2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2019 மே 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தானைப் பற்றி இப்பத்தி ஆராய்கிறது.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில், இதுவரை காலமும் கிரிக்கெட் விளையாடுகின்ற நாடுகளிடையே அபாரமாக வளர்ச்சியடைந்த நாடாக ஆப்கானிஸ்தான் நோக்கப்படுகிறது.

உலக கிரிக்கெட் லீக்கின் ஐந்தாம் பிரிவில் 2008ஆம் ஆண்டு விளையாடியிருந்த ஆப்கானிஸ்தான், 2017ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவத்தைப் பெற்று டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடாக 10 ஆண்டுகளுக்குள் அபரிதமான வளர்ச்சியடைந்திருந்தது.

எவ்வாறெனினும், உலகக் கிண்ணத் தொடரைப் பொறுத்தவரையில் முதற்தடவையாக கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலேயே பங்கேற்றிருந்த ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்தை மாத்திரமே வென்ற நிலையில் குழுநிலைப் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கு, தொடரை நடாத்தும் நாடான இங்கிலாந்தும், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதல் ஏழு இடங்களில் இருக்கும் அணிகளும் நேரடியாகத் தகுதிபெற்றிருந்தன.

அந்தவகையில், 10 அணிகளைக் கொண்ட இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கான ஏனைய இரண்டு அணிகளும் தகுதிகாண் போட்டிகள் மூலமே தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இக்குழுப் போட்டிகளில் ஸ்கொட்லாந்து, சிம்பாப்வே, ஹொங் கொங்கிடம் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான், நேபாளத்தை வென்று மயிரிழையில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தது.

பின்னர் சுப்பர் 6 சுற்றில் சிறப்பாகச் செயற்பட்டு, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்தை வென்று இறுதிப் போட்டிக்குச் சென்று இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் தமதிடத்தை உறுதிப்படுத்தி, பின்னர் குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி சம்பியனாகியிருந்தது.

அந்தவகையில், ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதுமுள்ள இருபதுக்கு – 20 தொடர்களில் விளையாடி ஆப்கானிஸ்தானைப் பிரபலப்படுத்திய இளம் புறச்சுழற்பந்துவீச்சாளரான ரஷீட் கானே அவ்வணியின் துருப்புச் சீட்டாக விளங்கப் போகின்றார்.

தற்கால ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒழுங்கில் புறச்சுழற்பந்துவீச்சாளர்களின் வகிபாகமென்பது முக்கியமானதாகக் காணப்படுகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்தில் காணப்படும் ரஷீட் கான், தனதணி இனிங்ஸின் மத்திய பகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு துணையாய் இருப்பார் என்பதில் சந்தேகமுமில்லை. இதுதவிர பந்துவீச்சுக்கு மேலதிகமாக ரஷீட் கான் கொண்டுள்ள அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் தன்மையும், இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் ஆப்கானிஸ்தான் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க உதவும்.

ரஷீட் கானையடுத்து, சிரேஷ்ட வீரர்களான மொஹமட் நபி, மொஹமட் சஷாட் என்போர் ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். மொஹமட் நபியைப் பொறுத்தவரையில், சகலதுறையிலும் ஆரம்பித்திலிருந்து ஆப்கானிஸ்தானைத் தனது தோளில் சுமக்கும் வீரராகக் காணப்படுகின்றார்.

அந்தவகையில், மொஹமட் நபியின் துடுப்பாட்டமானது அதிரடியாக இனிங்ஸை கட்டமைக்க உதவுவதுடன், அவரின் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் சுழற்பந்துவீச்சானதும் அதேயளவு முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

மொஹமட் ஷஷாட்டை பொறுத்த வரையில் அதிரடியானதொரு ஆரம்பத் துடுப்பாட்டவீரர். இவரின் உடற்றகுதியே இவருக்குச் சிக்கலாக இருக்கின்ற நிலையில், இவர் நீண்ட நேரம் நிலைத்து விட்டால், இளம் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ஹஸரத்துல்லா ஸஸாயின் பங்களிப்புடன் இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர்களுக்குச் சாதகமான ஆடுகளங்களில் உயர் ஓட்ட எண்ணிக்கையை பெற முடியும்.

இதேவேளை, இங்கிலாந்து ஆடுகளங்களானது ஒருவேளை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தால், நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடக்கூடிய ரஹ்மட் ஷா, ஹஷ்மத்துல்லா ஷகிடி ஆகியோரும் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், சிரேஷ்ட வீரர்களான மொஹமட் நபி, ரஷீட் கானின் விமர்சனங்களுக்கு மத்தியிலும் இத்துணை காலமும் ஆப்கானிஸ்தானை சிறப்பாக வழிநடத்திய அஸ்கர் ஆப்கானை, குல்படின் நைப்பைக் கொண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பிரதியீடு செய்தது சிக்கலானதாகவே காணப்படுகின்றது.

எவ்வாறெனினும், களத்தைப் பொறுத்த வரையில் இனிங்ஸின் மத்திய பகுதிகளில் ஓட்டங்களைச் சேர்த்து பின்னர் வேகமாகத் துடுப்பெடுத்தாடக் கூடியவர்களாக முன்னாள் அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான், குல்படி நைப், நஜிபுல்லா ஸட்ரான், சமியுல்லா ஷின்வாரி உள்ளிட்டோர் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரஷீட் கான், மொஹமட் நபி தவிர்த்து, இனிங்ஸின் ஆரம்பப் பகுதியில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை முஜீப் உர் ரஹ்மான் கைப்பற்றுகின்றபோதும், இங்கிலாந்து ஆடுகளங்களில் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர்களான ஹமிட் ஹஸன், தவால்ட் ஸட்ரான் ஆகியோருடன் அஃப்தாப் அலாமுடனேயே ஆப்கானிஸ்தான் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஏனைய அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதுடன், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் போன்ற அணிகளுடனான போட்டியில் வென்றாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

பிறிஸ்டலில் அடுத்த மாதம் முதலாம் திகதி இலங்கை நேரப்படி மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவுடனான போட்டியுடன் தமது உலகக் கிண்ணத் தொடரை ஆப்கானிஸ்தான் ஆரம்பிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .