2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

YGC 5 இறுதியில் 9 அணிகள்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 07 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்ககாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கிவரும் Yarl IT Hub-இனால் ஒழுங்கமைக்கப்படும் பிரதான நிகழ்வான Yarl Geek Challengeஇன் சிரேஷ்ட பிரிவுப் போட்டிகள், கடந்த வெள்ளிக்கிழமை (04) காலை 8.30 மணியளவில், ஹற்றன் நஷனல் வங்கியின் யாழ் நகர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

Yarl Geek Challenge ஆனது கடந்த நான்கு வருடங்களாக நடாத்தப்பட்டு, இம்முறை ஐந்தாவது வருடமாகவும் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது முறையாக நடத்தப்படும் இப்போட்டி நிகழ்ச்சியில், மூன்று தொடக்கம் ஐந்து வரையான அங்கத்தவர்களைக் கொண்ட 38 அணிகள், முன்மொழிவுகளை அனுப்பியிருந்தன.

அவற்றை கடுமையான தொழில்நுட்ப திறனாய்வுக்குட்படுத்திய தெரிவுக்குழு, அவற்றை முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், அவ்வாறு உருவாக்கப்படும் மென்பொருள் அல்லது தீர்வுத் தொகுதிகளுக்கான வியாபார உத்திகளையும் வருமானமீட்டி ஒரு தொடக்கநிலை வணிகமாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இதில் தேர்வான அணிகள், இரண்டாம் கட்டப் போட்டிகளுக்காக, யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டன. அவற்றில், 13 அணிகள் யாழ்ப்பாணத்துக்கு சமூகமளித்திருந்தன. பங்குபற்றிய அணிகளில் பெரும்பாலானவை, கொழும்பு, மொரட்டுவை, யாழ்ப்பாணம், பேராதனை பல்கலைக்கழகங்களை சார்ந்தவை ஆகும்.

கடந்த வருடம் போலவே இவ்வருடமும் மிகவும் ஆக்கபூர்வமான சுவாரஷ்யமான சிந்தனைகளுடன் கூடிய படைப்புகள், முதல் நாள் (வெள்ளிக்கிழமை) காலையில், போட்டியாளர்களால் “அறிமுகம் செய்தல்” பகுதியில் முன்வைக்ப்பட்டன. இதில், ஒவ்வொரு குழுத்தலைவரும் தமது ஆக்கம் பற்றிய அறிமுகத்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவினருக்கும், வணிக அறிவுரையாளர்களுடன் அவர்களது ஆக்கத்தினை எவ்வாறு வாணிபப்படுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல் சுமார் 45 நிமிடங்களுக்கு இடம்பெற்றது.

இரண்டாம் நாளில் (சனிக்கிழமை), இறுதி நிகழ்வின்போது எவ்வாறு தாங்கள் ஆக்கத்துக்கான ஆற்றுகையினை வழங்கவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், அன்றய நாளுக்கான நிகழ்வுகள் நிறைவுக்கு வந்திருந்தன.

பிரம்மாண்டமான இறுதி நாள் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது. இதில், 150க்கும் அதிகமான ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர். போட்டியிட்ட அணிகள் ஒவொன்றிற்கும் ஐந்து நிமிட அளிக்கை நேரமும் மூன்று நிமிட கேள்வி நேரமும் வழங்கப்பட்டது. 13 அணிகளும் தங்களுடைய கனவுப் படைப்புகளை, நடுவர்கள், முதலீட்டாளர்களுக்கு அளிக்கை செய்தனர்.

அனைத்து அளிக்கைகளுக்கும் பின்னர், எதிர்வரும் 19ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு, Tesla, JoomTriggers, Qurd – Core, 404, YarlCoders, Pargus, TechErup, UOJ_Robots, EagleI ஆகிய 9 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  தெரிவான ஒன்பது அணிகளினதும் சிறு குறிப்பை கீழே பார்க்கலாம்

Tesla

இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான உணவகங்கள்  மக்களுக்கு சேவை வழங்குகின்றன, எனினும் அதில் எமக்குப் பிடித்த வகையில் எத்தனை உணவகங்களில் விருப்பத்துக்கேற்ப உணவுகளை தயார் செய்ய முடியும்? இதற்கான தீர்வினை UCSC யைச் சேர்ந்த Tesla அணியின் ஜார்விஸ் எனும் செயலி வழங்குகிறது உங்களுக்கு தேவையான முறையில் உணவு மற்றும் சேவையினை வடிவமைக்க குறித்த செயலி உதவுவதோடு சிறந்த வணிக முறையையும் கொண்டுள்ளது.

JoomTriggers

புலம்பெயர்ந்த மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தங்கள் குடும்ப நிகழ்வுகளை சிறப்பாக நடத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியே JoomTriggers இன் திட்டம் ஆகும். இவ் வலைத்தள செயலி மூலமாக பந்தல் முதல் வாழைமரம் வரை இருந்த இடத்திலிருந்தே ஒழுங்கு செய்ய முடியும். திறமையான யாழ் இந்துக்கலூரியின் மாணவர்களின் இம்முயற்சி, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றது.

Qurd - Core

யாழ் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறை மாணவர்களின் Qurd - Core அணியின் வித்தியாசமான எதிர்காலத்துக்கான ஒரு படைப்பு ANIVA ஆகும். இது விளம்பரங்களின் எதிர்காலம் எனக்கூறப்படும் ஹலோகிராம், மெய்நிகர் உண்மை தொழில்நுட்பங்களின் ஓர் படைப்பு ஆகும். இந்த அணியின் அளிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Team 404

மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் அணியான 404-இன் CureMe செயலி, மருத்துவர்கள், தங்கள் நோயாளர்களின் உடல்நிலை தொடர்பான குறிப்புகளை இலகுவாக உள்ளீடு செய்யவும் உபயோகிக்கவும் கூடிய வகையில் எளிமையான தொழில் முறையையுடன் அமைந்துள்ளது.

YarlCoders

விளம்பரப் பதாகைகளை இணையைத்தளச் செயலி மூலம் தொகுத்து வழங்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட YarlCoders அணியின் தொழில் முயற்சி, யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பதாகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இம்மூவர் அணியின் உறுதியான அளிக்கை முறை இவர்களின் இறுதி போட்டிக்கான தகுதியை உறுதி செய்தது.

Pargus

உங்கள் வாகனங்கன இயந்திரங்களின் நிலைகளைகளை திறன்பேசி செயலியொன்றின் மூலம் கண்டறிய முடியுமா? முடியும் என்று அதனை நிரூபித்தும் காட்டிய மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களே Pargus ஆவர். Auto Self Care எனும் இச்செயலி வாகனம் வைத்துள்ள அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.

TechErupt

UCSC யைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய TechErupt அணி, முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரையு ஒன்றிணைக்கும் இணையத்தள செயலி ஒன்றினை வடிவமைத்திருந்தனர். இது இலங்கையில் தொழில்தொடங்குவோரின் எண்ணிக்கையில் பெரும் பங்குவகிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

UOJ_Robots

யாழ் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறை மாணவர்களின் அணியான UOJ_Robots-இன் வாகன சாரதிகளின் பாதுகாப்புக்கான, எதிர்காலத்துக்கான ஒரு படைப்பே Accident_free_driving_system ஆகும். தூக்கமின்மை, மதுபானம் அருந்தி வாகன ஓட்டுதல் ஆகிய காரணங்களினால் ஏற்படும்  விபத்துகளை தொழிநுட்பத்தின் உதவியுடன் நிவர்த்தி செய்த இவர்களின் திறமை, இறுதிப் போட்டிக்கு தெரிவாக முக்கிய காரணமாக அமைந்தது.

EagleI

வாகனத்தரிப்பிடங்களில் நிகழ்நேர கண்காணிப்பு, முறையாக்கத்துக்கான ஓர் இலகுமுறை செயலி மூலமான Smart Parking Guide  எனும் தீர்வினை Eaglel அணியின அளிக்கை செய்தனர். இச்செயலியின் எளிமையும் தொழில்முறை தேவையும் அனைவரையும் கவர்ந்திருந்தது.

இவ்வொன்பது அணிகளும் நடுவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிக்கு தங்கள் படைப்புகளை மெருகேற்றி அளிக்கை செய்யவுள்ளனர். இவ்வொன்பது படைப்புகளில் சில படைப்புகள் ஒரு தொழில்முயற்சியாக நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வடமாகாணத்தை தொழில்நுட்ப பூங்காவாக மாற்றத் துடிக்கும்  YarlITHub சமூகத்தின் இன்னுமொரு மைல்கல் வருகிற 19ஆம் திகதி பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .