2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகர் காலமானார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனைவருடனும் நட்போடு பழகிய மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில், தனது 75ஆவது வயதில் காலமாகினார். சுகவினம் காரணமாக கடந்த இரு வாரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட மாணிக்கவாசகர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பில் வாழ்ந்து வந்தார். டைம்ஸ் ஒப் சிலோன் என்ற ஆங்கில நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார். பின்னர் சன்டே ஒப்சேவர் வார ஏட்டில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து, பத்திரிகைத் துறையில் இருந்து ஓய்வுபெற்றார்.
 
ஓய்வுபெற்ற பின்னரும் வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகிய நாளேடுகளிலும் அதன் வார ஏடுகளிலும் ஆக்கங்களை எழுதி வந்தார். குறிப்பாக கலை, இலக்கியம், இசை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் தொடர்பாக எழுதினார்.
 
அத்துடன் கலை, இலக்கிய, இசை நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் அவை பற்றிய விமர்சனங்களையும் தவறாது எழுதிவந்தார். குறைகளை சொல்வதை விட நிறைகளை எழுதி கலைஞர்களை உற்சாகப்படுத்துவது அவருடைய பிரதான பண்பாகும்.
 
எந்த துறைசார்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவர் உயிரிழந்து விட்டால் அவருடைய வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சாதனைகளை நாளேடுகளில் எழுதி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவார். 
 
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவனான செல்லத்தம்பி மாணிக்கவாசகர், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கணேசராஜாவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிக் கிரிஜைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .