2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Galaxy Note 7 பிரச்சினைகள்: திணறுகிறது சம்சுங்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்சுங்கின் Galaxy Note 7 திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே, Galaxy Note 7 தயாரிப்புகளை நிரந்தரமாக நிறுத்துவதாக, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11), குறுகிய அறிக்கையொன்றில் சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தீப்பற்றாத பெட்டிகளில், Galaxy Note 7கள், சம்சுங் நிறுவனத்துக்குச் செல்லவுள்ள நிலையில், என்ன காரணத்தால், Galaxy Note 7-இல் பிரச்சினை தோன்றியது என்பதற்கு இன்னும் விடைகாணப்படாமலேயே உள்ளது.

Galaxy Note 7கள் தீப்பற்றுகின்றன என்ற அறிக்கைகைகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், 2.5 மில்லியன் கணக்கான Galaxy Note 7களை மீளப்பெறுவதாக, சம்சுங் அறிவித்திருந்தது. அந்நேரத்தில், தாங்கள் விசாரணையொன்றை மேற்கொண்டதாகவும், மின்கலப் பிரச்சினையொன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சம்சுங் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, 882 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான Galaxy Note 7ஐ முழுமையாக மீளப்பெறுவதாக செவ்வாய்க்கிழமை, சம்சுங் அறிவித்துள்ள நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில், நிகழ்ந்த, மிகவும் பெறுமதி வாய்ந்த பாதுகாப்புக் குறைபாடாக மாறியுள்ளது.

பதிலீடு செய்யப்பட்ட Galaxy Note 7-களும் தீப்பற்றுவதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்ற நிலையில், ஒழுங்குபடுத்துநர்கள், சேவை வழங்குநர்கள், விமான சேவை நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து புதிய எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையிலேயே, Galaxy Note 7 தயாரிப்பை நிறுத்தும் முடிவை சம்சுங் எடுத்துள்ளது.

தமது நுகர்வோரின் பாதுகாப்பே முதன்மையானது மற்றும் முக்கியமானது என்பதை கருத்திற் கொண்டு, Galaxy Note 7 தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்தத் தீர்மானித்ததாக, சியோல் பங்கு பரிவர்த்தனையில், தென்கொரிய நிறுவனமான சம்சுங் தெரிவித்திருந்தது. எவ்வாறெனினும் என்ன பிரச்சினை என்பது பற்றி ஒரு சொல்லும் தெரிவித்திருக்கவில்லை.

முன்னதாக, பிரச்சினை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஒழுங்குபடுத்துநர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், Galaxy Note 7-இன் விற்பனையை நிறுத்துமாறும் அசல் Galaxy Note 7 திறன்பேசிகளுக்காக பிரதியீடுகளை வழங்குவதை நிறுத்துமாறும், பூகோளத்திலுள்ள அனைத்து சேவை வழங்குநர்களையும் கேட்டிருந்தது. தற்போது, Galaxy Note 7-க்கு பதிலாக வேறு சாதனங்களை அல்லது பணத்தை மீள, சம்சுங் வழங்குகின்றது.

இந்த நிலையில், Galaxy Note 7 விற்பனையை நிரந்தரமாக நிறுத்துவதால், 17 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்ததுடன், சம்சுங்கின் ஏனைய அலைபேசி தயாரிப்புகள் தொடர்பில், நுகர்வோர் மற்றும் சேவை வழங்குநர்களின் மனங்களில் குழப்பமான நிலையை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, நூற்றுக்கணக்கான பணியாளர்களை, சம்சுங் பணிக்கமர்த்தியபோதும், பல வாடிக்கையாளர்கள் உணர்ந்தது போன்ற, அதீத வெப்பமுடைய, தீப்பற்றுகின்றவாறான Galaxy Note 7 சோதனையை நிகழ்த்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னர் மீளப்பெறப்பட்ட Galaxy Note 7களில், சம்சுங்கின் உபநிறுவனமான எஸ்.டி.ஐ-ஆல் தயாரிக்கப்பட்ட மின்கலங்களே கவனம் பெற்ற நிலையில், அவை பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்ற]துடன், USB-C கேபிள்களோ அல்லது விரைவாக மின்னேற்றுதலோ பிரச்சினையாகக் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்ற நிலையிலும் என்ன பிரச்சினை என்று இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

சம்சுங்கின் அறிவிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியமையைத் தொடர்ந்து, சம்சுங் நிறுவனத்தின் சந்தை மதிப்பை, ஏறத்தாழ 20 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களால், முதலீட்டாளர்கள் குறைத்த நிலையில், அன்று, சம்சுங்கின் பங்குகள், ஒரேநாளில், எட்டு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரே நாளில் இவ்வளவு வீழ்ச்சியடைவது, இதுவே ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .