2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இம்முறை ஆஷஸ் யாருக்கு?

Shanmugan Murugavel   / 2017 நவம்பர் 22 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிகவும் பழமையான கிரிக்கெட் தொடரான ஆஷஸ், பிறிஸ்பேர்ணில் இலங்கை நேரப்படி அதிகாலை 5.30 அணிக்கு  நாளை ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவுஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் மாறி மாறி இடம்பெறும் இந்த ஆஷஸ் தொடரானது, 70ஆவது முறையாக இம்முறை நடைபெறுகின்றது.

69 தடவைகள் இதுவரையில் நடைபெற்றுள்ள ஆஷஸ் தொடரில், அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தலா 32 தடவைகள் வென்றுள்ளதுடன், ஐந்து தடவைகள் தொடர் சமநிலையில் முடிந்துள்ளது.

அண்மைய ஆஷஸ் தொடர்களில், பெரும்பாலும் எந்த நாட்டில் தொடர் இடம்பெறுகிறதோ அந்த நாட்டுக்கு அணிக்கு அந்த நாட்டு மைதானங்கள் பழக்கமான நிலையில் அந்த நாட்டு அணிகளுக்கே தொடரை வெல்லுவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில் பெருஞ் சமராக இரண்டு அணிகளாலும் நோக்கப்படும் ஆஷஸ் தொடரில் பிரகாசிப்பது பெரும் கெளரவாக பார்க்கப்படுவதோடு, இதில் தடுமாறுமிடத்து அணியில் இடம் பறிபோவதுடம் அத்துடன் கிரிக்கெட் விளையாடும் காலம் முடிவடையும் நிலையும் காணப்படுகின்றது. 2013-14ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில், 0-5 என இங்கிலாந்து வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், அத்தொடரின் பின்னர் இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்கள் கிரேமி ஸ்வான், மொன்டி பனேசர், வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் ட்ரெம்லெட், டிம் பிரெஸ்னன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.

ஆக, மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் கூட வார்த்தைப் போரையும் கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் இம்முறை பங்கேற்பதற்காக வந்திருக்கும் இங்கிலாந்துக் குழாம் பலத்த சவால்களுடனேயே இருக்கிறது.

முன்னாள் அணித்தலைவரான, அனுபவம் வாய்ந்த் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலிஸ்டியர் குக் ஓட்டங்களைப் பெறாமை, அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் ப்ரோட்டின் அண்மைய திறமை வெளிப்பாட்டுக் குறைவு என பலத்த சிக்கல்களை கொண்டிருக்கிறது.

இதுதவிர, இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலிய மைதானங்கள் ஓரளவு தட்டையானதாகக் காணப்படுகின்ற நிலையில், மார்க் வூட் போன்ற வேகமாக பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளரொருவர் இல்லாத குறை இங்கிலாந்துக்கு இருக்கிறது.

மறுபக்கம், அவுஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதாக, வேகமாகப் பந்துவீசக் கூடிய பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரை அணியில் கொண்டிருப்பது விளங்குகிறது. ஆயினும் கடந்த காலத்தில் அடிக்கடி காயமடைந்த பற் கமின்ஸ், அண்மையிலேயே உபாதைகளிலிருந்து திரும்பிய மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரை அதிக நேரம் பந்துவீசச் செய்து களைப்படையைச் செய்வதிலேயே இங்கிலாந்தின் வாய்ப்புகள் தங்கியிருக்கின்றன.

மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரை நீண்ட நேரத்துக்கு பந்துவீசச் செய்வதற்கு, அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையனின் பந்துகளை அடித்தாடி, அவரை பந்துவீச விடாமல் செய்ய வேண்டும். அதைச் செய்யக் கூடிய வீரர்களாக இங்கிலாந்து அணியில் தற்போதிருப்பவர்களான ஜொனி பெயார்ஸ்டோ, டேவிட் மலன், மொயின் அலி ஆகியோர் அண்மையில் ஓட்டங்களைப் பெற்றிருப்பது இங்கிலாந்துக்குச் சாதகமாக அமைகிறது.

இதுதவிர, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் ஓட்டங்களைக் குவிப்பார் என்று குழாமில் தேர்வு செய்யப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறாததும் இங்கிலாந்து யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.

பந்துவீச்சுப் பக்கம், ஜேம்ஸ் அன்டர்சனிலேயே இங்கிலாந்து பெரும்பாலும் தங்கியுள்ளதுடன், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் போல் ஆகியோர் ஓரளவுக்கு வேகமாகவாவது பந்துவீசி அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாக இருந்தாலும் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து இழந்தது ஈடு செய்ய முடியாததாகவே இருக்கிறது. அதிரடியாகத் துடுப்பெடுத்தாடவும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக செயற்படக்கூடிய ஒருவரான பென் ஸ்டோக்ஸை, தொடரின் எக்கட்டத்திலும் இங்கிலாந்து வரவேற்கத் தயாராகவேயுள்ளது. ஆனால், எப்போது பென் ஸ்டோக்ஸ் மீதான பொலிஸ் விசாரணை முடியும் என்பது தெளிவில்லாமல் உள்ளது. பொலிஸ் விசாரணையின் பின்னரே பென் ஸ்டோக்ஸ் ஆஷஸில் பங்கேற்பாரா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அடுத்து இரண்டு அணிகளினதும் பிரதான துடுப்பாட்ட வீரர்களாக, இரண்டு அணிகளின் தலைவர்களான ஸ்டீவ் ஸ்மித்தும் ஜோ றூட்டுமே விளங்குகிறார்கள். ஆக, இவர்களில் எவர் பிரகாசிக்கின்றனர் என்பதிலேயே இரண்டு அணிகளும் தொடரைக் கைப்பற்றுவதற்கான முதன்மை வாய்ப்பு இருக்கின்றது.

அவுஸ்திரேலிய அணியின் தேர்வு சில விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், ஆஷஸ் போன்றதொரு பெரிய தொடரில், ஓட்டங்களைப் பெற்றவர்களையும் அனுபவத்தையும் தேர்வாளர்கள் நாடியது சரியானதாகவே தென்படுகிறது. பங்களாதேஷுக்கான தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றிருத கமரோன் பன்குரோவ்ட் ஓட்டங்களை தொடர்ச்சியாக குறைத்து நம்பிக்கையுடனேயே காணப்படுகிறார். ஓட்டங்களைப் பெறத் தடுமாறிய மற் றென்ஷோ மீண்டும் தடுமாறும்போது அது ஒட்டுமொத்த அணியையும் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது.

அடுத்து, அனுபவம் வாய்ந்த ஓட்டங்களைப் பெறக்கூடிய விக்கெட் காப்பாளரான டிம் பெய்ன், கடந்த தொடரில் பிரட் ஹடின் ஆற்றிய பணியை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கடி அணிக்குள் வந்து போய்க்கொண்டிருக்கும் ஷோர்ன் மார்ஷ், அண்மையில் ஓட்டங்களைப் பெற்றதுடன் அனுபவத்தையும் கொண்டிருப்பதால், மைக்கல் ஹஸி போல செயற்படுவார் என்று அவுஸ்திரேலியா எதிர்பார்க்கிறது.

ஆக மொத்தத்தில் அவுஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள், இந்தாள் வீரர்கள் விடுக்கின்ற அச்சுறுத்தல்கள், நாளை மறுதினம் இங்கிலாந்து வீரர்களின் மனதில், மிற்செல் ஸ்டார்க், மற் கமின்ஸால் விதைக்கப்படுமானால், இங்கிலாந்து வீரர்கள் மறந்து விடக் கூடிய ஆஷஸாகவே இதுவிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .