2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Yarl Geek Challenge 5-இன் வெற்றியாளராக முடிசூடியது Pargus

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன்

யாழ்ப்பாணத்தினை அடுத்த சிலிக்கன் பள்ளதாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான Yarl IT Hubஆனது வெற்றிகரமாகத் தனது ஐந்தாவது பருவகால Yarl Geek Challengeஇனை  நிறைவுசெய்துள்ளது.

ஆரம்பத்தில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஒரு கலந்துரையாடலாக ஆரம்பிக்கப்பட்ட Yarl IT Hubஆனது, அதன்பின்னர் புதிய தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து Yarl Geek Challenge எனும் போட்டியை 2012ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.  

Yarl Geek Challengeஇன் இரண்டாவது பருவ காலத்தில் ஜீனியர், சீனியர் என்ற பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றதுடன், அதனையடுத்து இடம்பெற்ற மூன்றாவது பருவகாலத்தில் இன்னொரு படியை எடுத்து வைத்த Yarl IT Hub நிறுவனமானது, அந்தப் பருவகாலத்தில் வெற்றி பெற்ற, இறுதிச் சுற்றுகளுக்கு வந்த அணிகள், தாமே தனித்து நிறுவனங்களை அமைக்கும் பொருட்டு முதலீடுகளை பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 

இந்நிலையில், Yarl Geek Challenge இன் நான்காவது பருவகாலமானது, Yarl Geek Challenge மூலமாக உருவாகும் தொழில்முயற்சிகளின் தரம் மற்றும் அணிகளுக்கான வெளிப்பாடு என்பனவற்றை அதிகரிக்கும் முகமாக பிரம்மாண்டமாக நடந்தேறியது. 

அதற்கும் மேலாக Yarl Geek Challenge இன் பிரதானமான சிரேஷ்ட பிரிவுக்கான ஐந்தாவது பருவகாலமானது, இம்மாதம் நான்காம் திகதி ஆரம்பித்து, நேற்றுச் சனிக்கிழமை (19) நிறைவுக்கு வந்திருந்தது. இதில், சிரேஷ்ட பிரிவுக்கான போட்டிகளுக்கான போட்டிகளுக்கு 39 அணிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த அணிகளுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு, அவற்றில் இருந்து தெரிவான, 13 அணிகள் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் நான்காம், ஐந்தாம், ஆறாம் திகதிகளில் இடம்பெற்ற முதலாவது சுற்றில் பங்குபற்றி அதிலிருந்து TechErupt, QuadCore, YarlCoders, Tesla, UOJ_Robots, EagleI, JoomTriggers, Team 404, Pargus. ஒன்பது அணிகள் இதில் தெரிவாகியிருந்தன.  

இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் Auto Self Care எனப்படும் வாகன இயந்திரங்களின் நிலைமை, வாகன ஓட்டுநர்களின் வாகனம் ஓட்டும் இயல்பு என்பனவற்றை கையடக்கமான இலத்திரனியல் உபகரணம் மற்றும் திறன்பேசிச் செயலியொன்றின் மூலம் கண்டறியக்கூடிய ஓர் படைப்பினை தயாரித்திருந்த ஹரிஷாந்த், நிரோஜன், கோகுலன், சஜீவன் மற்றும் சிவரஞ்சன் ஆகியோரைக் கொண்ட Pargus அணியானது Yarl Geek Challengeஇன் ஐந்தாவது பருவகாலத்தின் வெற்றியாளர்களாக தெரிவாகியது. 

மருத்துவர்களின் சந்திப்பு நேரம் பெறுவது முதல் மருத்துவச் சீட்டு பெறுவதுவரை பல தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய “CureMe ” எனும் செயலியை வடிவமைத்திருந்த ரஜித், அதீச, விஸ்மித, டிலிக்க ஆகியோரைக் கொண்ட Team 404 இரண்டாமிடத்தைப் பெற்றது.  

இலங்கை முழுவதும் உள்ள விளம்பரப்பலகைகளை ஓர் இடத்தில் வாங்கவும் வழங்கவும் கூடிய “adsconnect” எனும் வலைத்தள செயலியை வடிவமைத்திருந்த சிவராதன், கஸ்தூரிராஜன், விஜிதா ஆகியோரைக் கொண்ட Yarl coders அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.  

மேற்படி மூன்று அணிகளைத் தவிர, இறுதிப் போட்டிக்கு வந்த ஏனைய அணிகளான UOJ_Roborts அணி, Tesla அணி, TechErupt அணி, “Quad-Core” அணி, Eagle i அணி, JoomTriggers அணி போன்றவையும் முதலீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதில், ராபின் ராய், கலைநீதன், நோபேர்ட் ஆகியோரைக் கொண்டிருந்த UOJ_Roborts அணி, தூக்கமின்மை, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுதல் ஆகிய காரணங்களினால் ஏற்படும் விபத்துகளைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிவர்த்தி செய்யக்கூடிய இலத்திரனியல் படிப்பினை உருவாக்கியிருந்தது.  

அங்கதன்,அஜித்ரா,சோபிதன், இளங்குமரன்,லோகீசன் ஆகியோரைக் கொண்ட Tesla அணி, எமக்குப் விருப்பத்துக்கேற்ப உணவுகளை உணவகங்களிலிருந்து தயார் செய்து பெற்றுக் கொள்ளக் கூடிய திறன்பேசிச் செயலியை வடிவமைத்திருந்தது. 

சுஜீவன்,பிரதீபன்,ஜயநாத் ஆகியோரைக் கொண்ட TechErupt அணி, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் இணையத்தள செயலியை வடிவமைத்திருந்தது.  

ஐவன்,அருண்,பிரவீன்,நசீர் ஆகியோரைக் கொண்ட “Quad-Core” அணி, விளம்பரங்களின் எதிர்காலம் எனக்கூறப்படும் ஹலோகிராம் மற்றும் மெய்நிகர் உண்மை தொழில்நுட்பங்களுடன் ஒரு படைப்பை வடிவமைத்திருந்தது.

சுதாகர்,ராம்ராஜ்,சுஜிர்ஜன்,அருணன் ஆகியோரைக் கொண்ட Eagle i அணி, வாகனத் தரிப்பிடங்களில் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் முறையாக்கத்திற்கான ஓர் இலகுமுறை செயலியை வடிவமைத்திருந்தது. 

ஞானகீதன்,ரிஷிகுமார், செந்தூரன் , நிஷாந்தன் ஆகியோரைக் கொண்ட JoomTriggers அணி, புலம்பெயர்ந்த மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தங்கள் குடும்ப நிகழ்வுகளை சிறப்பாக நடத்தக் கூடிய வகையிலான வலைத்தள செயலியை வடிவமைத்திருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .