2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அப்பிளிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்தது சம்சுங்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 07 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வடிவமைப்பை பிரதியீடு செய்தமைக்காக, சம்சுங்க்கு விதிக்கப்பட்ட 399 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் உரிமை மீறல் அபராதத்தை, ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம், நேற்று (06) அகற்றியுள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்காக, குறித்த வழக்கானது தொழில்நுட்ப உலகில் நெருக்கமாக அவதானிக்கப்பட்டிருந்தது.

வடிவமைப்பு பாகங்களில் உரிம மீறலை மேற்கொண்டமைக்காக, தனது திறன்பேசிகளிலிருந்தான மொத்த இலாபத்தையும் சம்சுங் இழக்கத் தேவையில்லை என உச்ச நீதிமன்றத்திலிருந்த எட்டு நீதிபதிகளும் தீர்ப்பளித்ததோடு, குறித்த வழக்கினை மீண்டும் கீழ் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட தீர்ப்பானது தெளிவான அறிவுறுத்தல்களை வழங்காதபோதும், பாகமொன்றின் உரிம மீறலுக்காக, உரிமத்தை வைத்திருப்பவர்கள் பெருந்தொகையான இலாபத்தைப் பெறுவதை தடுக்கிறது.

மேற்படி தீர்ப்பினை, சம்சுங் மற்றும் சந்தையில் படைப்பாற்றல், கண்டுபிடிப்பு,  நியாயமான போட்டியை ஊக்குவிப்பவர்களின் வெற்றியென்று சம்சுங் வர்ணித்துள்ளது.

வளைவான முனைகளுடன் கூடிய ஐபோன்களின் செவ்வக வடிவ முகப்பு, கறுப்புத் திரையில் காணப்படும் வர்ணமயமான ஐகோன்களின் தொடரைப் பிரதியீடு செய்தமைக்காக, சம்சுங் உரிம மீறலை மேற்கொண்ட திறன்பேசிகளிலின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட முழுமையான இலாபத்தை 399 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தண்டம் பிரதிபலிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இது பொருத்தமற்றது என 11 பக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தண்டத்தை எவ்வாறு கீழ் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமென்ற தகவல்களை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கவில்லை.

ஐபோன் காப்புரிமைகளை பிரதியீடு செய்தமைக்காக ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குமாறு ஜூரிகளினால் உத்தரவிடப்பட்டிருந்து, பின்னர் 548 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தண்டமாக குறைக்கப்பட்டதன் ஒருபகுதியே மேற்படி வழக்காகும்.

குறித்த வழக்கில், கூகுள், பேஸ்புக், டெல், ஹெச்.பி உள்ளடங்கலான, பெரும்பாலான சிலிக்கன் பள்ளத்தாக்கு நிறுவனங்களினதும் ஏனைய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களினது ஆதரவை சம்சுங் பெற்றிருந்தது. மறுபக்கம், கொக்கா-கோலாவின் சோடாப் போத்தல் உரிமத்தை மேற்கோள்காட்டி, அலங்கார மற்றும் தயாரிப்பு நிறுவனங்களால் அப்பிளுக்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீர்ப்புத் தொடர்பில் மின்னஞ்சலொன்றில் கருத்துத் தெரிவித்த அப்பிளின் பேச்சாளரொருவர், “எங்களது எண்ணங்களை சம்சுங் அப்பட்டமாகப் பிரதியீடு செய்வதே எப்போதும் எங்களது வழக்கு. களவெடுப்பது சரியானதல்ல என்பதற்கான சக்திவாய்ந்த சமிக்ஞையை கீழ் நீதிமன்றங்கள் மீண்டும் வழங்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகக்” கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .