2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பித்தால், அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்கள் பார்வையை இந்தியா நோக்கி நகர்த்திவிடும். இலங்கையில் அதிகமாக அது இருக்கும். இலங்கையில் இந்தியாவிற்கு ஆதரவு வழங்கும் இரசிகர்கள் ஒரு புறம். அவர்கள் மீதும், இந்தியா அணி மீதும் கொலைவெறியில் இருக்கும் இலங்கை இரசிகர்கள் இன்னொரு புறம். எனவே இலங்கையிலும் இந்திய அணியினது தாக்கம் அதிகம் இருக்கின்றது. அண்மையில் இலங்கை, இந்தியா அணிகளின் மோதல்கள் இல்லாத காரணத்தினால் மற்றைய அணிகளுடனான போட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தியா அணியை பொறுத்தளவில் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை தமதாக்கிக் கொள்ளும் தொடராக இந்தியா அணி இதனை எடுத்துக்கொள்ளும். தொடரை இந்தியா கைப்பற்றினால் இந்திய அணிக்கு முதலிடம் கிடைக்கும். தொடர் சமநிலையில் நிறைவடைந்தால் மாத்திரமே முதலிடம் கிடைக்காமல் போகும். தொடர்ச்சியாக முதலிடத்தை கைப்பற்ற வேண்டுமானால் தொடரை இந்தியா அணி கைப்பற்ற வேண்டும்.  நியூஸிலாந்து அணி வெற்றி பெறக்கூடாது. இந்த நிலைமைகள் சுவாரசியத்தை தரும்.

 நியூஸிலாந்து அணி பலமான அணி அல்லது சவாலான அணி என்று பெரியளவில் இன்னமும் கூற முடியாது. இந்தியாவில் தொடர் நடைபெறுவதனால், நியூஸிலாந்து அணி இந்திய அணியுடன் மிகவும் போராட வேண்டும். இந்தத் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு  நான்கு டெஸ்ட் போட்டிகளுக்காக வரவுள்ளது. எனவே இந்தத் தொடரை வெற்றியாக மாற்றுவது மாத்திரமன்றி அணியை  முழுமையாக தயார் செய்து பலமான அணியாக மாற்றவும் இந்திய அணி இந்தத் தொடரை பாவிக்கும்.

இந்த இரு அணிகளுக்குமான கடந்த கால தொடர்களில், இந்தியாவில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 10 தொடர்களில், இந்தியா எட்டுத் தொடர்களை கைபபற்றியுள்ளது. இரண்டு தொடர்கள் சமநிலை முடிவடைந்துள்ளன. இரு அணிகளுக்குமான 20ஆவது தொடர் இதுவாகும். 10 தொடர்களில் இந்திய அணியும் ஐந்து தொடர்களில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஆக இந்தியாவே பலமான அணியாக இருந்து வருகின்றது.

2012ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி, இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது. இரு அணிகளும் இதுவரை 54 போட்டிகளில் விளையாடியுள்ளன.  இந்தியா 18 வெற்றிகளையும், நியூஸிலாந்து 10 வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, 26 போட்டிகள் சமநிலை முடிவை தந்துள்ளன. இந்தியாவில் வைத்து 31 போட்டிகளில் இந்திய அணி 13 வெற்றிகளையும், நியூஸிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, 16 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

ஆக சமநிலை முடிவுகள் அதிகம் பெறப்பட்டிருப்பது, நியூஸிலாந்து இலகுவாக இந்திய அணிக்கு வெற்றிகளை வழங்காது என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் தற்போதுள்ள இந்திய அணியின் பலம், நியூஸிலாந்து அணியின் பலம் என பார்க்கும் போது இம்முறை கடந்த காலங்களை காட்டிலும் மிகுந்த போட்டியுள்ள தொடராக அமையும் என எதிர்பார்க்க முடியும்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு, கடந்த காலங்களிலும் பார்க்க பலமாக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் புதியவர்கள் என்றாலும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவது அவர்களுக்கு மேலதிக பலம். டிம் சௌதி உபாதையடைந்து இருப்பது நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவே. இருப்பினும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களே இந்திய ஆடுகளங்களில் களமிறங்குவர் என்ற நிலையில், ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர், டௌ பிரேஸ்வெல் ஆகியோர் அவர்களது நம்பிக்கையான பந்து வீச்சாளர்கள். 23 போட்டிகளில் 94 விக்கெட்டுகளை கைப்பற்றி மிகச்சிறந்த இடதுகை  வேகப்பந்து வீச்சாளராக அணியில் வக்னர் உள்ளார்.   இவர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். அடுத்த ஒருவர் அல்லது இருவர் எனில் ட்ரெண்ட் போல்ட், டௌ பிரேஸ்வெல் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்களில் சகலதுறை வீரராக மிச்சல் சந்தர் சிறப்பான நிலையில் உள்ளார். ஆசிய ஆடுகளங்களில் இவரின் கைவரிசை எவ்வாறு அமையும் என்பது இந்தத் தொடரில் வெளிப்படும். இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்கு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்றாலே நடுக்கம் தொடங்கி விடும். இவரின் சுழற்பந்து வீச்சு மிக அபாரமானது. 14 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். ஐக்கிய அரபு அமீரக மூன்று போட்டிகளை விட மிகுதி போட்டிகள் யாவுமே, அவுஸ்திரேலியா , தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆடுகளங்களிலேயே அவர் ஆடியுள்ளார். இந்திய ஆடுகளங்களில், இவரின் சுழற்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமையும் என நம்பலாம். துடுப்பாடத்திலும் 41.85 என்ற சிறந்த சராசரியை கொண்டுள்ளார். ஆக நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை நடசத்திரம் என இவரை கூற முடியும்.

இரண்டாமவராக இஷ் சோதி, மூன்றாவமாவராக மார்க் கிரேய்க்  அணியில் உள்ளனர். மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள். எனவே நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு பலம் பெற்றுள்ளதாக அமைந்துள்ளது. எனவே இந்திய அணி இலகுவாக துடுப்பாட முடியாது.  அழுத்தங்கள் அதிகம் இருக்கும். இதில் இந்திய அணியின் ஆரம்ப இடங்கள் பலமாக இல்லை. மத்திய வரிசையே பலமாக உள்ளது.

நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டமும் கடந்த காலங்களிலும் பார்க்க பலமானது எனக்கூற முடியும். பிரெண்டன் மக்கலம் அணியில் இல்லை. ஆனால், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமன்றி, ஆசிய ஆடுகளங்களிலும், இந்திய ஆடுகளங்களிலும் கூட சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். கேன் வில்லியம்ஸன், இந்தியாவில் தன் அறிமுகப் போட்டியில் சதமடித்தவர். டொம் லதாம் இந்திய ஆடுகளங்களில் முதற்தடவையாக களமிறங்குகிறார். நியூஸிலாந்து அணிக்காக சராசரியான ஆரம்பத்தை வழங்கி வரும் வீரர்.

பி.ஜெ.வொட்லிங் விக்கெட் காப்பில் மட்டுமல்ல, துடுப்பாடத்திலும் மத்திய வரிசையில் நம்பிக்கைகி தரும் வீரர். ஹென்றி நிக்கொல்ஸ் மத்திய வரிசையில் துடுப்பாடும்  வீரர். தென்னாபிரிக்க தொடரில் ஓரளவு சிறப்பாக துடுப்பாடியுள்ளார். ஜேம்ஸ்  நீஷம் சகலதுறை வீரர். இவர் நியூஸிலாந்து அணியை சிறப்பாக சமநிலைப்படுத்தும் வீரர். வேகப் பந்து வீசும் இவர், ஒன்பது போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அதேவேளை, துடுப்பாட்டத்தில் , ஒன்பது போட்டிகளில் 612 ஓட்டங்களை பெற்றுள்ளார்.  இவர் விளையாடினால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கலாம். இவர் அணியில் இல்லாத நிலையில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள லுக் ரொங்கி விளையாடுவார். இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 119 ஓட்டங்களை பெற்றார். ஆனால் பின்னர் விளையாடவில்லை.

இதுவே நியூஸிலாந்து அணி. அஷ்வினின் பந்துவீச்சை இவர்கள் சமாளித்து விட்டால் வெற்றிகளை நோக்கி சொல்லாவிட்டாலும், சமநிலை முடிவை நோக்கி செல்ல முடியும்.  இந்தியாவின் மற்றைய பந்து வீச்சாளர்கள், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை எந்தளவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்பது கேள்வியே. அஷ்வின் வழங்கும் அழுத்தம் நிச்சசயம் துடுப்பாட்ட வீரர்கள் மீது அழுத்தத்தை  ஏற்படுத்தும். அந்த அழுத்தம் மற்றைய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பாக அமையும்.

இந்தியா அணி தமது துடுப்பாட்டம், அஷ்வினின் பந்து வீச்சு, விராத் கோலியின் துடுப்பாட்டம், ஆடுகளம் என்பனவற்றை அதிகம் நம்பியே களமிறங்குகிறது. ஆரம்ப ஜோடியில் லோகேஷ் ராகுல் நிச்சயம் இடம் பிடிப்பார். முரளி விஜய், ஷீகர் தவான் ஆகியோரில் ஒருவரே வாய்ப்பை பெறுவார்கள். வாய்ப்பை சரியாக பாவித்துக்கொள்பவர் அணியில் தொடர்வார். மூன்றாமிடத்தில் செட்டேஸ்வர் புஜாரா வாய்ப்பைப் பெறுவார். சரியாக வாய்பபை பாவிக்கா விட்டால், கோலி மூன்றாமிடத்தில் களமிறங்கி அவரை அணியால் வெளியேற்றும் வாய்ப்புகளும் உள்ளன. கோலி நான்காமிடம். ஐந்தாமிடம் அஜிங்கையா ரஹானே. இவர்களின் துடுப்பாட்டம், இடங்கள் பற்றியெல்லாம் எதுவும் யோசிக்கத் தேவையில்லை. இவர்கள் இருவருமே இந்திய அணியின் துடுப்பாட்ட முதுகெலும்புகள்.

அடுத்த இடம் இன்னமும் நிரந்தரமாகவில்லை. ஆனாலும் மேற்கிந்திய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரிலும் ஆரம்ப போட்டிகளிலும் வழங்கப்படும். வாய்ப்பை பாவித்தால் அணியில் இடம் தொடரும். அஷ்வின் சிறப்பாக பின் மத்திய வரிசையில் துடுப்பாடுவதனால், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இன்னுமொரு சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஷ்ராவை அணியில் இணைக்க முடியும். ரிதிமன் சஹா கடந்த தொடரில் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். இரவீந்திர ஜடேஜா அடுத்த இடம். ஆக இந்திய அணியில் எட்டு வீரர்கள் துடுப்பாட்ட வீரர்கள். இதுவே இவர்களின் பலம். ஆரம்பம் சிறப்பாக அமைந்தால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்ககையை நோக்கி நகர முடியும்.

பந்து வீச்சில் அஷ்வின் முன்னிலையில் உள்ளார். அண்மைக்கால இந்தியாவின் வெற்றி நாயகன் இவரே. இந்த தொடரிலும் இவரையே இந்திய அணி தங்கள் துடுப்பாட்டத்திலும் பார்க்க நம்பியுள்ளது. இரவீந்தர ஜடேஜா இரண்டாம் சுழற்பந்து வீச்சாளர். கடந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆனால் அமித் மிஷ்ராவிலும் பார்க்க இவரே இந்திய அணியின் முன்னிலை தெரிவு. வேகப்பந்துவீச்சில் மொஹமட் ஷமி நிச்சசயம் இடம் பிடிப்பார். அனுபவம் இஷாந்த் ஷர்மாவுக்கு அணியில் இடத்தை வழங்கும். உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ள போதும் சுழற்சி முறையில் வாய்ப்புகள் கிடைக்கலாம். யார் சிறப்பாக பந்து வீசுகின்றார்களோ அவர்களுக்கே அணியில் வாய்ப்பு தொடரும்.

இரண்டு அணிகளினதும் நிலைமைகள் இவ்வாறே உள்ளன. இரண்டு அணிகளும் சளைத்த அணிகள் அல்ல. ஆனால் முழுமை பெறாத இடங்களை எந்த அணி நிரப்புகின்றதோ அந்த அணி சிறப்பாக செயற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா அணி பலமான அணியாகவே தென்படுகின்றது. தொடரை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்கு இருந்தாலும் இலகுவாக வெற்றி பெற முடியாது. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூஸிலாந்து தொடரை இந்தியாவில் சமன் செய்ததில்லை. இம்முறையும் அந்த வாய்ப்பு அரிதாகவே உளள்து. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானங்கள் அதிகம் இந்தியாவில் உள்ளவை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் அவை சாதக தன்மையை வழங்கும். அதனை நியூஸிலாந்து அணி சரியாக பாவித்து பந்து வீசினால் நிச்சயம் இந்திய அணியை தடுமாற வைக்க முடியும்.

முதற் போட்டி - செப்டம்பர்  22 முதல் 26, காலை 9.30 தொடக்கம் 4.30, கான்பூர்

இரண்டாவது  போட்டி - செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 04, காலை 9.30 தொடக்கம் 4.30, கொல்கொத்தா 

மூன்றாவது போட்டி - ஒக்டோபர் 08 முதல் ஒக்டோபர் 12, காலை 9.30 தொடக்கம் 4.30, இந்தூர்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X