2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலிச் செய்திகளை ஒழிக்கப் பயந்த பேஸ்புக்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 14 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், சர்ச்சைக்குரிய வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், எதிர்பாராத ரீதியாக வெற்றிபெற்றமைக்கு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பொய்யான தகவல்களும் காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பேஸ்புக் மீது விசேடமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில், அதிக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், பொய்யான தகவல்களைக் கொண்ட செய்திகளை, குறைந்த பயனர்கள் மாத்திரம் தெரிந்துகொள்ளும் வகையான கட்டமைப்பொன்றை பேஸ்புக் வடிவமைத்ததாகவும், ஆனால் பழைமைவாதக் கொள்கைகளை உடையோரின் எதிர்ப்புக்குப் பயந்து, அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகவும், பிரபல இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டம் வகுக்கப்பட்டால், பழைமைவாதக் கொள்கைகளுக்குச் சார்பான இணையத்தளங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால், பழைமைவாதிகளின் எதிர்ப்புக்குப் பயந்து, அந்தத் திட்டத்தை பேஸ்புக் கைவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்ட போது, பழைமைவாதக் கொள்கைகளுக்குச் சார்பான செய்திகளில் 39 சதவீதமானவை, பல்வேறு அளவிலான பொய்ச் செய்திகளாக அமைந்ததாகவும், தாராளவாதக் கொள்கைகளுக்குச் (லிபரல்) சார்பாக செய்திகளில் 18 சதவீதமானவை, பேஸ்புக்கில் பல்வேறு அளவிலான பொய்களைக் கொண்டிருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, பழைமைவாதிகளின் பக்கம், அதிக பாதிப்பு ஏற்படுமென்ற வாதம் சரியானது.

ஆனால், இந்த அறிக்கையை பேஸ்புக் மறுத்துள்ளது. வழக்கமான அதன் பாணியில், நேரடியாக, முற்றுமுழுதாக மறுக்காமல் சிறிது நழுவல் போக்கிலேயே அந்த மறுப்புக் காணப்பட்டது.

இதேவேளை, போலிச் செய்திகள் தொடர்பான கவனம் ஏற்பட்டுள்ள நிலையில், போலிச் செய்திகளைக் காவும் இணையத்தளங்களுக்கு, கூகிளின் விளம்பர சேவையான அட்சென்ஸ் வசதி வழங்கப்படாது என, கூகிள் அறிவித்துள்ளது. போலிச் செய்திகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இது அமைந்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பு விடப்பட்ட போது, "தேர்தல் இறுதி முடிவு" என ஆங்கிலத்தில் கூகிளில் தேடினால் பெறப்படும் முதலாவது முடிவு, போலியான தளமொன்றுக்குரிய சுட்டியாகவே அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .