2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2019 மே 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் எட்டாவது முறையாக இம்முறை பங்கேற்கவுள்ள தென்னாபிரிக்க அணியைப் பற்றி இப்பத்தி நோக்குகிறது.

சிறந்த அணியாக தென்னாபிரிக்க அணி எப்போதும் காணப்படுகின்றபோதும், சர்வதேச கிரிக்கெட் சபையின் விலகல் முறையிலான போட்டிகள் என வரும்போது அதிர்ச்சியாகக் கோட்டைவிடுவது அவ்வணிக்கான அடையாளமாக நோக்கப்படுகிறது.

அதுவும் தற்போது ஓய்வு மூலம் ஏ.பி டி வில்லியர்ஸ், மோர்னே மோர்கல் போன்ற நட்சத்திர வீரர்களை இழந்தது மட்டுமல்லாமல், நிற அடிப்படையிலான தெரிவின் காரணமாக கொல்பக் ஒப்பந்தத்தில் கைல் அபொட், றீலி றொஸோ போன்றோர் கைச்சாத்திட்டு தேசிய அணியிலிருந்து விலகியதன் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றபோதும், சிறந்த குழாமாகவே, இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாம் காணப்படுகின்றது.

ககிஸோ றபாடா, இம்ரான் தாஹீர், டேல் ஸ்டெய்ன், அணித்தலைவர் பப் டு பிளெஸி, ஹஷிம் அம்லா போன்ற நட்சத்திரங்களோடு, லுங்கி என்கிடி, குயின்டன் டி கொக், அன்டிலி பெக்லுவாயோ போன்ற இளம் வீரர்களோடும், போட்டியை எக்கணத்திலும் மாற்றக்கூடிய டேவிட் மில்லர், ஜெ.பி டுமினி, கிறிஸ் மொறிஸ் போன்ற வீரர்களுடன் தென்னாபிரிக்க அணி இம்முறை உலகக் கின்ணத் தொடரில் களமிறங்குகின்றது.

தற்கால ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒழுங்குக்கேற்றவாறு வேகமான ஆரம்பத்தை அளிக்கக்கூடியவராக குயின்டன் டி கொக் காணப்படுவதுடன், அவரது அண்மைய கால திறமை வெளிப்பாடுகள் தென்னாபிரிக்காவுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.

மறுபக்கமாக, குயின்டன் டி கொக்கோடு ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் ஹஷிம் அம்லா சிறந்த வீரரொருவர் என்பதுடன், அதிக பந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இனிங்ஸைக் கட்டமைக்ககூடியவராகக் காணப்படுகின்றபோதும், அவரது அண்மைய கால பெறுபேறுகள் திருப்தியளிப்பதாய் தெரியவில்லை. அதுவும் ஏய்டன் மார்க்ரம் போன்ற சிறந்த இளம் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் குழாமிலிருக்கின்ற நிலையில் விரைந்து தனது தொடர்ச்சியான பெறுபேறுகளை ஹஷிம் அம்லா வெளிப்படுத்தியாக வேண்டும்.

மத்தியவரிசையைப் பொறுத்தவரையில், தனக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறா விட்டாலும் மிக முக்கியமான வீரராக இருக்கின்ற பப் டு பிளெஸி, தென்னாபிரிக்காவின் ஆரம்பகால உலகக் கிண்ண திட்டங்களில் இல்லாவிட்டாலும் தனது பெறுபேறுகள் மூலம் குழாமில் இடம்பிடித்த றஸி வான் டர் டுஸன், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக்கூடிய டேவிட் மில்லர், அனுபவ சகலதுறைவீரர் ஜெ.பி டுமினி எனப் பலமானதாகக் காணப்படுகின்றது. இதுதவிர, பின் மத்தியவரிசையில் களமிறங்கவுள்ள அன்டிலி பெக்லுவாயோ, கிறிஸ் மொறிஸ் போன்றோரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில், ககிஸோ றபாடா, லுங்கி என்கிடி, டேல் ஸ்டெய்ன் என அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக் குழாமையும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரொருவரான இம்ரான் தாஹீரையும் கொண்டு மிகப் பலமானதாகவே காணப்படுகின்றது.

எவ்வாறெனினும், தென்னாபிரிக்காவுக்கு கவலையளிக்கும் விடயமாக அவ்வணியின் பந்துவீச்சாளர்களின் காயங்கள் காணப்படுகின்றன. ஏற்கெனவே ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட தென்னாபிரிக்கக் குழாமில் இடம்பெற்றிருந்த அன்றிச் நொர்ட்ஜே காயம் காரணமாக குழாமிலிருந்து விலகியதுடன், ககிஸோ றபாடா, லுங்கி என்கிடி, டேல் ஸ்டெய்ன் போன்றோரும் காயத்திலிருந்து குணமடைந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் தேவையான உடற்றகுதியை அடைந்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றநிலையில், இவர்கள் குறித்த தெளிவான பார்வையொன்று இவ்வாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், அரையிறுதிப் போட்டிகளுக்கு தென்னாபிரிக்கா முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கடந்தகாலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து முக்கியமான தருணங்களிலும் வழமை போன்று சிறப்பாகச் செயற்பட்டால் அவ்வணி மேலும் முன்னேறலாம்.

தென்னாபிரிக்க அணியில் மட்டுமின்றி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் அவதானிக்கப்பட வேண்டிய வீரர்களாக ககிஸோ றபாடா, அன்டிலி பெக்லுவாயோ, பப் டு பிளெஸி, லுங்கி என்கிடி, டேவிட் மில்லர் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர்.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரை நடாத்தும் நாடான இங்கிலாந்தை, இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியில், இலண்டனில் இலங்கை நேரப்படி இம்மாதம் 30ஆம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பிக்கவுள்ள போட்டியில் எதிர்கொள்வதன் மூலம் தமது உலகக் கிண்ணத் தொடரை தென்னாபிரிக்கா ஆரம்பிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .