2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிங்கப்பூரில் விபத்தைச் சந்தித்தது தானாகச் செலுத்தப்படும் கார்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் வீதிகளில் சோதனை செய்யப்பட்ட தானாகச் செலுத்தப்படும் காரொன்று, ட்ரக்குடன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (18) மோதியதாக, சிங்கப்பூர் நகரத்தின் அரச போக்குவரத்து ஒழுங்குபடுத்துநர் தெரிவித்ததோடு, ஒருவரும் பாதிக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளது.

பாதையினை மாற்றும்போது, ட்ரக்குடன் சோதனை வாகனம் மோதியதாக, பேஸ்புக் பதிவொன்றில், சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள, தானாகச் செலுத்தப்படும் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் மற்றும் சோதனை செய்யும் நிறுவனமான nuTonomy, பொறியியலாளர்கள் இருவராலே கார் செலுத்தப்பட்டதாகவும் மெதுவாகவே பயணித்ததாகக் கூறியுள்ளது.

தானாகச் செலுத்தப்படும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை, உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் ஊக்குவிக்கின்ற நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட நிலத்தையும் பணியாட்தொகுதியையும் கொண்டிருக்கின்ற சிங்கப்பூர், சாரதியில்லாத கார்களின் மூலம், பகிரக்கூடிய வாகனங்களையும் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்த தமது பிரஜைகளை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கின்றது.

தனியார் போக்குவரத்துத் துறையில், தானாகச் செலுத்தப்படும் கார்களே, எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகையில், தொழில்நுட்ப நிறுவனங்களும் கார்த் தயாரிப்பு நிறுவனங்களும், தானாகச் செலுத்தப்படும் கார்களை தயாரிக்க மற்றும் புதிய வியாபாரத் திட்டங்களை உருவாக போட்டிபோடுகையில், தானாகச் செலுத்தப்படும் கார்த் தொழில் நுட்பத்தின் சிங்கப்பூர் சோதனை, கவனமாக அவதானிக்கப்படுகிறது.

மேற்கு சிங்கப்பூர் மாவட்டத்தில், வெவ்வேறான நான்கு குழுக்கள், சாரதியில்லாத கார்களைச் சோதிப்பதுடன், அவற்றுக்கான எல்லை 12 கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டிருந்தது. சாரதியில்லாத கார்களை, தனது செயலியினுடாக, சில பயனர்கள், முற்பதிவு செய்வதை அனுமதிப்பதற்காக, வாடகைக் கார் நிறுவனமான Grab, nuTonomy-உடன் கைகோர்த்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .