2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2019 மே 10 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இரண்டு தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளையே இப்பத்தி ஆராய்கிறது.

இரண்டு தடவைகள் சம்பியனாகவுள்ளபோதும் கடந்த காலங்களில் எதிர்வுகூறப்படமுடியாத அணியாகவே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றது.

ஏனெனில், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் 12ஆவது முறையாக மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கின்றபோதும், அது எவ்வாறு இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றது என்பதை நோக்கும் ஏன் எதிர்வுகூறமுடியாத அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அணி இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றிருக்கவில்லை. தகுதிகாண் போட்டிகளில் விளையாடி, அதில் இரண்டாமிடம் பெற்றே உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றிருந்தது.

கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், டுவைன் பிரவோ, கெரான் பொலார்ட், அன்ட்ரே ரஸல், டரன் சமி என உலகம் முழுவதுமுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களின் நாயகர்களாக மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களே விளங்குகின்றபோதும், அவ்வணி அவ்வாறான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இவ்வாறாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்ட தேசிய அணி, தற்போதே புதிய இளம்வீரர்களை வளர்த்தெடுத்துவருவதுடன், கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் தெரிவாகி வீரர்களுடனான முரண்பாடுகள் களையப்பட்டு வருகின்றன.

எவ்வாறெனினும், கிறிஸ் கெய்ல், அன்ட்ரே ரஸல் போன்றவர்கள் உலகக் கிண்ணக் குழாமுக்குத் தெரிவாகியபோதும், சுனில் நரைன், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ ஆகியோர் தெரிவாகியிருக்கவில்லை.

இந்நிலையில், எதிர்வுகூறப்படாத அணியெனத் தெரிவிக்கப்பட்டாலும், இம்முறை உலகக் கிண்ணத் தொடரை நடாத்தும், வெல்ல அதிக வாய்ப்புகள் கொண்ட நாடான இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை சமநிலையில் முடித்து பெறுபேறுகளை வெளிப்படுத்தியது மேற்கிந்தியத் தீவுகள் தொடர்பான கருத்தியலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அந்தவகையில், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுடன் தோல்வியைத் தளுவக் கூடிய அணியாக எதிர்பார்க்கப்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள், குறித்த தொடரின் மூலம் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற பெரிய அணிகளை வெல்லக்கூடிய அணியாக தம்மை அடையாளங்காட்டியிருந்தது.

குறித்த கருத்தியல் மாற்றத்துக்கு முக்கியமான காரணகர்த்தாவாக அவ்வணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கிறிஸ் கெய்லே விளங்குகின்றார். அந்தவகையில், தனது இனிங்ஸை மெதுவாகவே பெரும்பாலும் தற்காலத்தில் கெய்ல் ஆரம்பிக்கின்றபோதும், தான் நிலைத்து நிற்க நிற்க மிக மோசமானவராக மாறுகின்றார். ஆக, துடுப்பாட்டத்துக்குச் சாதகமானதாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து ஆடுகளங்களில் எதிரணிகளை இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீழ்த்துவதற்கு கெய்ல் என்ற தனிமரமே போதும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

கெய்லின் தற்கால ஆட்டம் இவ்வாறாக இருக்கின்ற நிலையில், அவருடன் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கப் போகும் எவின் லூயிஸ், ஆரம்பகால கெய்ல் போல தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டக்கூடிய வீரரொருவராகவும், நிலைத்து நிற்கும் பட்சத்தில் அதேயே தொடரக்கூடிய அபாயகரமான வீரராகக் காணப்படுகையில், அச்சுறுத்தலான ஆரம்ப ஜோடியாகவே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றது.

அடுத்து, ஷே ஹோப், டரன் பிராவோ என இனிங்ஸை கட்டமைக்கின்ற அதேவேளை, நிலைத்து நின்று பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக்கூடியவர்களைக் கொண்டிருக்கின்ற மேற்கிந்தியத் தீவுகள், இதைத் தொடர்ந்து ஷிம்ரோன் ஹெட்மயர், நிக்கலஸ் பூரான், அன்ட்ரே ரஸல், கார்லோஸ் பிறத்வெய்ட், ஜேஸன் ஹோல்டர் என ஆரம்பத்திலிருந்தே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக்கூடிய மத்திய, பின் வரிசைகளையும் கொண்டிருக்கின்றது.

அதுவும், நடப்பு இந்தியன் பிறீமியர் லீக் பருவகாலத்தில் வெளிப்படுத்திய பெறுபேறுகளை அன்ட்ரே ரஸல் வெளிப்படுத்தினால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தையும் அவர் பெற்றுக் கொடுக்கலாம்.

துடுப்பாட்டம் இவ்வாறாக இருக்கையில், அதற்கும் சற்றும் சளைக்காத முன்னைய கால அச்சுறுத்தும் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களையே கேமார் றோச், ஷனொன் கப்ரியல், ஷெல்டன் கோட்ரல், ஒஷேன் தோமஸ் ஆகியோர் பிரதிபலிக்கின்றனர். இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கான ஆடுகளங்களானவை தட்டையாகக் காணப்படும் எனக் கூறப்படுகின்ற நிலையில், ஏனைய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை விட இவர்கள் கொண்டிருக்கின்ற மேலதிக வேகமானது நிச்சயமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு உதவுவதாக இருக்கும்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கொண்டிருக்கின்ற குறைபாடாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக சுழற்பந்துவீச்சு காணப்படுகின்றது. சுனில் நரைன், தேவேந்திர பிஷூ ஆகியோர் இல்லாத நிலையில், அஷ்லி நேர்ஸ், ஃபேபியன் அலன் ஆகியோர் மாத்திரமே சுழற்பந்துவீச்சாளர்களாக மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் காணப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் ஓரளவுக்கு சுழற்பந்துவீச்சு வீசக்கூடியவர்கள் என்பதற்கு மேலாக இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக் கூடியவர்கள் என்பதாலுமே இவர்கள் குழாமில் தெரிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்கின்றபோதும், தற்காலத்தில் இனிங்ஸின் நடுப்பகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு ஏனைய அணிகள் புறச்சுழற்பந்துவீச்சாளர்களைத் தங்கியிருக்கின்ற நிலையில் அவ்வாறானவர்களை மேற்கிந்தியத் தீவுகள் கொண்டிருக்காதது துரதிர்ஷ்டமே ஆகும்.

நொட்டிங்ஹாமில், இலங்கை நேரப்படி இம்மாதம் 31ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான போட்டியுடன் தனது உலகக் கிண்ணத் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X