2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கியது

George   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனும் கண்ணதாசனின் அற்புத வரிகளுக்கு இசையமைத்தது மட்டுமன்றி அதனை போலவே வாழ்ந்து காட்டி, இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு  மெல்லிசை மன்னன் என்ற பட்டம் பெற்ற இசைத்தாயின் புதல்வனது  இமைகள் நிரந்தரமாக மூடிக்கொண்டன.

இசையை தன் உயிராக உடலாக நினைத்து, தள்ளாத வயதிலும் இசை மீது நாட்டம் கொண்டு இனிமையான இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். 3 தசாப்தங்களுக்கு மேலாக இசைக்காக தன்னை அர்ப்பணித்த இவருக்கு, அண்மைக்காலமாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டிருந்தது.

87 வயதான எம்.எஸ்.வி, சென்னை தனியார் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கும் 500 திரைப்படங்களுக்கு தனியாகவுமென  மொத்தமாக 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள மெல்லிசை மன்னனின் வாழக்கை, அவரது இளைமைக் காலத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.

இளமைப் பருவம் 

கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஜூன் மாதம் 24ஆம் திகதி பிறந்த மெல்லிசை மன்னரின் முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். இதை தான் அவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என மாற்றிக்கொண்டார். சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்ட எம்.எஸ்.வி, நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி சங்கீதம் கற்றதுடன் தனது கன்னி மேடைக் கச்சேரியை 13ஆவது வயதில் மேடையேற்றினார். திரையிசைப் பாடகராகவும் நடிகராகவும் தான் வரத்தான் எம்.எஸ்.வி.க்கு ஆசை. அதனாலேயே, ஆரம்ப காலத்தில் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடித்தார். 

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம், எஸ்.வி.வெங்கட்ராமனிடம் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.எஸ்.வி, அதன்பின்னர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.

இந்த காலக்கட்டத்தில், வயலின் இசைக் கலைஞரான டி.கே.ராமமூர்த்தியின் நட்பு கிடைத்தது. எதிர்பாராதவிதமாக 1952ஆம் ஆண்டு ஆர்.சுப்பாராமன் மரணமடைய, அவர் பணியாற்றி வந்த தேவதாஸ், சண்டிராணி, மருமகள் போன்ற திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைப்பாளர்களாக தொடரும் வாய்ப்பு இந்த இரட்டையர்களுக்கு கிடைத்தது. பின்னர், இவர்களின் திறமையை அறிந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது சொந்த திரைப்படத்தில் இவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். 

இந்நிலையில், பணம் என்ற திரைப்படத்துக்கு விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், இசையமைப்பாளர் பெயரில் ராமமூர்த்தி - விஸ்வநாதன் பெயர் வர வேண்டும் என விஸ்வநாதன் விரும்பினார். காரணம், ராமமூர்த்தி வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் இதை விரும்பினார். ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனோ, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ராமமூர்த்தி உன் பின்னால் இருப்பது உன்னை தாங்கி பிடிப்பது போன்ற ஒரு வலிமையை கொடுக்கும் என்று கூறி, விஸ்வநாதன் பெயரை முன்பும், ராமமூர்த்தியின் பெயரை பின்னாலும் இணைத்தார். 

சென்ஞ்சுரி அடித்த இரட்டையர்கள்

1952ஆம் ஆண்டு 'பணம்' திரைப்படத்தில் ஆரம்பித்த இந்த இரட்டையர்களின் வெற்றிக் கூட்டணி, 1965ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தனர்.  எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா இணைந்த முதல்திரைப்படமான, இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் பிரமாண்ட தயாரிப்பான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான் இவர்கள் கடைசியாக இசையமைத்து மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம். அதன் பின்னர் இருவரும் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினர். 

இசை ராஜ்யம் 

ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி, தனியாக, 500 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என மொத்தமாக அவர், 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1951ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டுவரை, 30 ஆண்டுகள் தமிழகத்தில் அவரது இசை ராஜ்யம் தான் நடந்தது.

எம்.எஸ்.வி.யின்  இசையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு என பெரும்பாலான முன்னணி நடிகர்கள் டூயட் பாடியுள்ளதை எவராலும் மறக்க முடியாது.

ஏ.எஸ்.ஏ.சாமி, டி.பிரகாஷ் ராவ், கிருஷ்ணன் பஞ்சு, பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஏ.பீம்சிங், பா.நீலகண்டன்,ஸ்ரீதர், ராமண்ணா, ஏ.சி.திரிலோகசந்தர், முக்தா சீனிவாசன், கே.சங்கர், பி.மாதவன், கே.பாலசந்தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.பாக்யராஜ், விசு, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்ற திரையுலக ஜாம்பவான் இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எம்.எஸ்.வி.க்கு கிட்டியது.

ஜ§பிட்டர் பிக்சர்ஸ், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ்.வாசன், பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன், முக்தா சீனிவாசன், கவிதாலயா, கே.பாலாஜி போன்ற பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களின் பிரமாண்டமான படைப்புகளை தனது இசைவெள்ளத்தில் மூழ்கடித்துமுள்ளார்.

எம்.எஸ்.வி - கண்ணதாசன், எம்.எஸ்.வி – வாலி  கூட்டணியில் உருவான பாடல்கள் அக்காலத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றதுடன் இப்போதும் அனைவராலும் விரும்பி கேட்கப்படும் இசைப் பேழைகளாக திகழ்கின்றன.

1960ஆம் ஆண்டுகளில்  கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவிய பாடல்களாக இன்றும் திகழ்கின்றன. பொதுவாக இசையமைப்பாளர்கள், கவிஞர்களிடம் மெட்டுக்கு ஏற்றபடி பாடல் வரிகளை மாற்றச் சொல்லி கேட்பார்கள். ஆனால், விஸ்வநாதனோ கண்ணதாசனின் பெரும்பாலான பாடல் வரிகளை அப்படியே தன் மெட்டுக்குள் புகுத்தி, சொல்ல வந்த கருத்தை கவித்துவம் மாறாமல் தன் இசை கோர்ப்பால் அழகு சேர்த்தார். 

கர்ணன் திரைப்படத்தில் வந்த 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', சுமைதாங்கி திரைப்படத்தில் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' மற்றும் 'மயக்கமா கலக்கமா', பலே பாண்டியாவில் 'வாழ நினைத்தால் வாழலாம்' , காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் 'நாளாம் நாளாம் திருநாளாம்' ஆகிய பாடல்களுடன், அவள் ஒரு நவரச நாடகம், அத்தான் என்னத்தான், தெய்வம் தந்த வீடு, ஆறு மனமே ஆறு. மலர்ந்து மலராத, உலகம் பிறந்தது எனக்காக, என்னருகே நீயிருந்தால். நாளை முதல் குடிக்கமாட்டேன், கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், அவள் பறந்து போனாளே, அச்சமென்பது மடமையடா, அண்ணன் என்னடா தம்பி என்னடா, பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என இவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் அழியா புகழ்பெற்றவை.

கவிஞர் வாலியின் கூட்டணியில் உருவான சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், ஒன்னா இருக்க கத்துக்கணும், கண்போன போக்கிலே கால் போகலாமா, தரை மேல் பிறக்க வைத்தான், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், காற்று வாங்க போனேன், ஏன் என்ற கேள்வி, மன்னவனே அழலாமா, நாளை இந்த வேளை பார்த்து, வண்ணக்கிளி சொன்ன மொழி, அங்கே சிரிப்பவர்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், நிலவு ஒரு பெண்ணாகி, வெற்றி மீது வெற்றி, நான் ஆணையிட்டால், இதோ எந்தன் தெய்வம் என மாபெரும் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.வி தான்.

நடிப்பிலும் சாதனை 

இசையமைப்பாளராக மட்டுமல்லாது நடிகராவும் வாழ்ந்த எம்.எஸ்.வி, கமல்ஹாசன், அஜீத் உள்ளிட்ட நடிகர்ளுடன் நடித்துள்ளார். காதலா காதலா, காதல் மன்னன், தகதிமிதா, அன்பே வா (புதியது) தில்லு முல்லு (ரீ-மேக்) உள்ளிட்ட சுமார் 10 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைமறை சாதனை

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த எம்.எஸ்.வி, இசையுலகுக்கு ஏராளமான பாடல்களை வாரி வழங்கியது போலவே, திறைமையாக பாடகர்களையும் பாடலாசிரியர்களையும் இசையுலகத்துக்கு தருவதற்கு மறக்கவேயில்லை.
ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம்.எல்.ஸ்ரீகாந்த், ஜி.கே.வெங்கடேஷ், கல்யாணி மேனன், சுஜாதா புஷ்பலதா, ஷேக் முகமது, ஷோபா சந்திரசேகர்  என் பல பாடகர்களை அறிமுகப்படுத்திய அவர், கவிஞர்களான புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.தர்மராசன், ரொஷானா பேகம் உள்ளிட்ட பல பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

காற்றுள்ள வரை இசை இருக்கும். இசையுள்ளவரை எம்.எஸ்.வி.யின் பெயர் ஒலிக்கும். காலங்கள் கடந்தாலும் அவரது மெட்டுக்கள் இன்றும் என்றும் என்றென்றும் எம் மனதைவிட்டு நீங்காது என்பது நிதர்சனம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X