2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தியா எதிர் நியூசிலாந்து ஒ.நா.ச.போ தொடர்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், எதிர்பார்த்தது போன்றே இறுக்கமாக முடிவடைந்துள்ளது. இந்திய அணி தொடரை 3-2 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி இலகுவாக வெற்றி பெற்ற போதும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அந்தளவுக்கு இலகுவாக வெற்றி பெற முடியவவில்லை. வெற்றி தோல்வி என மாறி மாறி சென்ற தொடரின் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றே தொடரை இந்திய அணியால் கைப்பற்ற முடிந்தது.

இந்த இறுக்கமான தொடருக்கான காரணங்களாக பல விடயங்கள் உள்ளன. நியூசிலாந்து அணி பலமான ஒரு நாள் சர்வதேச போட்டி அணி. உலககிண்ண தொடரின் இறுதி போட்டி அணி. வீரர்களும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்திய அணி, நியூசிலாந்து அணியை இலகுவாக எடுத்துவிட்டதோ என்றும் யோசிக்கத் தோன்றுகின்றது.

முக்கிய மூன்று பந்து வீச்சாளர்களுக்கும் ஐந்து போட்டிகளிலும் ஒரே நேரத்தில் ஓய்வு வழங்கப்பட்டது. பலமான ஒரு அணியை எதிர்கொள்ளும் போது இவ்வாறு ஓய்வு தேவைதானா? அடுத்து இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. ஓய்வு வழங்கப்பட்ட மொஹமட் ஷமி, அஷ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியமானவர்களே. அவர்களுக்கு ஓய்வு நிச்சயம் தேவை. ஆனால் சுழற்சி முறையில் ஓய்வை வழங்கியிருக்கு முடியும். இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்திருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட வெற்றி பெற்று இருக்க முடியும்.தொடர் வெற்றி கிடைத்துள்ளது.  அது போதும் என்ற நிலை போதுமானதுதானா?

நியூசிலாந்து அணியைப் பொறுத்தளவில் தொடர் தோல்வி என்றாலும் கூட நல்ல ஒரு தொடர் என வர்ணிக்க முடியும். இந்தியாவில் விளையாடிய ஐந்து தொடர்களில்  மூன்று தொடர்கள் 3-2 என்ற முடிவையே தந்துள்ளன.  இறுதிப்போட்டியில் இந்திய அணியுடனான மோசமான தோல்வியை பெற்று இருந்தாலும் கூட இந்திய அணியுடன் மிக இறுக்கமாகவும் வெற்றி பெறக்கூடிய நிலையிலும் நியூசிலாந்து அணி விளையாடி இருந்தது. கடந்த தொடர் 5-0 என்ற தோல்வி. எனவே அவர்களுக்கு இது சிறந்த மீள் வருகைத் தொடர்.   

இந்தியாவில் வைத்து இதுவரை தொடரை வெல்லாத நியூசிலாந்து அணி இந்த தொடரிலும் அதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.  நியூசிலாந்து அணி இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் போதுமான துடுப்பாட்டம் இல்லாமையாலும் ஒரு போட்டியில் மோசமான பந்துவீச்சாலும் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளது. வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது.

தோல்விகளை சந்தித்த போட்டிகளில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. துடுப்பாட்டத்தில் இணைப்பாட்ட தொடர்ச்சி இல்லாமல் போனமை முக்கியமான காரணமாக கூறலாம். ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே ஓட்டங்களை எடுத்துக்கொடுத்தனர். குறிப்பாக பின் மத்திய வரிசை சிறப்பாக அமையாமல் போனமை துடுப்பாட்டத்தில் பாரிய பின்னடைவை தந்தது. அத்துடன் சுழற்பந்து வீச்சு சரியாக அமையாமல் போனமையும் கூட அணிக்கு பின்னடைவைத் தந்தது.

இந்தத் தொடரை தீர்மானித்தது சுழற் பந்து வீச்சு என்றே கூறலாம். அந்த வித்தியாசமே இரு அணிகளுக்குமிடையிலான முக்கிய வித்தியாசமாக தென்படுகின்றது. டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு தானும் அச்சுறுத்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் அந்தளவுக்கு அழுத்தங்களை வழங்கவில்லை.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அவர்களின் முக்கிய துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்தில் எதிர்பார்த்தளவு சிறப்பாக துடுப்பாடவில்லை என்பது நியூசிலாந்து அணிக்கு பாரிய பின்னடைவை தந்தது. ரொம் லெதாம் டெஸ்ட் தொடர் போன்றே சராசரியாக தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நல்ல ஆரம்பத்தை அனைத்து போட்டிகளிலும் வழங்கினார். கேன் வில்லியம்சன் ஒரு சதத்தை பெற்ற போதும் மற்றைய போட்டிகளில் பெற்ற ஓட்ட எண்ணிக்கைகள் போதும் என கூறிவிட முடியாது. ரொஸ் ரெய்லர் மிக மோசமான துடுப்பாட்டம். ஒரு அரைச்சதத்தை கூட பெற முடியவில்லை. அடுத்த இடத்தில் ஜேம்ஸ் நீஷம் 57 ஓட்டங்களை மூன்றாவது போட்டியில் பெற்றுக்கொண்டார். மற்றைய போட்டிகள்  சிறப்பாக அமையவில்லை. பந்துவீச்சில் நான்கு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே. அடுத்த இடத்தில இரண்டு விக்கெட் காப்பாளர்களும் முழுமையாகக் கைவிட்டனர்.

கொரி அன்டர்சன், நான்கு போட்டிகளில் 37 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டார். உபாதை காரணமாக தனியே துடுப்பாட்ட வீரராகவே இவர் இந்தத் தொடரில் விளையாடினார். இறுதிப் போட்டியில் பந்தும் வீசினார். இவரின் துடுப்பாட்டம் எடுபடாமல் போனமையும் கூட நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை தந்தது. லுக் ரொங்கி, முதல் மூன்று போட்டிகளிலும் 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர் டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறப்பாக துடுப்பாடியவர். இவரை நீக்கி இறுதி இரு போட்டிகளிலும் பிரட்லீ வொட்லிங்கை அணியில் சேர்த்த போதும் அவர் இரு போட்டிகளிலும் 14 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டார். ஓட்டங்கள் ஆக மத்திய வரிசையில் பெறப்படவில்லை. ஆனால் பின் வரிசை வீரர்கள் ஓரளவு கைகொடுத்தமையினாலேயே ஓரளவு சிறந்த ஓட்ட எண்ணிக்கைகளை நியூசிலாந்து அணியால் பெற முடிந்தது.  

டிம் சௌதி, மற் ஹென்றி ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஓரளவு பங்களிப்பை செய்தனர். பந்துவீச்சில் டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் ஓரளவு சிறப்பாக பந்துவீசினார்கள். நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் இருவரும் இணைந்து 5 விக்கெடிட்களை இரண்டு போட்டிகளிலும் கைப்பற்றி இருந்தனர். எனவே மற்றவர்கள் பந்துவீச்சில் கைகொடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. எதிர்பார்க்கப்பட்ட மிற்செல் சான்ட்னர், ஐந்து போட்டிகளிலும் நான்கு விக்கெட்டுகளையே கைப்பற்றினார். இஷ் சோதி மூன்று போட்டிகளில் மாத்திரமே விளையாடி இருந்தார். நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். இவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் பந்து வீச்சில் அழுத்தங்களை கொடுத்திருக்க முடியும்.

இந்திய அணியின் ஆரம்பம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கவில்லை. வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான் அணியில் இல்லாத நிலையில் அஜிங்கையா ரஹானே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கினர். தனக்கு கிடைத்த வாய்ப்பினை முழுமையாக அவர் பாவிக்கவில்லை. ஒரு நாள் சர்வதேச அணியில் நிரந்தர இடம் பிடிக்காத ரஹானே இந்த வாய்ப்பை பாவித்து நிலையான ஆரம்ப இடத்தை பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதும் மீண்டும் அவரின் இடம் மேலதிக வீரராகவே தொடர்வார் போல் தென்படுகின்றது.

விராத் கோலி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலின் தலை சிறந்த வீரர் என்பதனை தொடர்ந்து நிரூபித்து வருகின்றார். 358 ஓட்டங்களை 119.33 என்ற சராசரியில் குவித்துளார். நான்காமிடத்தில், முதலிரு போட்டிகளுக்கு பின்னர் தோனி களமிறங்கினார். இந்தத் தொடர், அவருக்கு துடுப்பாட்டத்தில் ஓரளவு ஓட்டங்களை தந்து அவர் மீதான அழுத்தத்தை குறைத்துள்ளது. ஒரு வருடத்துக்கு பின்னர் ஒரு அரைச்சதம் அவருக்கு கிடைத்துளளது. சராசரியான ஓட்டங்களையே அவரால் பெற முடிந்தது. தோனியின் துடுப்பாட்டம் இன்னமும் சிறப்பாக அமைந்திருந்தால் தோல்வியடைந்த போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க முடியும். தோனியின் துடுப்பாட்டம் அந்தளவுதானா ? இனி இவரின் காலம் முடிகின்றதா? என்ற கேள்விகளுக்கான பதிலை அவர் இந்தத் தொடரில் வழங்கவில்லை. மாறாக அதிகரிக்க செய்துள்ளார் என்றே கூற வேண்டும்.

இப்படியே சென்றால் அடுத்த உலகக் கிண்ணம் விளையாடலாம் என்ற நிலையில் இருந்து மாறி ஓய்வு பெறவேண்டும் என்ற நிலை ஏற்படலாம். விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில் காட்டி வரும் சிறந்த தலைமைத்துவம் அவரை விரைவில் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளுக்கும் தலைவராக்க வேண்டும் என்ற ஆசையை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இது டோணிக்கான அழுத்தமாக அமைகின்றது.

கேதார் யாதவ், நம்பிக்கையை  அணிக்குள் ஏற்படுத்தியுள்ளார். சகலதுறை வீரராக அணிக்குள் தொடரும் வாய்ப்புகள் இவருக்கு அதிகமுண்டு. இவருக்கு அணியில் இடம் கிடைத்தால் மனிஷ் பாண்டே அணியால் வெளியேற வேண்டி வரும். ஹர்டிக் பாண்டியா, ஆட்ட நாயகன் விருதுடன் அபாரமாக தனது அறிமுகத்தை மேற்கொண்டாலும் அதனைத் தொடர முடியவில்லை. முதற் போட்டியில் 3 விக்கெட்டுட்கள். பின்னர் , நான்கு போட்டிகளில்  நான்கு விக்கெட்டுகள். இரண்டாவது போட்டியில் இவர் அடித்த 36 ஓட்டங்கள் இவரை சகலதுறை வீரராக அணிக்குள் தொடரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் அவரே அதனை கெடுத்துவிட்டார்.

இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாகவே அமைந்திருந்தது. தோல்வியடைந்த போட்டிகளில் கூட பந்து வீச்சு மோசமாக அமையவில்லை. அமித் மிஷ்ரா, 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இரவீந்தர ஜடேஜாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார். தனக்கு கிடைத்தை வாய்ப்பை மிக அபாரமாக பாவித்துளார். வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயற்பட்டுள்ளார். அக்ஷார் பட்டேல் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றினார். ஓய்வில் இருந்த மூன்று வீரர்களும் இந்த அணிக்குள் வந்தால் யார், யார் வெளியே போக வேண்டும் என்பதே இங்கே முக்கிய விடயம். பட்டேலின் இடம் பிரச்சினை இல்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில் ஷமி அணிக்குள் வந்தால் வேகப்பந்து வீச்சு முழுமை பெறும்.

பின்மத்திய வரிசை, இப்போதைக்கு இந்திய அணிக்கு முழுமை பெறவில்லை. தற்போது போட்டி ஒன்று நிலவுகின்றது. அடுத்த தொடரில் அந்த போட்டி ரஹானே, மனிஷ் பாண்டே, கேதார் யாதவ், ஹர்டிக் பாண்டயா, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கிடையில் நிலவும். இரு இடங்களுக்கு இவர்கள் போராடுவார்கள். இவர்களுள் ரஹானே, கேதார் யாதவ் ஆகியோருக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன என நம்பலாம்.

இந்த தொடர் இந்தியாவுக்கு வெற்றியை தந்திருந்தாலும் கூட அணியின் விடயங்கள் தொடர்பிலும் தரப்பப்படுத்தல்கள் தொடர்பிலும் பார்க்கும் போது அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை. முக்கியமாக எதிர்கால வீரர்கள் தொடர்பில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்துளளது. ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள் தொடர்பில் இந்திய அணி கவனம் செலுத்தி அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டிய காலம் வந்துள்ளது. இங்கிலாந்து அணியுடனான தொடர் அவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தும். அந்த தொடரிலும் இதே நிலை தொடர்ந்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நோக்கி நகரும் நிலை உருவாகும்.

 

தொடரில் 100 ஓட்டங்களை தாண்டியவர்கள்

 

விராத் கோலி                       5              5              358         154*      119.33   100.84     1              2             

டொம் லதாம்                      5              5              244         79*         61.00     89.37       0              2                             

கேன் வில்லியம்சன்          5              5              211         118         42.20     80.22        1              0

மகேந்திர சிங் டோணி        5              5              192         80           38.40     71.11       0              1             

அஜிங்கையா  ரஹானே     5              5              143         57           28.60     70.79       0              1

ரோஹித் ஷர்மா                 5              5              123         70           24.60     77.84        0              1             

றொஸ் டெய்லர்                 5              5              119         44           23.80     62.63        0              0             

மார்ட்டின் கப்தில்               5              5              111         72           22.20     90.98         0              1             

 

தொடரில் ஐந்து விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

அமித் மிஷ்ரா            5              5              44.5        215         15           5/18       14.33     4.79       

உமேஷ் யாதவ்         5              5              41.0        236         8              3/75       29.50     5.75       

டிம் சௌதி                 5              5              47.3        260         7              3/40       37.14     5.47       

கேதார் யாதவ்             5              4              18.0        73           6              3/29       12.16     4.05       

ஜஸ்பிரிட் பும்ரா         4              4              32.4        132         6              3/35       22.00     4.04       

ட்ரெண்ட் போல்ட்      4              4              39.4        198         6              2/25       33.00     4.99       

(போட்டிகள், இனிங்ஸ், ஓவர்கள் , வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்டுகள்சிறந்த பந்து வீச்சு , சராசரி, ஓட்ட சராசரி வேகம்)

வேகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .