2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடக்கு ரயில் பாதை இழப்பு தொடர்பில் இதுவரை மதிப்பிடவில்லை

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

“1985 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கிலுள்ள ரயில் பாதையின் இழப்புகள் தொடர்பில், எந்தவித மதிப்பீடுகள் செய்யப்படவில்லை” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக்க அபேயசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்கள் நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நேற்று முன்தினம், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

“யாழ்ப்பாணம் வரை செல்கின்ற வடக்கு ரயில் பாதை ஆரம்பிக்கப்பட்ட திகதி, அதில் ஈட்டிய வருமானம், புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட திகதி, அதனால் ஏற்பட்ட இழப்புக்கள், புனரமைக்க செலவிடப்பட்ட தொகை போன்ற விவரங்களை தெரிவிக்கவும்” என, பத்ம உதயசாந்த எம்.பி, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு, பிரதியமைச்சரே பதில் வழங்கினார்

பிரதியமைச்சர் பதிலளிக்கையில், “1905 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில், 1983ஆம் ஆண்டளவில் யாழ்தேவி ரயில் நாளொன்றுக்கு இரண்டு தடவை சென்று வந்துள்ளது.

“1980, 1981, 1982, 1983 காலப் பகுதியில் அதன் மூலம் 1,651,098,365 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

“வடக்கு ரயில் பாதையானது 1985 ஜனவரி 19ஆம் திகதி, கிளிநொச்சி, கொக்காவில் பகுதியில் முதலாவது பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கானதுடன், 1986 மார்ச் 25ஆம் திகதி, வவுனியா மற்றும் புளியங்குளம் இடையே யாழ்தேவி ரயில், வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கானது.

“தாக்குதல் காரணமாக ஏற்பட்ட அழிவு எவ்வளவு என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படவில்லை. அங்கு நிலவிய சூழ்நிலையால் வடக்குக்கு ரயில்வே திணைக்கள அதிகாரிகளால் கூட செல்ல முடியாவில்லை” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட உதயசாந்த எம்.பி, “எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காகவாவது அழிவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், “1985, 1986ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து தற்போது கணிப்பீடு செய்வது சாத்தியமற்றது. 2009ஆம் ஆண்டுவரை அங்கு அமைதி நிலவவில்லை. 2009க்கு பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த அரசாங்கத்தால் இதனை செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

“அப்போது கேட்காமல் ஏன் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றீர்கள்?  மறந்துபோன விடயங்களை கைவிடுங்கள். தமிழ் - சிங்கள உறவை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சிந்தியுங்கள். இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் சிந்திக்காதீர்கள்” என்றார்.

“அத்துடன் யுத்தத்தின் பின்னர், வடக்கு ரயில் புனரமைப்புக்காக, 2011 முதல் 2017 ஆம் ஆண்டு வரை, 84,018,888,366.68 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது இதில் 68,437,298,284.7ரூபாய், வெளிநாட்டு கடன்கள் ஊடாகப் பெற்ற நிதியாகும் ஏனையவை உள்நாட்டு நிதியாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X