவீத வாக்குகள், ஜே.வி.பியின் 4.32 சதவீத வாக்குகள், இலங்கை தமிழரசுக் கட்சியின் 4.07 சதவீத வாக்குகள் என்பவற்றை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, பொதுஜன பெரமுனவை விட அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷவினால் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளைத் தமது அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதாகவும், சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .