2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சூரியக் கிரகணம்; டிசம்பரில் வானில் அற்புதங்கள்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பெரும்பாலானவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பிடித்திருக்காது. ஆனால், நட்சத்திரங்களைப் பார்க்கும் விஷயத்திலாவது, இந்த ஆண்டு ஆர்வம் தருவதாக இருக்கும். இந்த டிசம்பர் மாதம் வீட்டில் இருந்தே 'டெலஸ்கோப்' அல்லது விலை அதிகமான சாதனங்களின் உதவியில்லாமல் நேரடியாக விண்வெளியில் பார்க்கக் கூடிய அற்புதமான சில காட்சிகள் நிகழ இருக்கின்றன.

இரண்டு கோள்கள் ஒன்றாக சேர்வது, எரிகற்கள் பொழிவது, முழு சூரிய கிரகணம்-இவற்றைக் காண வானம் தெளிவாக இருந்தால் போதும், தேவை இருந்தால் கண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். எப்போது, எந்தப் பக்கம் பார்க்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் தேவை. இந்த மாதம், வான்வெளி உங்களுக்கு அளிக்கப் போகும் காட்சிகளின் விபரம் வருமாறு;

டிசம்பர் 13 - 14: எரிகற்கள் பொழிவு

மற்ற விண்கற்களைக் கடந்த சில மாதங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ``எரிகற்கள் மழையாகப் பொழியும் காட்சியைக் காண'' உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

``வால் நட்சத்திரங்கள் விட்டுச் செல்லும் தூசி மண்டலத்தின் வழியாக பூமி செல்லும் போது எரிகற்கள் பொழியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது'' என்று பிரிட்டன் ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் மையத்தில் உள்ள வானிலை நிபுணர் பாட்ரிசியா ஸ்கெல்ட்டன் தெரிவித்தார்.

ஆனால், ஜெமின்டிஸ் எரிநட்சத்திர பொழிவு வித்தியாசமானது. 3200 பேட்டன் என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மண்டலமாக இது இருக்கிறது'' என்கிறார் பாட்ரிசியா.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் நமது பூமி இந்த கைவிடப்பட்ட குப்பைகளின் வழியே பயணிக்கும்போது, இரவு நேரத்தில் ஒளிமயமான காட்சிகளைக் காண்கிறோம்: டிசம்பர் முதலாம் திகதி  முதல் 14ஆம் திகதி வரை அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 150 எரிநட்சத்திரங்கள் வீழும்.

`எரிநட்சத்திரங்கள் ஒரு விநாடிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வரும்'' என்று பாட்ரிசியா தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது மஞ்சள் நிறத்தைக் காணத் தயாராக இருங்கள். சில நேரம் இது பச்சை அல்லது நீல நிறமாகவும் இருக்கும். இரவு நேர வானில் பெரிய வெளிச்சக் கீற்று கடந்து போகும். ``எரிநட்சத்திரங்கள் பறந்த நிலையில் எரிந்து விழும்போது எல்லா திசைகளிலும் இந்தக் காட்சி தோன்றும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கும்மிருட்டாக இருந்தால், இந்த அழகிய காட்சியை அருமையாகக் காண முடியும். ஆனால், ஒளி மாசு நிறைந்த நகர்ப்புறங்களில் இந்தக் காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.

இன்னும் கொஞ்சம் நல்ல செய்தியும் இருக்கிறது. கடந்த ஆண்டைப் போல அல்லாமல் (பவுர்ணமியுடன் சேர்ந்து வந்தது), இப்போது அமாவாசையில் வருவதால் காட்சி நன்றாகத் தெரியும்.

டிசம்பர் 14: சிலி,ஆர்ஜென்டினாவில் முழு சூரிய கிரகணம்

சிலி மற்றும் அர்ஜென்டினாவில், டிசம்பர் 14ஆம் திகதி  முழு சூரிய கிரகணம் தோன்றும்.இருந்தாலும் இன்டர்நெட் மூலமாக லைவ் ஸ்டீரிமிங் செய்வதால் எல்லோரும் பார்க்கலாம்!

பெருந்தொற்று பாதிப்புக்கு முன்பாக இருந்திருந்தால், இந்த மாபெரும் நிகழ்வைக் காண தெற்கு சிலியில் படகோனியா மற்றும் ஆர்ஜென்டினாவில் மக்கள் திரண்டிருப்பார்கள்.ஆனால், இந்த 2020 ஆம் ஆண்டில் எல்லோரும் ஒன்லைனில் தான் பார்க்க வேண்டும்.

நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கும் இடத்தில் நீங்கள் இருந்தால், ஒருபோதும் நேரடியாகப் பார்க்காதீர்கள் - பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். முக்கியமான அந்த 24நிமிடங்களில், நிலவு சூரியனைக் கடந்து செல்லும். அப்போது "2 நிமிடங்கள் 9.6 விநாடிகள் மட்டும் " முழுமையாக சூரியனை மறைக்கும் என்று ரோயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் வானிலை ஆய்வாளர் டானியா டி சேல்ஸ் மார்க்கஸ் தெரிவித்தார்.

  "சூரியனைவிட நிலவு 400 மடங்கு சிறியது. ஆனால், பூமிக்கு அருகில் இருப்பதால், அது பெரியதாக இருப்பதைப் போல நமக்குத் தோன்றும். எனவே சூரியனின் வட்டத்தை அது முழுமையாக நமது பார்வையில் இருந்து மறைத்துவிடும்" என்று டானியா விளக்கியு ள்ளார்.

சூரியனுக்கு முன்னால் நிலவின் பயணப் பாதை கும்மிருட்டு திரை போல ஒன்றை உருவாக்கும். இதை தெற்கு அமெரிக்காவின் தெற்கு முனையில் பகலிலேயே காண முடியும்.படகோனியாவில் வாழும் மாபுச்சே என்ற உள்ளூர் பகுதி மக்கள் இந்த வானியல் மாற்றங்களை மிக நெருக்கமாகக் கவனிக்க முடியும்.

`சூரியன் `ஆண் சக்தியை' குறிப்பிடுகிறது. நிலவு `பெண் சக்தியைக்' குறிப்பிடுகிறது. அவை இரண்டும் கடக்கும் போது ஏற்படும் சூழ்நிலை நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்'' என்று அந்த மக்களின் கலாசார கல்வியாளர் மார்செலோ ஹியூகுவென்மன் தெரிவித்தார்.

பாரம்பரியமாக, மாபுச்சே மக்கள் சூரிய கிரகணங்களை அச்சத்துடன் பார்த்து வருகிறார்கள். `சூரியனின் மரணம்' என்ற வகையில் அவர்கள் அதைக் கருதுகிறார்கள் என்கிறார் மார்செலோ.

"உலகெங்கும் சுமார் 5,000 ஆண்டுகளாக சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன" என்று டானியா தெரிவித்தார்.

 "சூரியன் விழுங்கப்படுவது போல தோன்றும் சில நிமிடங்கள் இரவு போல ஆகிவிடுவதால், சூரிய கிரகணத்தை கெட்ட விஷயமாக வரலாற்றின் பெரும்பகுதி காலத்தில் கருதப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஒரே ஆண்டில் ஐந்து முறை சூரிய கிரகணங்கள் நிகழக் கூடும். ஆனால், முழு சூரிய கிரகணம் 18 மாதங்களுக்கு ஒரு முறைதான் நிகழும். சூரியனின் ஒளியை முழுவதுமாக மறைப்பதற்கான சரியான பாதையில் நிலவு வரும் போதுதான் அது நிகழும்'' என்று டானியா கூறினார்.

 டிசம்பர் 21:வியாழன், சனி கோள்கள் சேர்க்கை.

"வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் அழகாக, வெளிச்சமாகத் தெரிவதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்" என்று ரோயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் வானியலாளர் எட் புளூமர் தெரிவித்தார்.

இரு கோள்களும் ஒன்றாக சேருவது போல, இரண்டும் ஒன்றாக ஒளிர்வது போல இந்த சேர்க்கை இருக்கும்.

இதை நாம் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு பார்க்கலாம். ``வானில் வியாழன் மற்றும் சனி கோள்கள் மிக நெருக்கமாக, ஏறத்தாழ தொட்டுக் கொள்வதைப் போல தெரியும்'' என்று எட் புளூமர் கூறினார்.

வெறும் கண்களால் பார்க்கும்போது இரு கோள்களும் 0.1டிகிரிக்கும் குறைவான அளவுக்கு நெருக்கமாக இருப்பது போல தெரியும். ஆனால், உண்மையில் அப்படி இருக்காது. வியாழனுக்கும் பூமிக்கும் இடையில் 800 மில்லியன் கி.மீ. தூரம் உள்ளது (சுற்றுப் பாதையில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்து இது மாறும்). வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையிலும் இதே நிலைதான் இருக்கும். ஆனால், சில மாதங்களாக, இரு பெரும் கோள்களும் இரவு நேர வானில் நெருங்கி வருவது போல தோன்றியது, இப்போது இறுதியில் "சந்தித்துக் கொள்வது"போல தோன்றும்.

"இது மாதிரி சேர்க்கைகள் பார்ப்பதற்கு மகிழ்வாக இருக்கும். குறிப்பாக சேர்க்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் நெருங்கும்போது எப்படி மாற்றம் நிகழ்கிறது என்பதைப் பார்க்க நன்றாக இருக்கும்."என்று புளூமர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X