கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை, தனது 80ஆவது வயதில்  காலமானார்.

மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

பல்வேறு படைப்புகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான், சினிமாவுக்கு பாடல்களை எழுத மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். கவிக்கோவுக்கு, சினிமாவில் இடம் பெறும் குத்துப்பாட்டுகள் பிடிப்பதில்லை.

சினிமா குத்துப்பாடல்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிக்கோ, “பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம். குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம்” என்று கூறியிருந்தார்.

மறைந்த வாலிப கவிஞர் வாலியும் கவிக்கோவும் நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை இயக்குநர் ஒருவர், கவிஞர் வாலியிடம் “கன்னம் என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள்” என்றாராம். “கன்னம் என்பதே எளிமையானது” தான் என்று அவர் சொல்லிப் பார்த்தார்.

இயக்குநர் கேட்கவில்லை. இதனை கவிக்கோவிடம் கவிஞர் வாலி சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே “கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே” என்றாராம்.

1937ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார்.

இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் அப்துல் ரஹ்மான். பின்னர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரஹ்மான் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது முதல் கவிதை தொகுப்பு “பால்வீதி” 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர்.

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியைப் புகழ்ந்து “முத்தமிழின் முகவரி” என, அவர் பாடிய கவிதைகள் மிகவும் பிரபலமானவை.


கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.