பழம்பெறும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (25) காலமானார். 1950களில் குழந்தை நட்சத்திரங்களுக்கான பாடல் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. மகான் காந்தியே மகான், ஓ ரசிக்கும் சீமானே, மியாவ் மியாவ் பூனைக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பேபி ஷாமிலி நடிப்பில் வெளியான துர்கா திரைப்படத்தில் வந்த, ‘பாப்பா பாடும் பாட்டு’ பாடலை பாடிய ராஜேஸ்வரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.

சென்னையில் வசித்து வந்த ராஜேஸ்வரி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று தன் 87ஆவது வயதில் காமானார். அவரின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் இசையில் பல பாடல்களை பாடியுள்ள இவர், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ் உள்ளிட்டோரின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1950களில் வெளிவந்த 'டவுன் பஸ்’ என்ற திரைப்படத்தில், ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ போன்ற பாடலை பாடியதோடு மட்டுமல்லாமல், அத்திரைப்படத்தில் அஞ்சலிதேவிக்கு பின்னணிக் குரலும் கொடுத்தவரும் இவரே.

கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில், கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடியவரும் இவர் தான். குழந்தை நட்சத்திரம் கமலே, தன் சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு, தத்ரூபமாக அந்த பாடலை பாடியிருந்தார். குழந்தைகளுக்கான பாடல்கள் என்றால், உடனே நினைவுக்கு வருபவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி தான் என்று கூறும் அளவுக்கு, பல குழந்தைகள் பாட்டுப்பாடி பிரபலமானார்.

'கைதி கண்ணாயிரம்' திரைப்படத்தில் வரும் ‘சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்’ பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ என பல பாடல்க​ள் பாடியது முதல் 1990க்குப் பின்னர் வந்த ‘துர்கா’ திரைப்படத்தில் பேபி ஷாமிலிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியுள்ளார் ராஜேஸ்வரி. அதன் பின்னர் 1970களின் இறுதிவரை, புகழ்பெற்றிருந்த அவர், பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989இல் மணிரத்னம் இயக்கிய 'நாயகன்' திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.

​மேலும், காக்கா மைகொண்டா( மகாதேவி), மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை ), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே (செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) போன்ற பல  பாடல்கள் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏவிஎம் நிறுவனத்தில், மாதச் சம்பளத்தில் இணைந்தார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து, ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது. இத்திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, நான்கு பாடல்களைப் பாடினார்.

ஏவிஎம் காரைக்குடியில் இருந்து சென்னை இடம் மாறிய போது, ராஜேஸ்வரியும் சென்னை வந்தார். அதன் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமடைந்தார்.

அந்த வகையில், மழலையை பேசும் ராஜேஸ்வரியின் குரலின் இனிமை, இசை ​ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்கா நினைவுடன் இருக்கும் என்பதே திண்ணம்.

 


பழம்பெறும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.